728x90 AdSpace


 • Latest News

  ரஜினிகாந்தும் கமல் ஹாசனும் அரசியலில் கைகோர்த்தால் அதிசயங்கள் நடக்குமா? பி.பி.சி.யின் பார்வையில்...!!


  கடந்த சில நாட்களில் நடிகர் ரஜினிகாந்த்தும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனும் பேசிய பேச்சுகள் அவர்கள் இருவரும் அரசியலில் இணைந்து செயல்படுவார்களா என்ற விவாதத்தை எழுப்பியிருக்கிறது. அப்படி இணைந்து செயல்பட்டாலும் வெற்றி கிடைக்குமா?
  கமல்ஹாசன் நடிக்க வந்து 60 ஆண்டுகள் ஆனதையொட்டி கடந்த நவம்பர் 17ஆம் தேதியன்று சென்னையில் திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்ற மிகப் பெரிய பாராட்டு விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசனைப் பாராட்டிப் பேசியதோடு, அரசியல் தொடர்பாகவும் சில கருத்துகளை முன்வைத்தார்.
  "2 ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக ஆவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். அவர் முதல்வரானவுடன் ஆட்சி இருபது நாட்கள் கூடத்தாங்காது; ஒரு மாதம் தாங்காது; ஐந்து மாதம்தான்; பிறகு கவிழ்ந்துவிடும் என்றெல்லாம் 99% பேர் சொன்னார்கள். அதிசயம் நடந்தது, அற்புதம் நடந்தது. ஆட்சி கவிழவில்லை. எல்லா தடைகளையும் தாண்டி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நேற்று அதிசயம், அற்புதம் நடந்தது. இன்றும் அதிசயம், அற்புதம் நடக்கிறது. நாளைக்கும் அதிசயம், அற்புதம் நடக்கும்" என்று குறிப்பிட்டார்.
  மேலும், "எங்கள் இருவருக்கும் வேறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால் அரசியலுக்கு வந்தால், எங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ள மாட்டோம்" என்றும் குறிப்பிட்டார். மற்றொரு தருணத்தில் இது குறித்து ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "மக்களுடைய நலனுக்காக கமலுடன் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம்" என கூறினார்.
  ரஜினிகாந்தின் இந்தக் கருத்துகள் குறித்து செய்தியாளர்கள் கமல்ஹாசனிடம் கேட்டபோது, "தமிழகத்தின் மேம்பாட்டுக்காக சேர்ந்து பயணிக்க வேண்டி வந்தால் நிச்சயம் பயணிப்போம். கொள்கைகள் குறித்து பிறகு பேசிக்கொள்ளலாம். அதற்கு இன்னும் நேரமிருக்கிறது'' என்றார்.
  rajnikanthபடத்தின் காப்புரிமை
  இந்தப் பேச்சுகள், பேட்டிகளையடுத்து, ரஜினி அரசியலுக்கு எப்போது வருவார், அப்படி அரசியலில் இறங்கும்போது அவரும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இணைந்து செயல்படுவார்களா என்ற விவாதங்கள் எழுந்தன. தமிழகத்தில் உள்ள தொலைக்காட்சி ஊடகங்களில் இது தொடர்பாக பல நாட்களுக்கு விவாதங்கள் நடத்தப்பட்டன.
  கமலும் ரஜினியும் இணைந்து செயல்படுவார்களா, அப்படி இணைந்து செயல்பட்டால் வெற்றி கிடைக்குமா என்ற கேள்விக்கான பதிலைத் தேடும் முன்பு பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
  ரஜினி அரசியலில் இறங்குவது குறித்த பேச்சுகள் எப்போது துவங்கின?
  ரஜினி அரசியலில் இறங்குவது குறித்து நீண்ட காலமாகவே பேசப்பட்டுவருகிறது. மணிரத்னம் இயக்கத்தில் ரஜினியும் மம்முட்டியும் இணைந்து நடித்திருந்த தளபதி படம் வெளியான தருணத்தில் ரஜினிகாந்த்தை வருங்கால முதல்வராக விளித்து திருச்சியில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
  இதையடுத்து, ரஜினி மன்றங்கள் குறித்த தகவல்கள் உளவுத் துறை மூலம் ஆளும் தரப்பால் சேகரிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இதையடுத்து, "அரசியலுக்கு வருகிறார் சூப்பர் ஸ்டார்" என ஒரு இதழில் கட்டுரை ஒன்று வெளியானது. இதுதான் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த செய்திகளின் துவக்கம்.
