728x90 AdSpace


 • Latest News

  பாகிஸ்தானில் திடீரென ஒரு பகுதியில் பரவிய எச்.ஐ.வி: குழந்தைகளுக்கு பெருமளவு பாதிப்பு...!


  பாகிஸ்தானில் லர்கானா மாவட்டத்தில் ராட்டோடெரோ பகுதியில் ஊரக சுகாதார மையத்தில் ஏழு வயதான ஒரு ஆண் குழந்தைக்கு டாக்டர் முஸாபர் காங்ரோ மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டிருந்தார். சிறுவன் அமைதியாக, தந்தையின் மடியில் அமர்ந்திருந்தான். தன் உடல்நிலை பற்றி விசாரித்த தந்தையுடன் பேசிக் கொண்டிருந்த டாக்டரை பார்த்தபடி இருந்தான்.
  அவனுடைய கண்களைப் பரிசோதித்த டாக்டர், சில குறிப்புகளை காகிதத்தில் எழுதினார். பிறகு சட்டையை தூக்கச் சொன்னார். தன் கைகளை சானிட்டைசர் கொண்டு சுத்தம் செய்த பிறகு, சிறுவனின் வெற்று மார்பில் ஸ்டெத்தாஸ்கோப் வைத்து, நன்றாக இழுத்து மூச்சு விடும்படி கேட்டுக்கொண்டார்.
  ராட்டோடெரோ பகுதியில் எச்.ஐ.வி. பரவியதை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்படும் வரையில், அந்தப் பகுதியில் பிரபலமான குழந்தை மருத்துவர்களில் ஒருவராக டாக்டர் முஸாபர் காங்ரோ இருந்தார். இந்த எய்ட்ஸ் கிருமியால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகளாக இருந்தனர்.
  மருந்து சீட்டு எழுதிக் கொடுத்துவிட்டு, அடுத்த நோயாளியை உள்ளே வருமாறு டாக்டர் காங்ரோ அழைத்தார். அவருடைய அறைக்கு வெளியே ஒரு டஜன் பேருக்கும் அதிகமானவர்கள் காத்திருந்தனர்; பிறந்து சில வாரங்களே ஆன குழந்தைகளும் அதில் அடக்கம்.
  வேண்டுமென்றே குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. கிருமிகளை பரப்பினார் என்று ஆரம்பத்தில் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் பிறகு அந்தக் குற்றச்சாட்டு தவறு என நிரூபிக்கப்பட்டது. இருந்தபோதிலும், மருத்துவம் பார்ப்பதில் அலட்சியம் காட்டியதாக கிரிமினல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அதில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
  ``தங்களுடைய இயலாமையை மறைக்க வேண்டிய நெருக்கடியில் இருந்த சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு ஒரு பலியாடு தேவைப்பட்டது. அதற்கு என்னைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். நான் பிரபலமான மருத்துவராக இருப்பதால் ஏற்பட்ட பொறாமையால் சில டாக்டர்களும், பத்திரிகையாளர்களும் இதைப் பெரிதாக்கிவிட்டனர்'' என்று டாக்டர் காங்ரோ கூறினார்.
  தினமும் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வந்த அவருடைய தனியார் கிளினிக் இன்னும் சீல் வைக்கப்பட்ட நிலையில்தான் இருக்கிறது. குறைவான கட்டணம், வேகமான நிவாரணம் காரணமாக ராட்டோடெரோ மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு இவரிடம் சிகிச்சை பெறுவது தான் முதல் வாய்ப்பாக இருந்தது. இப்போது இந்த டாக்டர் நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கியுள்ளார்.
  ``கடந்த 10 ஆண்டுகளாக நான் சிகிச்சை அளித்து வருகிறேன். ஒருவருக்குப் பயன்படுத்திய சிரிஞ்சுகளை நான் வேறொருவருக்குப் பயன்படுத்தியதாக ஒரு குற்றச்சாட்டு கூட வந்தது கிடையாது. நான் எந்தத் தவறும் செய்யவில்லை'' என்று டாக்டர் காங்ரோ தெரிவித்தார்.
  ``இந்த வழக்கு கீழமை நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. ஓரிரு விசாரணைகளில் இந்த வழக்கு முடிவுக்கு வந்துவிடும் என்று நம்புகிறேன்'' என்றும் அவர் குறிப்பிட்டார்.
