728x90 AdSpace


 • Latest News

  காஷ்மீர் பிரிக்கப்பட்டபின் அங்கு பாஜகவின் வளர்ச்சி எப்படி உள்ளது? பி.பி.சி.யின் பார்வையில்...  காஷ்மீர் முடக்கப்பட்டு 100 நாட்களைக் கடந்துவிட்ட பிறகும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பி.டி.பி.) அலுவலகம் இன்னும் மூடியே உள்ளது.
  ஸ்ரீநகரில் லால் செளக் பகுதியில் அடர்ந்த மரங்களின் நிழலில் இருக்கும் இந்த அலுவலகத்தின் வாயிலில் கம்பி சுருள்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
  அங்கே நிறுத்தப்பட்டுள்ள துணை ராணுவத்தினர் பிபிசி குழுவினர் அங்கு சென்றதை விரும்பவில்லை.
  "நீங்கள் பத்திரிகையாளரா'' என்று துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் கேட்டார். நாங்கள் யார் என்பதை உறுதிப்படுத்திய பிறகு, "நீங்கள் இங்கே வரக் கூடாது, இந்தக் கட்டடத்தை படம் எடுக்க வேண்டாம்'' என்று அவர் கூறினார். சிறிது நேரம் சமாதானப்படுத்திய பிறகு, இந்தக் கட்டுரைக்காக சில படங்களை எடுத்துக் கொள்ள எங்களை அனுமதித்தனர்.
  "கட்சியினர் அனைவரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் அலுவலகம் எப்படி இயங்க முடியும்,'' என்று பி.டி.பி.யின் செய்தித் தொடர்பாளர் தாஹிர் சயீத் கேள்வி எழுப்பினார்.
  ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் இந்திய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை இந்திய அரசு 2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்தது.
  அப்போதிருந்து காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து இணையம் முடக்கப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்து இயங்கவில்லை. பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
  தெருக்களில் அமைதி வழியிலான போராட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. அவர்கள் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள், கைது செய்யப்படுகிறார்கள் அல்லது விடுதலை ஆவதற்கு பின்னாட்களில் போராட்டத்தில் ஈடுபட மாட்டேன் என பத்திரத்தில் கையெழுத்திடுமாறு நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
  அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதுடன், மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என அதிகாரம் குறைந்த யூனியன் பிரதேசங்களாக இந்திய அரசு பிரித்தது.
  Kashmir
  "ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குப் பிறகு நடக்கும் நிகழ்வுகள் எல்லாமே ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் செயல்களாக உள்ளன. இதை நான் 'demon-crazy' என்றே கூறுவேன்," என்று சயீத் கூறினார்.
  தடுப்புக் காவலில் வைக்கப்படாத ஒரு சில அரசியல்வாதிகளில் அவரும் ஒருவர்.
  தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, மக்கள் மாநாட்டுக் கட்சி போன்ற ஒன்றுபட்ட இந்தியாவுக்கு ஆதரவான கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளும்கூட தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் அல்லது கைது செய்யப்பட்டுள்ளனர்.
  கட்சித் தொண்டர்களை சந்திக்கவோ அல்லது அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடவோ அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. காஷ்மீரில் பெரிய அளவில் செயல்பாடுகளைக் கொண்டிருக்கும் சமூக-மத அமைப்பான ஜமாத்-இ-இஸ்லாமியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
  இதற்கு மாறாக, இந்தியாவின் ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் மாநில அலுவலகம் ஸ்ரீநகரில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. கட்சியினரும் மற்றவர்களும் வந்து சென்று கொண்டிருக்கிறார்கள். அலுவலகத்துக்கு வெளியே வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
  ஜம்மு காஷ்மீர் பாஜகவின் பொதுச் செயலாளர் அசோக் கௌல் வந்திருந்தார். அவரை சந்திக்க மக்கள் காத்திருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பாஜக தொண்டர்களாக இருந்தனர்.
