"நீங்களும் பாருங்க #11YearsOfVaaranamAayiram-க்குதான் என்கிட்ட பேசுறீங்க. இதனாலே `வாரணம் ஆயிரம்' எனக்கு ரொம்ப ஸ்பெஷல்தான்."
`துலா தட்டில் உன்னை வைத்து... நிகர் செய்ய பொன்னை வைத்தால்... துலாபாரம் தோற்காதோ பேரழகே...' என்ற கவிஞர் தாமரையின் பாடல் வரிகளைக் கேட்டவுடன் மனதில் வரக்கூடிய இருவர் `வாரணம் ஆயிரம்' கிருஷ்ணனும் மாலினியும். `ஹாய் மாலினி... ஐ எம் கிருஷ்ணன்... நான் இதைச் சொல்லியே ஆகணும். நீங்க அவ்வளவு அழகு' என்று கிருஷ்ணனோடு எங்களுக்கும் சொல்ல ஆசை. ஏனென்றால் மாலினியாக நடித்திருந்த சிம்ரன் அதில் அவ்வளவு அழகு.

கமர்ஷியல் படங்களென்றாலும் தனது க்யூட்னஸ் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருந்த சிம்ரனுக்கு `வாரணம் ஆயிரம்' படமும் மாலினி கதாபாத்திரமும் ஒரு நச் கம்பேக். இப்படம் வெளியாகி 11 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து ட்விட்டரில் அப்படத்தை கொண்டாடினார்கள் ரசிகர்கள். அப்படத்தில் நடித்த சிம்ரன்... ஸாரி மாலினியிடம் படம் குறித்துப் பேசினோம்.
"கடைசியா சூர்யாகூட `நேருக்கு நேர்' படத்துல நடிச்சேன். அதுக்கப்புறம் 11 வருடங்கள் கழிச்சு `வாரணம் ஆயிரம்' படத்துலதான் நடிச்சிருக்கேன்.
நீங்களும் பாருங்க #11YearsOfVaaranamAayiram-க்குதான் என்கிட்ட பேசுறீங்க. இதனாலே `வாரணம் ஆயிரம்' எனக்கு ரொம்ப ஸ்பெஷல்தான். இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மாதிரியே நானும் ரொம்ப ஆர்வமா இருந்தேன். அதே சமயம் என்னுடைய கதாபாத்திரம் ரசிகர்களை ஏமாத்தக் கூடாதுங்கிறதுலேயும் கவனமா இருந்தேன். நினைச்ச மாதிரியே `வாரணம் ஆயிரம்' படம் என்னுடைய கரியர்ல மறக்க முடியாத படமாகிடுச்சு. அதுமட்டுமல்ல, என்னுடைய பெஸ்ட் கம்பேக்காவும் இந்தப் படம் அமைஞ்சது. மாலினி, கிருஷ்ணனுக்கு மனைவி, சூர்யாவுக்கு அம்மா... இப்படி ரெண்டு லேயர்ஸ் என்னுடைய கதாபாத்திரத்துல இருக்கும். அதனால ரொம்ப என்ஜாய் பண்ணி நடிச்சேன்.

இந்தப் படத்துல மறக்க முடியாத அனுபவம் `முன் தினம் பார்த்தேனே' பாடல் படமாக்கப்பட்ட விதம்தான். சென்னையுடைய பல இடங்கள்ல ஷூட்டிங் நடந்தது. முக்கியமா, சென்னை பீச். வின்டேஜ் விஷுவல்ல அதைத் தியேட்டர்ல பார்க்கும்போது அவ்வளவு நிறைவாவும் அழகாவும் இருந்தது. ஹாரிஸுடைய இசையும் தாமரையோட வரிகளும் இந்தப் பாடலுக்கு புத்துணர்வைக் கொடுத்தது. நான் நடிச்ச படங்களுடைய டாப் 10 பாடல்கள்ல, `முன் தினம் பார்த்தேனே' பாடலுக்கு எப்பவுமே இடம் இருக்கும். இந்தப் படத்துல வொர்க் பண்ணது, ஸ்கூல் ரீ-யூனியனுக்குப் போயிட்டு வந்த மாதிரி ஜாலியாவும் எனர்ஜியாவும் இருந்தது.
இப்போ மாதவன்கூட `நம்பி விளைவு' படத்துல நடிச்சிருக்கேன். விக்ரம்கூட `துருவ நட்சத்திரம்' பண்ணியிருக்கேன். உங்களை மாதிரியே ரிலீஸுக்கு நானும் வெயிட்டிங். சூர்யா, விக்ரம், மாதவன்கூட நடிச்ச மாதிரி விஜய், அஜித்கூட மறுபடியும் நடிக்கணும். கண்டிப்பா அது ரசிகர்களுக்கும் மறக்க முடியாத விருந்தா இருக்கும்.

'இந்த இடத்துல டைரக்டர் கௌதம் மேனனைப் பத்தி கண்டிப்பா சொல்லியே ஆகணும். ஏன்னா, கௌதம் அவ்வளோ டேலன்ட்'னு அவர் ஸ்டைல்லதான் இதைச் சொல்லணும். அவர் இல்லேன்னா இந்தப் படமே இல்லை. அவருடைய எல்லாப் படங்களுமே எனக்குப் பிடிக்கும். கிரியேட்டிவிட்டி, ரொமான்ஸ்னு ரெண்டுலேயும் புகுந்து விளையாடுவார். அவர் படத்துலே என்னுடைய பங்கு இருந்தது எனக்குப் பெருமையா இருக்கு.