  அதிகரிக்கும் எச்.ஐ.வி பாதிப்பும், பாகிஸ்தான் சந்திக்கும் சவால்களும்
  காவலில் இருந்தபோது நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையின் போது, அந்த டாக்டருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அப்படியொரு பாதிப்பு இருப்பது பற்றி தனக்கே எதுவும் தெரிந்திருக்கவில்லை என்று அவர் கூறுகிறார்.
  நீண்ட நாட்களாக நோய் குணமாகாத ஒரு குழந்தையை கடந்த மே மாதம் பரிசோதித்த ராட்டோடெரோ பகுதியைச் சேர்ந்த வேறொரு டாக்டர், அந்தக் குழந்தைக்கு எச்.ஐ.வி. பரிசோதனை நடத்துமாறு கேட்டுக் கொண்டதை அடுத்து இந்தப் பிரச்சினை வெளிச்சத்துக்கு வந்தது. நாட்டில் மிகப் பெரிய எச்.ஐ.வி. பாதிப்பு பற்றிய தகவலை வெளிப்படுத்துவதாக அந்தப் பரிசோதனையின் முடிவு அமைந்திருந்தது. அரசு மற்றும் தொடர்புடைய இதர அமைப்புகள் உஷாராயின. விரிவான பரிசோதனை நடத்தியதில் 1200க்கும் மேற்பட்டவர்களுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் சுமார் 900 குழந்தைகளும் அடங்குவர். குடும்பத்தினருக்கு இந்தப் பாதிப்பு இல்லாத நிலையில் முதன்முறையாக இவர்களுக்குப் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
  டாக்டர் காங்ரோவின் கிளினிக் உள்ள இடத்தில் இருந்து சில கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள சுபானா கான் கிராமத்தில் 32 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுடைய குடும்பத்தினரில் யாருக்கும் இந்தப் பாதிப்பு இல்லை. கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் கோபமும், கவலையும் கொண்டனர்.
  யுனிசெப் உதவியுடன் ராட்டோடெரோ கிராமத்தில் எச்.ஐ.வி. சிகிச்சை மையத்தை அரசு தொடங்கியுள்ளது. ஆனால் குழந்தைகளின் குறைபாட்டைக் கண்டறிந்து அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் பெற்றோர்கள் சிரமப்படுகின்றனர். ``என் குழந்தையின் எடையைப் பார்த்து, வைட்டமின் மருந்துகள் தரும்படி கேட்டுக் கொண்டேன்'' என்று ஒரு தாயார் கூறினார். ``நாங்கள் மருந்து மட்டுமே எழுதித் தருவோம், மருந்துகளை நீங்களாக வெளியில் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள்'' என்று இன்னொரு பெண் விரக்தியுடன் கூறினார்.
  ``நூறு ரூபாய் விலையிலான மருந்துகளை அரசால் தர முடியாது என்றால், அரசிடம் இருந்து நாங்கள் வேறு எதை எதிர்பார்க்க முடியும்'' என்று அவர் கேள்வி எழுப்பினார்.
  பாதிப்புக்கு ஆளான பெரும்பாலான குழந்தைகளுக்கு ஊட்டச்தத்துக் குறைபாடு உள்ளது, எடை குறைவாக உள்ளனர். எச்.ஐ.வி. மருந்துகளை சிகிச்சை மையத்தில் அரசு இலவசமாக அளிக்கிறது. சர்வதேச ஆதரவு நிதியில் இருந்து இந்த மருந்துகள் அளிக்கப்படுகின்றன. இருந்தபோதிலும், பெரும்பாலான பெற்றோர்கள் குறைந்த வருவாய்ப் பிரிவினராக உள்ளதால், எச்.ஐ.வி.யைத் தொடர்ந்து ஏற்படும் இதர தொற்று நோய்களுக்கான மருந்துகளை வெளியில் வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
  ஆனால் ராட்டோடெரோ பகுதி பெற்றோருக்கு, எச்.ஐ.வி. பாதிப்பு என்பது அவமானகரமான நிகழ்வாகவும், மனத் துயரை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. ``எங்கள் குழந்தையின் வாழ்க்கை இது. எதிர்காலத்தில் எப்படி இதை சமாளித்து வாழ்வார்கள். மக்கள் அவர்களை வெறுப்பார்கள்'' என்று அதே பெண்மணி கூறினார்.
