17 வயதான மெக் ரதர்போர்ட், உலகை தனியாக விமானத்தில் சுற்றிவந்த மிக இளம் விமானி எனும் சாதனையைப் படைத்துள்ளார்.
பெல்ஜிய, பிரித்தானியரான மெக் ரதர் போர்ட். சிறிய விமானமொன்றில் 5 மாதங்களில் உலகை சுற்றிவந்துள்ளார்.
இப்பயணத்தை கடந்த மார்ச் 23 ஆம் திகதி பல்கேரியாவிலிருந்து மெக் ரதர்போர்ட் ஆரம்பித்தார். நேற்றுமுன்தினம் (24) பல்கேரியாவின் சோபியா நகரை அவர் வந்தடைதன் மூலம் தனது பயணத்தை பூர்த்தி செய்தார்.

இப்பயணத்தின்போது 5 கண்டங்களைச் சேர்ந்த 52 நாடுகளுக்கு ஊடாக அவர் பயணம் செய்தார்.
கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்கள் இச்சாதனைக்காக வகுத்த விதிகளின்படி, இப்பயணத்தின்போது பூமத்திய ரேகையை அவர் இரு தடவைகள் கடந்தார்.
ஸ்லோவாக்கியாவின் ஷார்க் ஏரோ நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட ஷார்க் அல்ட்ரா லைட் விமானத்தை மெக் பயன்படுத்தினார்.
தனியாக உலகை விமானத்தில் சுற்றிவந்த உலகின் மிக இளம் விமானி என கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்கள் அவரை அங்கீகரித்துள்ளனர்.
மெக் ரதர்போர்ட்டுக்கு முன்னர் பிரிட்டனைச் சேர்ந்த ட்ராவிஸ் லட்லோவ், கடந்த வருடம் 18 வயதில் தனியாக உலகை சுற்றிவந்த மிக இளம் விமானி என்ற சாதனைக்குரியவராக விளங்கினார்.
அதேவேளை, தனியாக உலகை சுற்றிவந்த மிக இளம் பெண் எனும் சாதனையை கடந்த ஜனவரி மாதம் 19 ஆவது வயதில் ஸாரா ரதர்போர்ட் படைத்திருந்தார். மெக் ரதர்போர்ட்டின் மூத்த சகோதரிதான் ஸாரா ரதர் போர்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸாரா, மெக் ஆகியோரின் தந்தை சாம் ரதர்போர்ட் பிரிட்டனைச் சேர்ந்த தொழிற்சார் விமானி ஆவார். இவர்களின் தாய் பெல்ஜியத்தைச் சேர்ந்த பியட்ரிஸ் டி ஸ்மெட், பொழுதுபோக்கு விமானியும் சட்டத்தரணியும் ஆவார்.
2020 ஆம் ஆண்டு தனது 15 வயதில் விமானி அனுமதிப்பத்திரத்தை மெக் ரதர்போர்ட் பெற்றுக்கொண்டார். அப்போது உலகின் மிக இளம் விமானியாக அவர் விளங்கியமை குறிப்பிடத்தக்கது.
உலகை தனியாக சுற்றும் பயணத்தின்போதே தனது 17 ஆவது பிறந்த தினத்தை மெக் ரதர்போர்ட் கொண்டாடினார்.
'தமது சமூகத்துக்கோ ஏன் உலகுக்கோ மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வியக்கத்தக்க செயல்களை செய்த இளையோரை இப்பயணத்தின்போது சந்திப்பதற்கு நான் விரும்புகிறேன்' என தனது பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் மெக் ரதர்போர்ட் தெரிவித்திருந்தார்.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
0 Comments