  "கடந்த சில ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரில் எங்கள் கட்சியை வளர்க்க அமைப்பு ரீதியில் நாங்கள் உழைத்துக் கொண்டிருந்தோம். இப்போது எங்களை நோக்கி மக்கள் வரத் தொடங்கியுள்ளனர். எங்களுடைய ஸ்ரீநகர் அலுவலகத்தில் இதை என்னால் காண முடிகிறது. நான் இங்கே எப்போது வந்தாலும், பாஜகவில் சேர விரும்பும் காஷ்மீரி மக்கள் வந்து கூட்டம் கூட்டமாக கட்சியில் இணைகிறார்கள்," என்று கௌல் கூறினார்.
  காஷ்மீரில் தனது பலத்தை அதிகரித்துக் கொள்ளும் பணிகளில் பாஜக தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்த நாட்டில் ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் வகையில் நிகழ்வுகள் இருப்பதாக பி.டி.பி. செய்தித் தொடர்பாளர் சயீத் கூறினார்.
  "நாட்டு நலனைவிட கட்சியின் நலனைத்தான் பாஜக பெரிதாக நினைப்பதாகத் தெரிகிறது. நாட்டு நலனில் அவர்கள் அக்கறை கொண்டிருந்தால் எந்த அரசியல் கட்சிக்கும் அல்லது அரசியல் செயல்பாடுகளுக்கும் தடை விதித்திருக்க மாட்டார்கள். பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சிகூட கூட்டம் நடத்த அனுமதிக்கப் படவில்லை. இது ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் செயல்,'' என்று அவர் கூறினார்.
  Kashmir
  1990களில் இருந்து காஷ்மீரில் சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜகவால் அங்கு ஓர் இடம் கூட பிடிக்க முடியவில்லை. ஆனால் இப்போது அடிமட்ட நிலையில் தொண்டர்களை உருவாக்க அந்தக் கட்சி முயற்சிக்கிறது.
  "2015ல் காஷ்மீரில் எங்களுக்கு 2.5 லட்சம் உறுப்பினர்கள் இருந்தனர். 2019 ஜூலை 6 ஆம் தேதியில் இருந்து மீண்டும் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கினோம். இணையம் செயல்பாட்டில் இருந்த நேரம் வரையில் ஆன்லைன் மூலம் 46,000 புதிய உறுப்பினர்கள் சேர்ந்தனர். இணையம் முடக்கப்பட்ட பிறகு, நேரடியாக உறுப்பினர் சேர்க்கை செய்யத் தொடங்கினோம். நேற்று எண்ணிக்கை தகவல்களை நாங்கள் சேகரித்தோம். நேரடியாக சுமார் 60,000 பேர் கட்சியில் சேர்ந்துள்ளனர். இதையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் மட்டும் 3.5 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்,'' என்று அசோக் கௌல் தெரிவித்தார்.
  உறுப்பினர் சேர்க்கை பணிகள் முடிந்துவிட்டன. இப்போது வாக்குச்சாவடி நிலையில் கட்சியின் கட்டமைப்புகளை உருவாக்க பாஜக முயற்சி மேற்கொண்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பூத் நிலையில் பாஜக கட்டமைப்பு உருவாக்குவது இதுவே முதல்முறை.
  "பாஜகவின் வாக்குச்சாவடி மட்டத்தில் தலைவரை தேர்வு செய்யும் தேர்தலில் இந்த 3.5 லட்சம் தொண்டர்களும் பங்கேற்பார்கள். 5000 வாக்குச் சாவடிகளுக்கும் இவ்வாறு தேர்தல் நடைபெறும். அதைத் தொடர்ந்து தொகுதி அளவிலான தலைவர், மாவட்ட அளவிலான தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 2019 டிசம்பர் இறுதிக்குள் அவற்றை முடிவு செய்துவிட வேண்டும் என்று நாங்கள் உத்தேசித்துள்ளோம்,'' என்றார் கௌல்.
  ரஷீதா மிர் என்ற பெண் பாஜகவில் செயற்குழு உறுப்பினராக உள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் பாஜகவில் இருக்கிறார். காஷ்மீரில் பாஜகவுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்று அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
  "அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, உள்ளூர் அளவில் மக்களை சமாதானப்படுத்த நாங்கள் சிரமங்களை எதிர்கொள்கிறோம். ஆனால் அது எந்த வகையில் பயன்தரும் என்று நாங்கள் விளக்கும்போது, மக்கள் அதைப் புரிந்து கொள்கிறார்கள்,'' என்று அவர் கூறினார்.
