மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு எதிராக தேசியவாத காங்கிரஸ், சிவசேனா மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் உச்சநீதிமன்றத்தை அவசரமாக அணுகியுள்ளன. மகாராஷ்டிராவில் நடைபெற்று வந்த குடியரசுத் தலைவர் ஆட்சி இன்று அதிகாலை திடீரென வாபஸ் பெறப்பட்டது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக ஆளுநரால் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.
துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் பொறுப்பேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 54 எம்எல்ஏக்களும் தங்களுக்கு ஆதரவாக, இருப்பதாக தேவேந்திர பட்னாவிஸ் அளித்த கடிதத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர் இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஒருசில அதிருப்தி எம்எல்ஏக்கள் மட்டுமே பாஜகவுக்கு ஆதரவு அளித்து உள்ளார்களே தவிர, சுமார் 50 எம்எல்ஏக்கள் சரத்பவாருக்கு ஆதரவாகத் தான் இருக்கிறார்கள் என்று இப்போது தகவல் வெளியாகி உள்ளது. இன்று மும்பையில் சரத் பவார் தலைமையில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தில் சுமார் 50 பேர் பங்கேற்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இன்று இரவோடு இரவாக, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தேவேந்திர பட்னாவிஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.