728x90 AdSpace


 • Latest News

  சபரிமலை வழக்கிலும் நம்பிக்கையே வெல்லுமா? அயோத்தி தீர்ப்பால் நிலவும் எதிர்பார்ப்பு...!


  சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அனுமதியளித்து கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மறு ஆய்வு மனு மீது இன்று (வியாழக்கிழமை) உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளிக்க உள்ளது.
  அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, சபரிமலை விவகாரத்திலும் "நம்பிக்கையே" வெல்லும் என்ற எதிர்பார்ப்பை பாரம்பரியத்தின் மீது பற்று கொண்டவர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
  கடந்த ஆண்டைப் போன்று இம்முறை மண்டல-மகரவிளக்கு நேரத்தில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க 10,000க்கும் மேற்பட்ட காவல்துறையினரை சன்னிதானம், சபரிமலை, பம்பா, நிலக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. சபரிமலை கோவிலில் இந்த பருவத்துக்கான முதல் பூஜை வரும் சனிக்கிழமை மாலை தொடங்கவுள்ளது.
  "அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 25ன் படி, அயோத்தி வழக்கில் நம்பிக்கை சார்ந்து கேள்வி எழும்போது அதில் தலையிடுவதற்கு நீதிமன்றத்திற்கு எவ்வித உரிமையும் இல்லை என்ற அடிப்படையில் அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதை போன்றே இந்த வழக்கிலும் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு இருக்கும் என்று எங்களது வழக்கறிஞர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்" என்று கூறுகிறார் 'ரெடி டு வெயிட்' எனும் அமைப்பை சேர்ந்த பத்மா பிள்ளை.
  சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதியன்று தீர்ப்பளித்திருந்தது.
  சபரிமலை கோயிலில் உள்ள கடவுள் ஐயப்பன் நித்திய பிரம்மச்சாரியாக போற்றப்பட்டு வந்தாலும், மாதவிடாயை காரணம் காட்டி பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது சம உரிமையை உறுதி செய்யும் அரசியல் சட்டத்தின் 14வது பிரிவை மீறுவதாக உள்ளதென அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி இருந்தது.
  இந்த தீர்ப்புக்கு எதிராக கேரளா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், தீர்ப்புக்கு எதிராக 49 மறு ஆய்வு மனுக்களும், நான்கு ரிட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

  அயோத்தி தீர்ப்பால் உருவான எதிர்பார்ப்பு சபரிமலை வழக்கிலும் நிலவுகிறதா?படத்தின் காப்புரிமை

  அதற்கிடையே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முதலாக கொண்டு, சபரிமலை கோயிலுக்குள் நுழைய முயன்ற பெண்கள் பலர் உடல்ரீதியிலான தாக்குதல்களுக்கு ஆளாக்கப்பட்டனர்.
  சபரிமலைக்கு சென்று வழிபட சென்ற சில பெண்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளித்தனர். ஆனால், வழியில் குவிந்திருந்த ஆண்கள் அவர்களை முன்னேறி செல்லவிடாமல் தடுத்தனர். இருப்பினும், பல்வேறு தடைகளையும் கடந்து, பிந்து அமினி மற்றும் கனகதுர்கா ஆகிய இரண்டு பெண்கள் கடந்த ஜனவரி 2ஆம் தேதி சபரிமலை கோயிலுக்குள் சென்று வழிபட்டனர்.
  இது குறித்து பிபிசியிடம் பேசிய செயற்பாட்டாளர் ராகுல் ஈஸ்வர், இந்த வழக்கு ஒருவிதத்தில் அயோத்தி வழக்கை ஒத்து காணப்படுவதாகவும், மற்றொரு கோணத்தில் வேறுபட்டு உள்ளதாகவும் கூறினார். "சட்டத்தை விட நம்பிக்கையே பெரிது என்று நாங்கள் கூறவில்லை. சட்டப்பிரிவு 25 மற்றும் 26இன்படி, எங்களது நம்பிக்கை மீதான அடிப்படை உரிமையை கொள்வதற்கு சட்டரீதியிலான பாதுகாப்பையே நாங்கள் எதிர்பார்க்கிறோம். நித்திய பிரம்மச்சாரியாக இருக்கும் ஐயப்பனின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றே நாங்கள் வலியுறுத்துகிறோம்" என்று அவர் கூறுகிறார்.
  தங்கள் தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு இருக்கும் என்று ஈஸ்வர் உறுதியாக நம்புகிறார். ஒருவேளை தீர்ப்பு எதிர்பார்த்ததை போன்று இல்லாத பட்சத்தில், "அதை திருத்த கோரி மீண்டும் நீதிமன்றத்தில் முறையிடுவதுடன், சபரிமலையில் மதரீதியிலான உரிமையை நிலைநாட்டும் வகையில், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, அவசர சட்டத்தை நிறைவேற்ற வழிவகை செய்யப்படும்."
  "ஜெகன்னாத் புரி உள்ளிட்ட இந்தியாவிலுள்ள சில கோயில்களுக்கு இதுபோன்ற மத நம்பிக்கை அடிப்படையிலான உரிமைகள் வழங்கப்பட்டு இருந்தன. அதே போன்றும், சட்டப்பிரிவு 24 மற்றும் 25இன்படியும் எங்களுக்கு உள்ள உரிமையை கொண்டு சபரிமலை கோயிலுக்குள் யார் யாரெல்லாம் நுழையலாம், நுழைய கூடாது என்ற விதியை உருவாக்கும் நிலையில் நாங்கள் இருக்கிறோம்" என்று அவர் கூறுகிறார்.
  "அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மிகுந்த கட்டுப்பாட்டுடன் ஏற்றுக்கொண்டதை போன்றே" இந்த வழக்கில் வழங்கப்படவுள்ள தீர்ப்பையும் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சபரிமலை கர்மா சமிதியின் பொதுச்செயலாளரான எஸ்.ஜே.ஆர். குமார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