  எதிர்க்கட்சிகள் முடக்கப்பட்ட நிலையில், பாஜகவுக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்திருக்கிறதா என்று கேட்டதற்கு, "சந்தேகத்துக்கு உள்ளானவர்கள் யாராக இருந்தாலும் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்கள். ஆனால் காஷ்மீரில் நாங்கள் பலப்படுத்திக் கொள்ள எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பது உண்மைதான்," என்று அவர் பதில் அளித்தார்.
  Kashmir
  அடுத்த சில மாதங்களில் கட்சி கட்டமைப்பை பாஜக முறைப்படுத்திவிடும் நிலையில், ஜம்மு காஷ்மீரின் அந்தஸ்து பறிக்கப்பட்ட பிறகு எதிர்க்கட்சிகள், இன்னும் தங்கள் கட்சியை அமைப்பு ரீதியில் மாற்றி அமைக்காமல் உள்ளன.
  மூன்று முன்னாள் முதல்வர்கள், காஷ்மீரின் பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள், பாஜக தவிர மற்ற கட்சியினர் அனைவரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதியில் இருந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
  கட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகம் அமலில் இருக்கும் காலங்களில் எல்லாம் ஆளுங்கட்சியின் கைதான் மேலோங்கி இருக்கும் என்று காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறை உதவிப் பேராசிரியராக இருக்கும் அய்ஜாஸ் அஷ்ரப் வானி கூறுகிறார்.
  "அரசியல் போட்டி இல்லாமல் போனால், அது எந்த ஜனநாயகத்திற்கும் நல்லதாக இருக்காது. காஷ்மீரைப் பொருத்த வரையில், வலுவான போட்டிக்கு உகந்த ஜனநாயக சக்தி உருவாக நீங்கள் அனுமதிக்கவில்லை அல்லது கட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகம் என்ற வகையில்தான் அது இருக்கிறது. இதுபோன்ற சூழலில் பாஜக பலமாக வளரும். கடந்த காலத்திலும் காஷ்மீரில் இப்படி நடந்துள்ளது. முன்பு காங்கிரஸ் கட்சி செய்து கொண்டிருந்தது. இப்போது பாஜக செய்கிறது,'' என்று அவர் கூறினார்.
  "காஷ்மீரில் பாஜக அதிக பலம் மிகுந்ததாக மாறும். மற்ற பிராந்தியக் கட்சிகளின் அணுகுமுறைகள் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு என்ற காஷ்மீரின் அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டதாக உள்ளதே இதற்குக் காரணம். இப்போது அதற்கு வாய்ப்பு இல்லை. அரசியல் சட்டம் 370 நிரந்தரமானது என்று அரசியல் கட்சிகள் எப்போதும் உறுதி அளித்து வந்த நிலையில், தங்களுக்கு அவை துரோகம் இழைத்துவிட்டன என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. மீண்டும் 370வது பிரிவைக் கொண்டு வருவோம் என்று இப்போது அவர்கள் சொல்லத் தொடங்கினால், மக்கள் அதை ஏற்பார்கள் என நான் நினைக்கவில்லை,'' என்றும் அவர் கூறினார்.
  வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் இருந்து தேசிய மாநாட்டுக் கட்சி சார்பில் நாடாளுமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பவர் அக்பர் லோனே. காஷ்மீரில் இருந்து தெளிவான நபர் எவரும் பாஜகவில் சேர மாட்டார்கள் என்று அவர் கூறுகிறார். அவ்வாறு சேர்ந்திருப்பதாகக் கூறுவது பொய்யான தகவல் என்கிறார் அவர்.
  "எங்கள் கட்சியின் எதிர்காலம் நன்றாக உள்ளது. மக்கள் பாஜகவில் சேர்வதாக அவர்கள் கூறுகிறார்கள். அந்தக் கட்சியில் யார் சேர்ந்துள்ளனர்? முன்னாள் தீவிரவாதிகள் அல்லது புதிதாக கலகம் செய்யத் தொடங்கி இருப்பவர்கள் தான் அங்கு சேர்ந்துள்ளனர்,'' என்று அவர் கூறினார்.
