728x90 AdSpace


 • Latest News

  இந்திய பெண்கள் ஹாக்கி வெற்றிப் பயணத்தின் ரகசியம் என்ன? தயக்கத்தில் இருந்து தங்கத்தை நோக்கி...


  "பயப்பட வேண்டாம். பேசுங்கள்" என இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் கூறினார். புதிதாக நியமிக்கப்பட்ட பயிற்சியாளர் ஸ்ஜோர்ட் மரிஜின் பிப்ரவரி 2017ல் முதல் கட்டமாக நடத்திய சந்திப்பிலேயே ராணி இவ்வாறு கூறினார்.
  ஹாலாந்தில் இருந்து புதிதாக வந்திருந்த மரிஜின், தம்மிடம் ஏன் இந்த அணியில் இருக்கும் பெண்கள் பேச தயங்குகிறார்கள் என்ற காரணத்தை புரிந்து கொள்ள முடியாமல் இருந்தார்.
  இதே அணிதான் இரு நாட்களுக்கு முன்பு புவனேஷ்வரில் உள்ள கலிங்கா ஹாக்கி மைதானத்தில் நம்பிக்கையுடன் அற்புதமாக விளையாடி, ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்று இருக்கிறது.
  முதல் முதலாக இந்திய பெண்கள் ஹாக்கி அணி, 1980ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றது. அதன் பிறகு 36 ஆண்டுகளுக்கு பிறகு 2016 ரியோ ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றது.
  இந்திய மகளிர் ஹாக்கி
  அப்போது கடைசி இடத்தை பிடித்தாலும், கடந்த நான்கு ஆண்டுகளில் அந்த அணி நல்ல முன்னேற்றத்தை கண்டிருக்கிறது.
  2017ஆம் ஆண்டு ஆசியக் கோப்பையில் வெற்றி, 2018 உலகக் கோப்பையில் கால் இறுதி வரை வந்தது, மேலும் அதே ஆண்டு நடைபெற்ற இன்சியான் ஆசிய விளையாட்டுகளில் வெள்ளிப் பதக்கத்தை வென்றது என இந்த அணி பலரின் இதயங்களையும் வென்றது.
  கடந்த சனிக்கிழமை நடந்த விளையாட்டில், ஒற்றுமை, உழைப்பு மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்திய இந்திய அணி, அமெரிக்க அணியை தோற்கடித்து 2020 டோக்கியோ ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றது.
  முதல் கட்டத்தில் 5-1 என்று கணக்கைத் தொடங்கியது இந்தியா. ஆனால் வலிமையான ஆட்டத்தை அமெரிக்காவும் வெளிப்படுத்த 5-5 என்ற கணக்கில் ஆட்டம் சமனானது.
  சரியாக 48ஆவது நிமிடத்தில் கேப்டன் ராணி ராம்பால் அடித்த முக்கிய கோல், இந்திய அணி டோக்கியோவிற்கு செல்வதை உறுதிப்படுத்தியது.
  "நாங்கள் எங்களை நம்பினோம்" என்கிறார் ராணி.
  "நீங்கள் இன்று பார்த்தது ஒரு நாள், அல்லது ஒரு மாதத்தின் உழைப்பு அல்ல. பல ஆண்டு உழைப்பு இது. தற்போது வரிசையாக இரண்டாவது முறை, ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளோம். இதற்கு பின்னால் அந்த உழைப்பு இருக்கிறது. எந்த எதிரணியைப் பார்த்தாலும் எங்களுக்கு தற்போது பயமில்லை. நாங்கள் எங்களை நம்புகிறோம்" என்று ராணி கூறுகிறார்.

  இதன் தொடக்கம் என்ன?