  குழந்தைகள் மட்டுமின்றி, பெற்றோர்களும் கூட கிராமத்தில் ஒதுக்கப்படுகின்றனர் என்றார் அவர். எச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளான குழந்தைகளுடன் மற்ற குழந்தைகள் விளையாடுவது இல்லை. பள்ளிக்கூடத்துக்கு இந்தக் குழந்தைகள் வராத வகையில் நிர்வாகத்தினர் நடந்து கொள்கின்றனர்.
  கடந்த ஜூலை மாதம் வெளியான ஐ.நா. அறிக்கையின்படி, எச்.ஐ.வி. பாதிப்பு அதிகமாக உள்ள 11 நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானும் இடம் பெற்றுள்ளது. எச்.ஐ.வி. பாதிப்பு உள்ளவர்களில் பாதிக்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே இதுபற்றி தெரியும் என்ற நிலை உள்ள ஐந்து நாடுகளின் பட்டியலிலும் பாகிஸ்தான் உள்ளது.
  எச்.ஐ.வி. பாதிப்பு பற்றி தெரிய வந்த பிறகு, அங்கு சென்ற முதல் டாக்டர் பாத்திமா மிர் என்பவர் தான். குழந்தைகளுக்கான வைரல் தொற்று நோய் சிகிச்சை நிபுணரான அவர் கராச்சியில் ஆகா கான் பல்கலைக்கழக மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.
  ``நிறைய சவால்கள் உள்ளன. பரிசோதனை செய்வதே சவாலாக உள்ளது. பரிசோதனை செய்ய வேண்டிய அனைவருக்கும், சோதனை செய்வதற்கான பணம் எங்களிடம் இல்லை. சிகிச்சை அளிப்பதும் சவாலாக உள்ளது. பெரியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதுடன் ஒப்பிடும் போது, குழந்தைகளுக்கு சிகிச்சை தருவது கடினமாக உள்ளது'' என்று அவர் விவரித்தார்.
  ``மருந்துகள் அதிக விலை கொண்டவை. சர்வதேச நிதி அமைப்பு உதவி மூலம் இவற்றை பாகிஸ்தான் இலவசமாகப் பெறுகிறது'' என்றும் டாக்டர் பாத்திமா குறிப்பிட்டார்.
  இருந்தபோதிலும், ராட்டோடெரோ பகுதியில் ஏற்பட்ட எச்.ஐ.வி. பாதிப்பு, பாகிஸ்தானை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது. ஊசிகளை திரும்பத் திரும்ப பயன்படுத்தியது மற்றும் தொற்று நோய் கட்டுப்பாட்டுக்கு போதிய நடவடிக்கைகள் எடுக்காதது ஆகிய காரணங்களால் தான் இந்தப் பாதிப்பு ஏற்பட்டதாக அரசின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கு முறையான ஏற்பாடுகள் இல்லாதது, பதிவு செய்யாத ரத்த வங்கிகள் செயல்படுவது, போலி டாக்டர்கள் ஆகிய பிரச்சினைகள் இதை மேலும் தீவிரப்படுத்தி உள்ளன.
  அதிகரிக்கும் எச்.ஐ.வி பாதிப்பும், பாகிஸ்தான் சந்திக்கும் சவால்களும்
  பாகிஸ்தானில் தொடர்ந்து எச்.ஐ.வி. அதிகரித்து வருவதாக பாகிஸ்தானுக்கான ஐ.நா. எய்ட்ஸ் பிரிவு இயக்குநர் மரியா எலீனா போர்ரோமியோ தெரிவித்தார். சொல்லப்போனால் ஆசியாவில் எச்.ஐ.வி. பாதிப்பு வேகமாக அதிகரிக்கும் நாடுகளில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தில் உள்ளது என்கிறார் அவர்.
  2010 முதல் 2018 வரையில் எச்.ஐ.வி. பாதிப்பு 57 சதவீதம் அதிகரித்துள்ளது. 2018 இறுதியில், சிகிச்சை பெற வேண்டியவர்களில் 10 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வரும் நிலை இருந்தது என்று அவர் கூறினார்.
  இந்த நோய் குறித்த அணுகுமுறையை பாகிஸ்தான் அரசு மாற்றிக் கொள்ளும் வகையில், ராட்டோடெரோ தாக்கம் இருக்கும் என்று மரியா எலீனா போர்ரோமியோ நம்பிக்கை தெரிவித்தார்.
