அயோத்தி நிலத்தகராறு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அறிவியல் ஆதாரங்களுக்கு அப்பாற்பட்டதாக இருப்பதாக விமர்சிக்கிறார் வரலாற்று பேராசிரியர் கருணானந்தன். வரலாற்று ரீதியான இந்த வழக்கில் தொன்ம கதைகளை கொண்டு தீர்ப்பளித்ததை ஒப்புக்கொள்ளமுடியவில்லை என்கிறார் அவர்.
அவரது பேட்டி:
ஒரு வரலாற்று பேராசிரியராக அயோத்தி நிலத்தகராறு வழக்கின் தீர்ப்பை எப்படி பார்க்கிறீர்கள்?
இந்த தீர்ப்பு சில அச்சங்களையும், ஐயங்களையும் ஏற்படுத்தியுள்ளது. மசூதியில் அத்துமீறி நுழைந்தது தவறு, அங்கு சிலை வைத்தது தவறு, மசூதியை இடித்தது தவறு என எல்லாவற்றையும் கண்டித்துவிட்டு இறுதியாக நிலத்தை இந்துகளுக்கு என்றும் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் என்றும் கூறுவதை எங்களை போன்ற வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
ராமர் அங்கு பிறந்ததற்கான ஆதாரம் கிடைக்கவில்லை என்றும், அங்கு ராமர் கோயில் இருந்தது என்பதற்கான ஆதாரம் இல்லை என்பதையும் ஏற்றுக்கொள்கிறது. பின்னர் அந்த இடத்தில் அரசு ராமர் கோயில் கட்ட உத்தரவிடுகிறது. ஏன் மசூதி கட்டுவதற்கு ஆணை பிறப்பிக்கவில்லை? ஒரு மதச்சார்பற்ற அரசு ஒரு மதத்திற்கு சார்பாக கோயில் கட்டும் பணியை எவ்வாறு மேற்கொள்ளலாம்? அத்துமீறி செயல்பட்டவர்களுக்கு ஆதரவு கிடைத்திருக்கிறது. இந்த தீர்ப்பு சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்ற கருத்தியலுக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும்.
சுமார் 1,045 பக்கம் தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு பல்வேறு தொல்லியல் சான்றுகளை நம்பியுள்ளது என குறிப்பிடுகிறார்கள். மசூதிக்கு கீழே ஒரு கட்டுமானம் இருந்ததற்கான சான்றுகள் இருந்தது என்றும் பாபர் மசூதியில் 1857க்கு முன்பாக தொழுகை நடந்ததற்கான சான்றுகள் இல்லை என்றும் கூறுகிறார்கள்.