  இந்த மாற்றம் எப்படி வந்தது என்பதை தெரிந்து கொள்ள, நாம் 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
  இந்த மகளிர் ஹாக்கி அணியுடன் ஆரம்பத்தில் நடந்த ஒரு சில சந்திப்புக் கூட்டங்களுக்கு பிறகு, பயிற்சியாளர் மரிஜினுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இவர்களிடம் திறமை இருந்தது, ஒழுக்கம் இருந்தது, உத்தரவுகளை சரியாக பின்பற்றினார்கள். ஆனால், தங்களது எண்ணங்களை வெளிப்படுத்த யாரும் முன்வரவில்லை.
  அவர்களுக்கு இடையே மொழித்தடங்கல் இருந்தது. அதோடு அதிகமாக நாம் ஏதேனும் தவறாக பேசிவிடுவோமோ என்ற அச்சம். மேலும், அவர்கள் வளர்க்கப்பட்ட விதம், இவர்களை பேச விடாமல் தடுத்தது.
  அவர்கள் செய்தது எல்லாம் உத்தரவுகளை கேட்டு, அவற்றை பின்பற்றுவது மட்டுமே. எந்த கேள்வியும் இருக்காது.
  அவர்களை பேச வைப்பது பயிற்சியாளர் மரிஜினுக்கு ஒரு சவாலாகவே இருந்தது. அணியின் கேப்டனான ராணி நல்ல அனுபவத்துடனும், நம்பிக்கையோடும் இருந்ததை பார்த்தார் மரிஜின்.
  இந்திய மகளிர் ஹாக்கிபடத்தின் காப்புரிமை
  24 வயதாகும் ராணி, தனது 14 வயதில் இருந்தே, இந்தியாவுக்காக விளையாடி வருவிதோடு, நவீன ஹாக்கி விளையாட்டின் தேவையை அவர் அறிந்து வைத்திருந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து, அணியை புதிய பயிற்சி முறைக்கு அறிமுகப்படுத்தினார்கள்.
  கட்டாயம் அணியில் இருப்பவர்கள் ஒருவருக்கு ஒருவர் பேச வேண்டும், மன நலத்தை மேம்படுத்த வகுப்புகள், அணியை ஒன்றாக்குவதற்கான நடவடிக்கைகள், ஒன்றாக அமர்ந்து இரவு உணவு உண்பது போன்றவை அவர்களுக்கு இடையே இருந்த இடைவெளியை குறைத்தது. அதோடு, நடனப் பயிற்சி வகுப்புகளும் அளிக்கப்பட்டன.
  இவர்களை ஒன்று சேர்ப்பது மிகவும் அவசியம் என ராணி கூறுகிறார். நடனமாடுவது நாங்கள் குழுவாக சேர்ந்து செய்யும் ஒரு வேடிக்கையான செயல்களில் ஒன்றாகும். பயிற்சியாளர்களையும் எங்களுடன் பணிபுரியும் வெளிநாட்டு பணியாளர்களையும் பாலிவுட் பாடல்களுக்கு நடனமாடச் செய்கிறோம், நம் அணியில் உள்ள பெண்கள் அவர்களுக்கு நடனமாட கற்றுதருகிறார்கள்.
  ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் முன்பு மிகவும் கூச்ச சுபாவம் உள்ள வீரர்களே இப்போது இந்த நடனங்களை வழிநடத்துகிறார்கள்.
  களத்திலும், களத்திற்கு அப்பாற்பட்டும் பெண்கள் தங்களை சுதந்திரமாக வெளிப்படுத்த பல மாதங்கள் ஆகின. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வரும் வீரர்களுக்கு மொழி மற்றும் கலாச்சார வேறுபாடுகள் ஒரு சவாலாக இருந்தன.
  மிசோராமை சேர்ந்த மிகவும் திறமையான லால்ரிம்சியாமி எங்களை விட ஹாக்கி களத்தில் சிறந்து விளங்கினர், ஆனால் இந்தி அல்லது ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை கூட அவருக்கு புரியவில்லை.
  ராணி விரைவாக ஒரு வழிகாட்டியின் பணியை செய்ய துவங்கினார். தேசிய முகாமின் இடமான பெங்களூருவில் உள்ள விளையாட்டு விடுதியில் லால்ரிம்சியாமியின் அறை துணையாக ராணி இருந்தார்.
  பகலில் ஹாக்கி விளையாட்டில் தன் திறமையை மேம்படுத்த ஒரு அணியின் கேப்டனாக ராணி உதவினார், மாலையில் ஹிந்தியும் கற்றுக்கொடுத்தார். இதனால் இந்த அணி படிப்படியாக வளர்வதை காணமுடிந்தது.
  இந்திய மகளிர் ஹாக்கிபடத்தின் காப்புரிமை

  இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு கிடைக்கும் அடையாளமும் , முக்கியத்துவமும் பெண்கள் அணிக்கு கிடைப்பதில்லை. மேலும் உலகக்கோப்பை ஒலிம்பிக் போன்ற முக்கிய போட்டிகளில் பெண்கள் அணி விளையாடுவது அவசியமாக உள்ளது.
  ''போட்டிகளில் வெற்றி பெறுவதை ஒரு பழக்கமாக மாற்ற வேண்டும். கடுமையான பயிற்சி, மற்றும் குறிக்கோளுடனும் நம்பிக்கையான மனநிலையுடனும் இருந்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும். கடந்த ஆண்டுகளில் எதிரிகளால் மிகவும் அழுத்தத்தில் இருந்தோம் , அனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த நிலையை மாற்றியுள்ளோம்'' என்கிறார் ராணி. பெரிய அரங்குகளில் விளையாடுவதும், சில போட்டிகளில் வெற்றி பெறுவதும் எங்களுக்கு நம்பிக்கை அளித்தது.
  நாங்கள் 2018 உலகக் கோப்பையின் காலிறுதிக்கு முன்னேறி அரையிறுதிக்கு தகுதி பெறவும் முயற்சித்தோம். மிக குறைவான புள்ளிகள் வித்தியாசத்தில் அரையிறுதிக்கு தகுதி பெற முடியவில்லை. இதுவே இந்த அணி நம்பிக்கையால் வளர காரணமானது, தற்போது வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு கிடைத்துள்ளது.

  கூட்டு முயற்சி..

  இந்தியா ஜப்பானில் நடந்த 2017 ஆசிய கோப்பையை வென்றது, அதனுடன், லண்டனில் நடந்த 2018 உலகக் கோப்பையில் ஒரு முக்கிய இடத்தையம் பெற்றது. எடுத்துகாட்டடாக ராணி தலைமையில் , கோல் கீப்பராக சவிதா புனியா விளையாடிய பல சந்தர்ப்பங்களில் சவிதா ஹீரோவாக உருப்பெறுவார். டிராக் ஃபிலிக்கர் குர்ஜித் கௌர் சிக்கல் என்றால் நாடுகிற ஆளாக இருக்கிறார். அதேபோல நவ்ஜோத் கவுர், வந்தனா கட்டாரியா, நவ்நீத் கவுர் மற்றும் லால்ரிம்சியாமி ஆகியோரும் வெற்றிகரமானவர்கள்.
  இந்திய மகளிர் ஹாக்கி

  எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர்கள்..