  ``அரசுக்கும் மற்ற அமைப்புகளுக்கும் எச்.ஐ.வி. எய்ட்ஸ் பற்றி முன்னுரிமை இல்லை. அதாவது இது முக்கியத்துவப் பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.''
  ``எச்.ஐ.வி. பற்றிய கலந்துரையாடல், திட்டமிடல், நிகழ்ச்சிகள் நடத்துதல் மற்றும் இதற்கான நிதி ஒதுக்கீடு கூட குறைந்தபட்ச அளவுக்கு தான் உள்ளது.''
  இருந்தபோதிலும், ராட்டோடெரோ பாதிப்பைத் தொடர்ந்து எச்.ஐ.வி. பிரச்சினையை கையாள அதிகமான செயல்பாடு காணப்படுகிறது, அதிக உழைப்பு காணப்படுகிறது, அதிக நேரம் செலவிடப்படுகிறது, கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறது என்று ஐ.நா. எய்ட்ஸ் பாகிஸ்தான் பிரிவு இயக்குநர் கருதுகிறார்.
  ஒரு தீர்வு ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொற்றுநோய் கட்டுப்பாட்டு நடைமுறைகளை அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது என்று சிந்து மாகாண சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அஜ்ரா பெச்சுஹோ தெரிவித்துள்ளார்.
  ``பதிவு செய்யாமல் செயல்படும் ரத்த வங்கிகள், உரிய பரிசோதனை செய்யாமல், நோயாளிகளுக்கு செலுத்துவதற்கு ரத்தத்தை அனுப்புவதால், ரத்த வங்கிகளை கண்காணிப்பதில் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்'' என்று அவர் கூறினார்.
  அதிகரிக்கும் எச்.ஐ.வி பாதிப்பும், பாகிஸ்தான் சந்திக்கும் சவால்களும்
  ``மக்கள் மத்தியில் உள்ள போலி மருத்துவர்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கிறோம். பயன்படுத்தியதும் லாக் ஆகிக் கொள்ளும் சிரிஞ்சுகளைப் பயன்படுத்துகிறோம். எனவே ஒருவருக்குப் பயன்படுத்திய சிரிஞ்சை இன்னொருவருக்குப் பயன்படுத்த முடியாது.''
  தானே லாக் ஆகும் சிரிஞ்சுகள், ஒரு முறை பயன்படுத்தியதும் சிதைந்துவிடும் என்பதால், மறுபடி உபயோகிக்க முடியாது.

  ஊசிபோடும் கலாசாரம்

  பாதுகாப்பான ஊசி போடும் நடைமுறை கொள்கையை பாகிஸ்தான் உருவாக்கியுள்ளது. உலக அளவில் பாகிஸ்தானில் தான் மக்கள் அதிக அளவில் ஊசி போட்டுக் கொள்கிறார்கள் என்றும், அதில் 95 சதவீத ஊசிகள் தேவையில்லாமல் போடப் படுகின்றன என்றும் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமரின் சுகாதாரத் துறைக்கான சிறப்பு உதவியாளர் ஜாபர் மிர்ஜா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
  ``நாட்டில் ரத்தத்தின் மூலம் பரவும் ஹெப்படைட்டிஸ் சி, எச்.ஐ.வி./எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவுவதற்கு முக்கிய காரணமாக இது இருக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு சிறந்த முறையில் தீர்வு காண நாங்கள் நடவடிக்கைகள் எடுக்கப் போகிறோம்'' என அவர் பதிவிட்டிருந்தார்.
  டாக்டர் பாத்திமா மிர் இதை ஒப்புக்கொள்கிறார். ``இது நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகிவிட்டது. நம் குழந்தைகளுக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டாலும், டாக்டரிடம் சென்று குழந்தைக்கு ஊசி போடுமாறு கேட்கிறோம். நம்முடைய பழக்கம் தான் நம் குழந்தைகளுக்கு ஆபத்தை உருவாக்குகிறது'' என்று அவர் கூறுகிறார்.
  தானே சிதைந்துவிடும் சிரிஞ்சு கொள்கையை அரசு உருவாக்கிவிட்டது. அடுத்த சில மாதங்களில் நாடு முழுக்க அது அமலுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு பெரிய அளவில் எய்ட்ஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட நிகழ்வாக ராட்டோடெரோ சம்பவம் உள்ளது. பெருமளவிலான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தான் இதை முதன்மையானதாக ஆக்கிவிட்டது.