  "லடாக்கிலும் கூட மக்கள் எந்தக் கட்சியிலும் சேரவில்லை. தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் தங்கள் கட்சிகளிலேயே நீடிக்கின்றனர். கார்கில் பகுதியில் மக்கள் ஜனநாயகக் கட்சியில் இருந்து சிலர் பாஜகவில் சேர்ந்துள்ளனர். ஆனால் லடாக்கில் பி.டி.பி.யின் செல்வாக்கு குறைவுதான். அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது'' என்றும் அவர் கூறினார்.
  ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பிரிக்கப்பட்ட நிலையில் உருவாக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தில், இந்திய அரசின் நடவடிக்கை பற்றி மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.
  Kashmir
  இந்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக கார்கிலில் போராட்டம் நடந்தபோதிலும், பி.டி.பி.யில் இருந்து ஐந்து முக்கிய தலைவர்கள் கார்கில் பகுதியில் பாஜகவில் இணைந்துள்ளனர்.
  கட்ச்சோ குல்ஜார் என்பவர் பி.டி.பி.யில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தவர்களில் ஒருவர். கார்கில் பகுதி பி.டி.பி. தலைவராக அவர் இருந்தார். பிரிவினைக்குப் பிறகு லடாக்கில் எல்லாமே மாறிவிட்டது என்று அவர் கூறினார்.
  "மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு கார்கில் பகுதியில் பி.டி.பி. தனது பலத்தை இழந்துவிட்டது. இப்போது லடாக் யூனியன் பிரதேசமாகிவிட்டது. காஷ்மீரை தலைமையிடமாகக் கொண்ட ஒரு கட்சி லடாக்கில் இருக்க முடியாது,'' என்று அவர் குறிப்பிட்டார்.
  "ஜம்மு காஷ்மீரை பிரிப்பதை எப்போதும் நாங்கள் எதிர்த்து வந்திருக்கிறோம். இப்போது லடாக் அல்லது காஷ்மீர் பகுதியில் யாருடைய ஆலோசனையையும் கேட்காமல் அது நடந்துவிட்டது. எனவே பாஜகவில் சேர்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழி கிடையாது. பி.டி.பி. தலைவர்கள் சுதந்திரமாக விடப்பட்டிருந்தாலும் கூட, லடாக்கில் அந்தக் கட்சியின் நிலைமை முடிவுக்கு வந்துவிட்டது,'' என்று அவர் கூறினார்.
  "ஆகஸ்ட் 5ஆம் தேதியில் இருந்து கார்கில் பகுதியில் பி.டி.பி. முழுக்க பலம் இழந்துவிட்டது. பாஜக பலம் பெற்றுள்ளது,'' என்று கார்கில் பகுதியைச் சேர்ந்த செய்தியாளர் முர்டஜா பஜ்லி தெரிவித்தார்.
  "சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் பாஜக சின்னத்தில் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் இரண்டு சுயேச்சை உறுப்பினர்களும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். முந்தைய சில தேர்தல்களுடன் ஒப்பிடும்போது, பாஜகவுக்கு இது நல்ல முன்னேற்றம். 370வது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டிருப்பது பாஜகவுக்கு ஏற்ற தருணமாக உள்ளது. அதன் பிறகுதான் ஹாஜி இனயத் அலி மற்றும் இதர பி.டி.பி. உறுப்பினர்கள் பாஜகவில் சேர்ந்தனர். எனவே கார்கில் பகுதியில் அரசியல் ஜனநாயகம் மெல்ல மெல்ல மாறிக் கொண்டிருக்கிறது. லே பகுதியில் ஏற்கெனவே மாற்றம் நடந்துவிட்டது,'' என்று அவர் கூறினார்.
  காஷ்மீர் அரசியல் தெளிவற்ற நிலையில் இருக்கிறது. யாராலும் எதிர்காலத்தை கணிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
  பி.பி.சி.தமிழ்
  • Blogger Comments
  • Facebook Comments
  Item Reviewed: காஷ்மீர் பிரிக்கப்பட்டபின் அங்கு பாஜகவின் வளர்ச்சி எப்படி உள்ளது? பி.பி.சி.யின் பார்வையில்... Rating: 5 Reviewed By: STAR FM
  Scroll to Top