  பெரும்பாலும் ஹாக்கி அணியில் விளையாடும் பெண்கள் மிகவும் எளிமையான பின்னனியில் இருந்து வந்தவர்கள். கடுமையான உழைப்பு மற்றும் உறுதியுடன் செயல்பட்டு முனைப்பு உள்ளவர்கள்.
  பொருளாதார காரணங்களால் ராணியின் பெற்றோர் ஹாக்கிக்கு பதிலாக கல்வி கற்பதே சிறந்தது என விரும்பினார்கள். அவரது குடும்பத்தினரால் ஹாக்கி கிட் மற்றும் ஷுக்களை கூட வாங்க முடியவில்லை, ஆனால் அவரது திறமையாலும் விளையாட்டின் மீதான ஆர்வம் காரணமாகவும் ராணி தொடர்ந்து ஹாக்கி விளையாட்டில் ஈடுபட்டார்.
  அவரின் 13 வயதிலேயே ஜூனியர் இந்தியா முகாமில் இருந்து ராணிக்கு அழைப்பு வந்தது. ஒரு வருடத்திற்கு பிறகு 14 வயதிலேயே இந்திய பெண்கள் அணியில் சேர்ந்த முதல் இளம் பெண் இவர் தான். மிக விரைவாக பல சர்வதேச போட்டிகளில் விளையாடி , இன்று இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் முதுகெலும்பாக விளங்குகிறார். அவர் விளையாடிய 200க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகள் அவரின் திறமையையும் , உழைப்பையும் நிரூபிக்கும்.
  ராணியை போல, சிறுவயதில் கோல் கீப்பர் சவிதாவுக்கு ஹாக்கி விளையாட்டில் பெரிய ஆர்வம் இல்லை. ஆனால் ஹாக்கி வீரராக வேண்டும் என்று விரும்பிய தன் தாத்தா மஹிந்தர் சிங்கின் உந்துதல் காரணமாக இந்த விளையாட்டை கற்றுக்கொள்ள தொடர்ந்து பயிற்சி எடுத்தார். ஹரியாணா அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சவிதா, ''பஸ்சில் மிக கனமான கோல் கிட்டை எடுத்துச்செல்வதை விரும்பவில்லை'' .
  இந்திய மகளிர் ஹாக்கிபடத்தின் காப்புரிமை
  ''எனது கிட் மிகப் பெரியது, அது என்னை சோர்வடையச் செய்ததால் பொதுப் போக்குவரத்தில் அதை சுமந்து செல்வதற்கு நான் பயந்தேன்''. ஆனால் அதெல்லாம் ஆரம்ப நாட்களில்தான். சில நாட்களுக்கு பிறகு ஹாக்கி எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டாக மாறியது. ஒலிம்பிக் மற்றும் உலகக் கோப்பையில் விளையாடுவது சிறந்த அனுபவமாக இருந்தது, டோக்கியோ விளையாட்டுகளில் எங்களின் திறமையை காட்ட விரும்புகிறோம்" என்கிறார் சவிதா.
  குர்ஜித், தகுதி போட்டிகளில் முதல் இடங்களை பிடித்தவர். அவர் முதல் போட்டியிலேயே இரண்டு கோல்களை அடித்து தன் திறமையை நிரூபித்தவர். பார்க்க கடுமையானவராக தோன்றினாலும், மிகவும் நகைசுவை உணர்வு கொண்டவர்.
  குர்ஜித், அமிர்தசரஸுக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர், அவரது தந்தை டார்ன் தரனில் உள்ள ஒரு விளையாட்டு விடுதியில் அவரை சேர்க்கும்வரை, தினமும் 20 கி.மீ. பயணம் செய்து ஹாக்கி பயிற்சியில் ஈடுபடுவார்.
  நான் மிகவும் சிறிய கிராமத்தில் வசித்தவள், அங்கு எந்த விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறாது . எந்த வசதியும் கிடையாது. அந்த ஊரில் யாருக்கும் ஹாக்கி விளையாட்டு குறித்து புரியாது. என் ஊரில் இருந்து இந்திய ஹாக்கி அணியில் சேர்ந்து விளையாடிய முதல் பெண் வீரர் நான் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.'' என்று குர்ஜித் பெருமிதம் கொள்கிறார்.
  இவ்வாறு நம் இதயங்களை வெல்லும் பல கதைகள் இந்த அணியில் உள்ளன. சமீபத்தில் தன் தந்தையின் இறப்புக்கு பிறகு பல கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக லால்ரிம்சியமி போட்டிகளில் இருந்து விலகி உள்ளார். ஜூன் மாதம் ஜப்பானில் நடந்த எஃப்.ஐ.எச் தொடர் இறுதிப் போட்டியில் இந்தியா வென்றதில் இந்த இளைஞரின் அர்ப்பணிப்பு பல இதயங்களை வென்றது.
  மரிஜின் இது மிகவும் சிறப்பான அணி என்று கூறுகிறார். டச்சுக்காரரான இவர் '' ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுவதே கனவு, நிறங்களில் மிக அழகான நிறம் தங்கம் தான்''. இது முதல் படி தான். இது எளிதானதல்ல. ஆனால் எங்களுக்கு ஒரு பெரிய கனவு இருக்கிறது, இந்த பெண்களின் போராட்ட உணர்வு பெருமை அடையச் செய்கிறது" என்கிறார். இந்த பெண்களின் மாற்றம் மற்றும் பொறுப்பு முன்மாதிரியாக விளங்குகிறது என்றும் மரிஜின் கூறுகிறார்.
  • Blogger Comments
  • Facebook Comments
  Item Reviewed: இந்திய பெண்கள் ஹாக்கி வெற்றிப் பயணத்தின் ரகசியம் என்ன? தயக்கத்தில் இருந்து தங்கத்தை நோக்கி... Rating: 5 Reviewed By: Star Fm Lanka
  Scroll to Top