  இதற்குப் பிறகு கடந்த 28 ஆண்டுகளில் இதே பொருள்படும் தலைப்புடன், இதுபோல பல இதழ்கள், பல கவர் ஸ்டோரிகளை வெளியிட்டுவிட்டன. ஆனால் ரஜினி இந்த விவகாரத்தில் இன்னும் முழுமையான முடிவெடுக்கவில்லை.
  இதற்குப் பிறகு, ரஜினி நடந்த அண்ணாமலை படம் உருவாகிக் கொண்டிருந்தபோது அவரது கார் முதல்வர் ஜெயலலிதாவின் வருகைக்காக நிறுத்தப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இதையடுத்து அண்ணாமலை படத்தில் ரஜினி பேசிய வசனங்கள் முதல்வரை நோக்கிப் பேசியதாகவே சொல்லப்பட்டது.
  இதற்குப் பின் 1992ல் சினிமா துறையினர் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகப் பெரிய பாராட்டுவிழா ஒன்றை நடத்தினர். அந்த விழாவில் பங்கேற்ற ரஜினி, "நேற்று பஸ் கண்டக்டர், இன்று சூப்பர் ஸ்டார், நாளை என்னவோ.. அதே நேரத்தில் ஆண்டவா எந்தச் சூழ்நிலையிலும் என்னை அரசியலில் விட்டுடாதேன்னு வேண்டிக்கிறேன். ஏன்னா அரசியலுக்கு வந்தா நிம்மதி போய்டும்" என்று பேசினார்.
  ரஜினிபடத்தின் காப்புரிமை
  இவையெல்லாம் மறைமுகமாக ரஜினி அரசியல் குறித்துப் பேசியவை. 1996ல் தமிழக சட்டமன்றத் தேர்தல் வந்தபோதுதான் முதல் முறையாக நேரடியாக அரசியல் குறித்துப் பேசினார் ரஜினி.
  1996ல் அப்போதைய அ.தி.மு.க. ஆட்சியின் மீது கடும் அதிருப்தி இருந்த நிலையில், ரஜனிகாந்த் வெளிப்படையாக அரசியல் குறித்துப் பேசினார். "ஜெயலலிதா திரும்பவும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாத்த முடியாதுன்னு சொன்னேன். ஆனா, இனிமே ஆண்டவனே நெனச்சாலும் ஜெயலலிதாவைக் காப்பாத்த முடியாது" என்றார் ரஜினி.
  அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வியடைய, தி.மு.க. - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியை, ரஜினியின் குரலுக்கு கிடைத்த வெற்றியாக ரஜினி ரசிகர்கள் இப்போதுவரை கூறிவருகின்றனர்.
  இருந்தபோதும் 1998 நாடாளுமன்றத் தேர்தலில், ரஜினி மீண்டும் அதே கூட்டணிக்கு தனது ஆதரவை வழங்கினார். அந்தத் தேர்தலில் தி.மு.க. - த.மா.கா கூட்டணி படுதோல்வியடைந்தது. 2001ல் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வரானபோது, அவரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார் ரஜினிகாந்த்.
  இதற்குப் பிறகு, காவிரிப் பிரச்சனையின்போது ரஜினி பேசிய பேச்சுகள், நடவடிக்கைகள் வெகுவாக அரசியல் களத்தில் கவனிக்கப்பட்டன. தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் தருவதை எதிர்த்து கர்நாடக திரைக்கலைஞர்கள் ஊர்வலம் நடத்தியபோது, தமிழக திரையுலகினர் நெய்வேலியில் மறியல் நடத்த முடிவுசெய்தனர். ரஜினி இதில் பங்கேற்கவில்லை. இதற்குப் பிறகு காவிரி பிரச்சனை மேலும் தீவிரமடைந்தபோது, "என்னுடைய தலைமையில் ஒரு படை கர்நாடகம் நோக்கிச் செல்லும். எந்நேரமும் அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டுமென்று ரசிகர்களாகிய உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்றார் ரஜினி.
  மேலும், காவிரி தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டுமெனக் கோரி ஒரு நாள் உண்ணாவிரதமும் இருந்தார்.
  • Blogger Comments
  • Facebook Comments
  Item Reviewed: ரஜினிகாந்தும் கமல் ஹாசனும் அரசியலில் கைகோர்த்தால் அதிசயங்கள் நடக்குமா? பி.பி.சி.யின் பார்வையில்...!! Rating: 5 Reviewed By: STAR FM
  Scroll to Top