யாழ். போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு...!
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது.

யாழ். போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டொக்டர் சி. யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

இன்னும் இரண்டு வாரங்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் மாத்திரமே கைவசம் உள்ளதாகவும் இதனால் தற்காலிகமாக சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமக்கு கிடைத்துள்ள மருந்து வகைகளை சிக்கனமாக உபயோகிப்பதாகவும் புற்றுநோய் சிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மயக்க மருந்து, சத்திரசிகிச்சையில் அதிகமாகத் தேவைப்படும் Betadine, Saline உட்பட 75 மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக யாழ். வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்கான பட்டியலொன்றை தயாரித்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அத்தியாவசிய மருந்துப்பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக உதவிகளை வழங்க முன்வருமாறு அரச, அரச சார்பற்ற நிறுவனங்களிடமும் வௌிநாடுகளிடமும் அவர் உதவி கோரியுள்ளார்.

About Star FM Lanka

சுடச் சுடச் செய்திகளை முந்திக் கொண்டு உடனுக்குடன் வழங்குகின்றோம் "Star Radio Network Sri Lanka " www.starfm.lk, starfmsrilanka@gmail.com.

0 Comments :

Post a Comment