  ஆனால் பெரியதாக உள்ள பஞ்சாப் மாகாணத்தில் தான் எச்.ஐ.வி. பாதிப்பு அதிகமாக உள்ளது. எச்.ஐ.வி. பாதித்த நோயாளிகள் அங்கு தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். ஆனால் மூன்றாம் பாலினத்தவர்கள், பாலியல் தொழிலாளர்கள், ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கல் போன்ற அதிக ஆபத்துள்ள பிரிவினரிடம் தான் இந்தப் பாதிப்பு அதிகம் காணப்படுகிறது.
  எச்.ஐ.வி./எய்ட்ஸ் குறித்த சமூக எதிர் கண்ணோட்டம் மிக வலுவாக அங்கு உள்ளது. வெவ்வேறு என்.ஜி.ஓ.க்களின் உதவியுடன் இந்தப் பிரிவினர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பாதுகாப்பான பாலியல் தொடர்புகள் வைத்துக் கொள்ள வழிகாட்டவும் அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
  திருமண உறவை மீறிய பாலியல் தொடர்பும், ஓரினச் சேர்க்கையும் பாகிஸ்தானில் சட்டவிரோதச் செயல்களாகக் கருதப்படுகின்றன. அதனால் இந்த என்.ஜி.ஓ.க்கள் தீவிரமாக செயல்பட முடியவில்லை. அதிக ஆபத்து உள்ள சமூகப் பிரிவினரை தொடர்பு கொள்வதில் அந்த அமைப்புகளுக்குச் சிரமம் உள்ளது.
  அதிகரிக்கும் எச்.ஐ.வி பாதிப்பும், பாகிஸ்தான் சந்திக்கும் சவால்களும்
  இந்த நோய் குறித்த சமூகப் புறக்கணிப்புக்கு, நோய் பாதிப்பு வாய்ப்புள்ள பிரிவினர் அஞ்சுகின்றனர்.
  பாகிஸ்தானில் எச்.ஐ.வி. / எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதில் இது மிகப் பெரிய தடைகளில் ஒன்றாக உள்ளது என்று நிபுணர்கள் நம்புகின்றனர். எச்.ஐ.வி. பாதிப்பு உள்ளதாகக் கண்டறியப்படுபவர்கள், அரசில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர். அவர்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப் படுகிறது. ஆனால் தங்களுக்கு நோய் பாதிப்பு இருப்பதை மற்றவர்கள் ``அறிந்து கொள்வார்கள்'' என்ற அச்சம் காரணமாக பெரும்பாலானவர்கள் சிகிச்சையைத் தொடர்வதில்லை என்று மரியா எலீனா கூறுகிறார்.
  இந்த நோய் பற்றிய புறக்கணிப்பு உணர்வை உடைப்பதில், ராட்டோடெரோ பகுதி இளம் வயது நோயாளிகள் பங்காற்ற முடியும் என்று டாக்டர் பாத்திமா மிர் நம்புகிறார்.
  ``ஒரு விஷயத்தைப் பற்றி மவுனம் சாதிப்பதால், அது இல்லை என்றாகிவிடாது. அது இன்னும் பெரியதாக, பலம் கூடியதாக திரும்பி வரும்'' என்று அவர் எச்சரிக்கிறார்.
  கடந்த காலத்தில் எச்.ஐ.வி. பாதிப்புகள் கண்டறியப்பட்ட போது, உரிய முறையில் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதை, ராட்டோடெரோ சம்பவங்கள் காட்டுகின்றன என்றும் டாக்டர் பாத்திமா கூறுகிறார்.
  ``எனவே இப்போது நீடித்த பயன் தரக் கூடியதாக, உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாக உள்ளது. இல்லாவிட்டால், அடுத்த முறை நோய் பரவும்போது இன்னும் பெரியதாக இருக்கலாம். ஒருவேளை கட்டுப்படுத்த முடியாத வகையிலும் இருக்கலாம்'' என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
  BBC_TAMIL
  • Blogger Comments
  • Facebook Comments
  Item Reviewed: பாகிஸ்தானில் திடீரென ஒரு பகுதியில் பரவிய எச்.ஐ.வி: குழந்தைகளுக்கு பெருமளவு பாதிப்பு...! Rating: 5 Reviewed By: STAR FM
  Scroll to Top