நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக என்சிஏஇஆர் எனப்படும் பொருளாதார ஆராய்ச்சி அமைப்பை சார்ந்த தேசிய கவுன்சில் மேற்கொண்ட ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
அனைத்து துறைகளிலும் காணப்படும் மந்த நிலையால், 2019-20 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.9 சதவீதமாக குறையக்கூடும் என்று இந்த அமைப்பு கணித்துள்ளது.
முன்னதாக, உலக வங்கி, இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவையும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைவாகத்தான் இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தன.
2018-19 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகபட்சமாக 8.1 சதவீதம் என்ற நிலையில் இருந்தது.
அதன்பிறகு தற்போது வரை இதில் வீழ்ச்சியே காணப்படுகிறது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவு பொருளாதார வளர்ச்சி விகிதம் முதல்முறையாக 5 சதவீதம் என்ற நிலையை எட்டியது.

என்சிஏஇஆர் அமைப்பின் தற்போதைய கணிப்பு உண்மையானால் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் மேலும் சரிவு ஏற்படும் என்பது தெளிவாகிறது.
2019-20 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டின் புள்ளிவிவரங்களை இந்த மாதத்தின் இறுதியில் அரசு வெளியிடவுள்ளது.
என்சிஏஇஆர் அமைப்பை சேர்ந்த மூத்த உறுப்பினரான போர்னாலி பண்டாரியிடம், எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி விகிதம் ஏன் குறைந்தது என்றும், இதனால் சாதாரண மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பது குறித்தும் பிபிசி செய்தியாளரான ஆதர்ஷ் ரத்தோர் பேசினார்.
அவர் கூறியது என்ன?
தேவையில் மிகப்பெரும் சரிவு
2019-20 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.9 சதவீதமாக குறையக்கூடும் என்று என்சிஏஇஆர் அமைப்பு கணித்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் நாட்டில் பல பொருட்களுக்கும் உள்ள தேவையின் சதவீதம் குறைந்ததே.
தனியார் மற்றும் உள்ளூர் ரீதியிலான தேவையின் அளவும் குறைந்துள்ளது. நுகர்வோர் சாதனங்களான தொலைக்காட்சி பெட்டிகள், குளிர்சாதன பெட்டி மற்றும் நுகர்வோர் சாதனங்கள் அல்லாத பொருட்கள் மற்றும் துணிமணிகள் தொடர்பான தேவையும் பெரிதும் குறைந்துள்ளது.
நுகர்வோர் சாதனங்கள் தொடர்பான தேவையில் கடந்த ஜூன் மாதம் முதல் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த செப்டம்பர் முதல் நுகர்வோர் சாதனங்கள் அல்லாத பொருட்களின் தேவையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

தாக்கம்
விவசாயிகள் பல ஆண்டுகளாக பல போராட்டங்களை அனுபவித்து வருகிறார்கள். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் மற்றும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜ்னா போன்ற பெரும் திட்டங்களை அரசு நடத்தி வருகிறது. கிராமப் பகுதிகளில் தேவையை அதிகரிக்க வேண்டும் என்பதே திட்டம்.
இத்திட்டங்களுக்கான அடிப்படை கட்டமைப்புகளை அரசாங்கம் செய்து வருகிறது. ஆனால், அரசிடம் இருந்து மக்களுக்கு பணம் செல்ல நேரம் எடுக்கிறது. இதனால், மக்கள் செலவு செய்வது தாமதமாகிறது.
மறுபக்கத்தில், முறைசார்ந்த துறையை பார்த்தால், வேலைக்கு செல்வபவர்கள் மீது இது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. வேலை இல்லாதவர்கள்தான் கவலைப்பட வேண்டும்.
படிப்பு முடிந்தவுடன் ஒவ்வொரு ஆண்டும் வேலை தேடும் இளைஞர்கள், தொழில்நுட்பம் மாறுவதால் பாதிக்கப்பட்டவர்கள், நிறுவனங்கள் மூடப்படுவதால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கும் இதனால் சிக்கல். வளர்ச்சி குறைவாக இருந்தால், வேலையை உருவாக்க முடியாது.
தேவையை அதிகரிக்க வேண்டும்
தொழில்முனைவோரை பெருக்க, அரசு கடன் கொடுத்து வருகிறது. ஆனால், குறுந் தொழில்களுக்கு (Micro enterprises) மிகக் குறைவாகவே கடனாக கிடைக்கிறது என்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. சிறிய மற்றும் நடுத்தர தொழில் வைத்திருப்பவர்களுக்கே பெரும்பாலான கடன்கள் கொடுக்கப்படுகிறது.
அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்தாலும், வெற்றிபெற முடியவில்லை. ஆண்டுக்கு ரூ. 1 கோடிக்கும் குறைவாக வணிகம் செய்கிறவையே குறுந் தொழில் அல்லது குறுந்தொழில் நிறுவனங்கள் என்று சொல்லப்படுகின்றன.
இத்தொழில்கள் பாதிக்கப்படும்போது, வேலைகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது. இதுவும் ஒரு சவாலாக இருக்கிறது.
உற்பத்தி இருந்தாலும், உற்பத்தி செய்த பொருட்களை வாங்க யாரேனும் இருக்க வேண்டும். நுகர்வோர் வாங்குவது குறைந்துள்ளதால், தேவையும் குறைந்திருக்கிறது. உற்பத்திக்கு கவனம் செலுத்தப்படுகிறதே தவிர, தேவையை அதிகரிக்க போதிய கவனம் செலுத்தப்படவில்லை. அதனால்தான் தற்போதைய பொருளாதார சூழலில் தேவையை அதிகரிப்பது முக்கியமாகிறது.
நன்றி பி.பி.சி.தமிழ்