இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 8 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
சந்தேகநபர்கள் இன்று ஊர்காவற்துறை பதில் நீதவான் ஆர்.சபேசன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
இவர்களின் விடுதலையுடன் இலங்கை சிறைகளில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து இந்திய மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக யாழ். கடற்றொழில் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.
இந்த வருடம் ஆரம்பம் முதல் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 37 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.