  அயோத்தி தீர்ப்பால் உருவான எதிர்பார்ப்பு சபரிமலை வழக்கிலும் நிலவுகிறதா?படத்தின் காப்புரிமை

  "இந்த தீர்ப்புக்கு பிறகு, எவ்வித வன்முறையும் இருக்காது. போராட்டங்கள் ஏதாவது நடைபெற்றாலும், அது அமைதியான முறையில் இருக்கும். காவல்துறையினரின் மெத்தனத்தாலும், வன்முறை எண்ணம் கொண்டவர்கள் கோயிலுக்கு செல்லும் பாதைக்குள் நுழைய முற்பட்டதாலும் கடந்த முறை ஏற்பட்ட அசம்பாவிதம் எதுவும் இம்முறை இருக்காது" என்று பிபிசியிடம் பேசியபோது அவர் கூறினார்.
  தீர்ப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவை சட்டப்பூர்வமாக தீர்க்கப்படும் என்று ஈஸ்வர் மற்றும் குமார் ஆகிய இருவரும் கருத்துத் தெரிவித்தனர். ஆனால், சமூக ஊடகங்களில் வேறொரு கருத்தும் உள்ளது. இந்து ஆர்வலரும், கேரள இந்து ஹெல்ப்லைன் நிறுவனருமான பிரதீஷ் விஸ்வநாத் பெயரில் வெளியான ஒரு ட்வீட்டில், "லட்சக்கணக்கான பக்தர்கள் சாதகமான தீர்ப்புக்காக பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், கலியுகத்தில் மோசமானதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  "தீர்ப்பு என்னவாக இருந்தாலும் அனைவரும் அமைதி காக்க வேண்டுமென்று நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். மேலும், சபரிமலை விவகாரம் குறித்து ஏதாவது செய்வோம் என்று தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருந்த மத்திய அரசின் உதவியையும் நாங்கள் நாடுவோம்" என்று குமார் கூறுகிறார்.
  நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கேரளாவில் பாஜகவினால் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாததால், இம்முறை இந்த விவகாரம் தொடர்பாக எவ்வித பிரச்சனையும் எழாது என்று தான் கருதுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மக்களவை உறுப்பினர் எம்.பி. ராஜேஷ் கூறுகிறார்.

  அயோத்தி தீர்ப்பால் உருவான எதிர்பார்ப்பு சபரிமலை வழக்கிலும் நிலவுகிறதா?படத்தின் காப்புரிமை

  மறுமுனையில், கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேர்தலில், கேரளாவிலுள்ள 20 தொகுதிகளில் 19 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி, இந்த விவகாரத்தில் மென்மையான நிலைப்பாட்டை மேற்கொள்கிறது. "உச்சநீதிமன்றத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்பது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் மக்களின் நம்பிக்கையின் பக்கம் இருக்கிறோம். சபரிமலை பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், மத்திய அரசு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தற்சமயம் அனைவரும் அமைதிகாக்க வேண்டியது அவசியம்" என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறுகிறார்.
  "எங்கள் கட்சியும், அரசாங்கமும் (இடது ஜனநாயக முன்னணி) உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும், அதை அரசமைப்பு சட்டத்தின்படி, மாநில அரசு செயல்படுத்த வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக உள்ளோம்" என்று மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் மக்கவை உறுப்பினர் ராஜேஷ் தெரிவிக்கிறார்.

  @BBC_Tamil
  • Blogger Comments
  • Facebook Comments
  Item Reviewed: சபரிமலை வழக்கிலும் நம்பிக்கையே வெல்லுமா? அயோத்தி தீர்ப்பால் நிலவும் எதிர்பார்ப்பு...! Rating: 5 Reviewed By: STAR Networks Sri Lanka
  Scroll to Top