728x90 AdSpace


  • Latest News

    செல்ஃபோன் இல்லாமல் 'செல்லங்களோடு' ஒரு மணி நேரம்: பெற்றோருக்கு அரசு கோரிக்கை...!



    ஐ.டி. தம்பதியான சுரேஷ்-காவியாவின் பத்து வயது மகன் ஷாஸ்வத் பெற்றோரிடம் ஒரு வாக்குறுதியை பெற்றிருக்கிறான். தனது பெற்றோர் செல்ஃபோன்களை விடுத்து தன்னுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்பதுதான் அது.
    நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினத்தன்று, தமிழகத்தில் பெற்றோர் மொபைல் போன் உள்ளிட்ட சாதனங்களை அணைத்துவிட்டு தங்களது குழந்தைகளோடு ஒரு மணிநேரம் செலவிடவேண்டும் என தமிழக அரசின் கல்வி அமைச்சகம் விழிப்புணர்வு செய்திகளை வெளியிட்டுள்ளது. பிரபலங்கள் பலரும் குழந்தைகளுக்காக பெற்றோர் ஒரு நாள் ஒரு மணி நேரம் செலவிடவேண்டும் என கோரும் வாசகங்கள் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
    இந்த அறிவிப்பு பள்ளியில் தனது நண்பர்கள் மத்தியில் பேசப்பட்டதாக கூறும் ஷாஸ்வத், தன் பெற்றோர் தனக்காக நவம்பர் 14ம் தேதி ஒரு மணிநேரம் செல்போன், டிவி என தொலைத்தொடர்பு சாதனங்களை விடுத்து, செலவிட வாக்குறுதி கொடுத்துள்ளார்கள் என்பதை பெருமையாக சொல்கிறான்.
    ''என் அம்மா, அப்பா ஒத்துக்கொண்டார்கள். வீட்டில் அப்பாவின் பழைய செல்போனில் நான் விளையாடுவேன். அம்மா, அப்பா 11 மணிக்குதான் தூங்கப் போவார்கள். அவர்கள் டிவி பார்க்கவேண்டும் என்றோ ஒய்வு வேண்டும் என சொல்லும்போது, நானும் செல்போனில் விளையாடுவேன். நவம்பர் 14 அப்படி செய்யப்போவதில்லை. நாங்கள் மூன்று பேரும் பேசப்போகிறோம்,'' என்கிறான் சிறுவன் ஷாஸ்வத்.
    அரசாங்கம் சொல்லும் ஒரு மணி நேரத்தை ஒரு தொடக்கமாக கொண்டு பெற்றோர் தினமும் தங்களது குழந்தைகளுக்காக, அவர்களுடன் தங்களது நேரத்தை செலவிடவேண்டும் என ஆசிரியர்கள் பலரும் வலியுறுத்துகின்றனர்.
    படித்த பெற்றோர்கூட தங்களது குழந்தைகளின் பாடத்திட்டத்தில் பெருவாரியான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதை அறியாமல் இருப்பதற்கு குழந்தைகளுடன் நேரம் செலவிடாமல் இருப்பதுதான் காரணம் என்கிறார் சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஆசிரியர் லலிதா.

    குழந்தை

    ''பெற்றோர்கள் சந்திப்பில் ஒருசிலர், பாடத்திட்டம் கடினமாக இருக்கிறது என்றோ, தன் குழந்தைகளுக்கு எல்லா வசதியும் செய்துகொடுத்தாலும், படிப்பதில்லை என்றோ எங்களிடம் புகார் சொல்வார்கள். குழந்தைகளிடம் கவனக்குறைபாடு இருப்பதற்கு முக்கிய காரணம் பெற்றோரின் அக்கறை இல்லாமை மற்றும் நவீன சாதனங்கள் மீதான ஈர்ப்பு. ஒரு அறையில் டிவி,செல்போனுடன் பெற்றோர் இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு ஒரு சில வீடுகளில் தனியாக செல்போன், டிவி கொடுத்துவிடுகிறார்கள் என்பதால் இருவரும் பேசிக்கொள்ளும் நேரம் குறைவாக இருக்கிறது. குழந்தைகள் பற்றி புரிதல் பெற்றோர்களுக்கு குறைவாக இருக்கிறது,''என்கிறார் ஆசிரியர் லலிதா.
    தமிழக அரசு வெளியிட்டுள்ள விழிப்புணர்வு செய்தியை நல்ல எண்ணத்தில் எடுத்துக்கொண்டு, தங்களது குழந்தைகளோடு பெற்றோர் நேரம் செலவிடவேண்டும் என்றும் குழந்தைகளுக்கு தங்களது குடும்பச் சூழல், எதிர்கால வாழ்க்கை மற்றும் பொருளாதார நிலையை பெற்றோர் எடுத்துச் சொல்லவேண்டும் என்றும் கூறுகிறார் ஆசிரியர் லலிதா.
    "சிறுவயதில் இருந்து செல்போன் அல்லது நவீன சாதனங்களின் துணையுடன் குழந்தைகளை சாப்பிடவைப்பது, தூங்கவைப்பது என்ற பழக்கத்தை பெற்றோர் ஊக்குவித்தால், குழந்தைகளுக்கு பேச்சுத் திறன் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது" என்கிறார் மனநல மருத்துவர் சிவபாலன்.



    தொழில்நுட்பத்துக்கு அடிமையாகும் குழந்தைகள் - பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

    ''ஆரோக்கியமான குழந்தைகள் இரண்டு அல்லது அதிகபட்சமாக மூன்று வயதில் பேசத் தொடங்கிவிடுவார்கள். சமீபத்தில் பல குழந்தைகளிடம் கேட்கும் திறன் மற்றும் அறிவு வளர்ச்சி சரியாக இருந்தால்கூட அவர்கள் பேசுவதற்கு மூன்று வயதிற்கும் மேல் ஆகிறது. இது போன்ற குழந்தைகளை ஆராய்ந்தால், அன்றாட வாழ்வில் பெற்றோர் அல்லது குழந்தைகள் மத்தியில் தொலைத்தொடர்பு சாதனங்கள் புழக்கம் அதிகம் இருக்கும்'' என்கிறார் அவர்.
    சிகிச்சைக்கு வரும் பெற்றோரிடம் வீட்டுக்கு வந்ததும், குழந்தைகளோடு நேரம் செலவிடுவது அவசியம் என்றும் நவீன சாதனங்களின் பயன்பாட்டை முறைப்படுத்த வேண்டும் என்றும் ஆலோசனை வழங்குவதாக கூறுகிறார் சிவபாலன்.
    ''செல்போன் உள்ளிட்ட கருவிகளை குழந்தைகள் அதிகம் பயன்படுத்தினால், மூளையில் அவர்களின் பேச்சுத்திறனுக்கான இடம் சுருங்கிப்போகும் என ஆய்வுகள் சொல்கின்றன. பெற்றோர்கள் அதிகம் கருவிகளுடன் நேரம் செலவிட்டால் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் பிணைப்பு குறைவாக இருக்கும். சாப்பிடும் போதும், படுக்கை அறையிலும் செல்போன் பேசவேண்டாம் என பெற்றோருக்கு பரிந்துரை செய்திருக்கிறேன்,''என்கிறார் சிவபாலன்.
    பல வீடுகளில் பெற்றோர்கள்,குழந்தைகள் என இருவரும் நவீன சாதனங்களுக்கு அடிமையாகி இருப்பதை சுட்டிக்காட்டும் குழந்தைகள் நல ஆர்வலர் ஆண்ட்ரூ நவம்பர் 14ம் தேதி ஒரு மணி நேரம் குழந்தைகளோடு செலவிடும்படி தமிழக அரசு விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபடுவது நல்ல தொடக்கமாக அமையும் என்கிறார்.
    பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு முகாம்களை நடத்தும் ஆண்ட்ரூ நவீன சாதனங்களை எதிரியாக பார்க்கவேண்டாம், அதனை சரியாக பயன்படுத்திகொள்ளவேண்டும், கருவிகளுக்கு நாம் அடிமையாக கூடாது என்பதில் பெற்றோர்கள் கவனமாக இருக்கவேண்டும் என்கிறார்.
    ''டிவி அல்லது போன் கருவிகள் மூலம் நன்மை உண்டு. அந்த கருவிகளை நம் பயன்பாட்டிற்காக வைத்துக்கொள்ளவேண்டும். அந்த கருவிகள் இல்லாவிட்டால்,ஒரு நாளை நகரத்தைமுடியாது என நிலையில் உள்ள பெற்றோர்கள் மாறவேண்டும். அந்த நாளின் தொடக்கம் நவம்பர் 14ஆக இருக்கும்,''என்கிறார்.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: செல்ஃபோன் இல்லாமல் 'செல்லங்களோடு' ஒரு மணி நேரம்: பெற்றோருக்கு அரசு கோரிக்கை...! Rating: 5 Reviewed By: STAR Networks Sri Lanka
    Scroll to Top