Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

75வது சுதந்திர தின விழா: புதுச்சேரி தியாகச்சுவரில் 'சாவர்க்கர் ' பெயர் - உள்ளூரில் எதிர்ப்பு வலுப்பது ஏன்? BBC யின் பார்வையில்...


"இந்திய சரித்திரத்தில் இடம்பெற்ற சாவர்க்கர் பெயர் தியாக பெருஞ்சுவரில் இருக்கும். அதற்கு எத்தனை எதிர்ப்பு வந்தாலும் கவலைப்பட மாட்டோம். எதிர்ப்பு தெரிவிப்பவர்களால் இந்திய சுதந்திரத்தில் சாவர்க்கரின் பங்கு இல்லை என்று கூற முடியுமா?" என்று தெரிவித்திருக்கிறார் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்.

நாட்டின் 75வது சுதந்திர ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்தும் விடுதலை போராட்ட வீரர்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக புதுச்சேரி அரசு பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடல் அருகே நிறுவப்பட்டுள்ள தியாகச் சுவரில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்கள் பதிக்கப்பட்டு வருகின்றன.

அதில் சாவர்க்கர், வீரமங்கை வேலு நாச்சியார் ஆகியோரின் பெயர் பலகைகளை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதித்தார்.

நாடு முழுவதும் ஒரு அரசு சாரா அமைப்பு சார்பில் 75 இடங்களில் தியாகப் பெருஞ்சுவர்கள் நிறுவப்பட்டு வருகின்றன. அதன் முதல் சுவர் புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ளது.

சாவர்க்கர் பெயரை பதிக்க எதிர்ப்பு

இந்த நிலையில், "சுதந்திர போராட்டத்திற்கு எந்த பங்களிப்பும் அளிக்காத சாவர்க்கர் பெயரை தியாகச் சுவரில் பதிக்கக்கூடாது," என பல்வேறு சமூக அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக கருத்து தெரிவித்த தமிழிசை, "இந்திய சுதந்திரத்திற்காகப் போராடியவர் சவர்க்கர், அந்தமான் சிறைச்சாலையில் சில அடிகள் மட்டுமே இருந்த சிறையில் அவர் அடைக்கப்பட்டார். அங்கே ஆங்கிலேயர்கள் எந்த அளவிற்கு அவரை கொடுமை செய்தார்கள் என்பது தெரியும். அவருக்கு கொடுக்கப்படும் சாப்பாடு பாத்திரத்தைக் கூட கழுவாமல் கொடுத்திருக்கின்றனர். இயற்கை உபாதைகளை கூட கழிக்க முடியாமல் அந்த சின்ன அறையிலேயே அவர் துன்புறுத்தலை எதிர்கொண்டார். அவர் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டார் என்பது மறுக்க முடியாத உண்மை, அது சரித்திர பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அவர் சிறையிலுள்ள இடத்தை பார்த்த பிறகு வந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்,," என்றார்.

சாவர்க்கர் உருவப்படம் எரிப்பு



புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் வகையில் சாவர்க்கர் எதிர்ப்பு குழுவினர் நகரில் போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையே, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் வகையில் சாவர்க்கர் எதிர்ப்பு குழுவினர் நகரில் போராட்டம் நடத்தினர். சாவர்க்கர், துணை நிலை ஆளுநர் தமிழிசை, சட்டப்பேரவை தலைவர் செல்வம் ஆகியோரின் உருவ படங்களை அவர்கள் தீயிட்டுக் கொளுத்தி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்வர் நாராயணசாமியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "ஒரு பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் துணைநிலை ஆளுநர் தமிழிசை. அவருடைய தந்தை காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், அவரது குடும்பத்தினர் சுதந்திர போராட்ட தியாகிகளாக இருந்துள்ளனர். ஆனால் சாவர்க்கரை சுதந்திர போராட்ட தியாகி என ஏற்கும் தமிழிசையின் கருத்து எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது," என்று தெரிவித்தார்.

"சாவர்க்கரை தியாகி என்று கூறி அவரது பெயரைப் பதிப்பிப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. குறிப்பாக சாவர்க்கருக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கக் காரணம் உள்ளது. சாவர்க்கர் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றுள்ளார், அதில் மாற்றுக்கருத்து இல்லை. அவர் 1913 முதல் 1924ஆம் ஆண்டு வரை அந்தமான் செல்லுலார் சிறையிலிருந்தார். அந்த சமயத்தில் ஆங்கிலேய அரசுக்கு 7 மன்னிப்பு கடிதங்களை அவர் எழுதிக் கொடுத்துள்ளார். கடைசி மன்னிப்பு கடிதத்தை 1924இல் அவர் எழுதினார். அதில் அவர், நீங்கள் என்னை விடுதலை செய்தால் நான் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குச் சேவகனாக இருப்பேன். எந்தவிதமான அரசியலிலும் தலையிட மாட்டேன். நான் உங்களுக்கு உண்மை விசுவாசியாக இருப்பேன் என்று குறிப்பிட்டிருக்கிறார், என்று நாராயணசாமி கூறினார்.

"அந்த கடிதத்தைப் பரிசீலனை செய்த பிரிட்டிஷ் அரசாங்கம், 1924இல் இரண்டு நிபந்தனைகளை வைத்தது. அதில், ஒன்று அவரது சொந்த மாவட்டமான மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரத்தினகிரியில் இருந்து வெளிவரக் கூடாது என்பது. இரண்டாவது நிபந்தனை, ஐந்து ஆண்டுகளுக்கு அரசியலில் தலையிடக்கூடாது என்பது. இந்த நிபந்தனைகளை சாவர்க்கர் ஏற்றுக் கொண்டார். மறைமுகமாக பிரிட்டிஷ் அரசாங்கத்தை அவர் மறைமுகமாக எதிர்த்து இருக்கிறார். ஆனால் அவர் தியாகம் செய்யவில்லை," என்று நாராயணசாமி கூறினார்.

"குறிப்பாக பகத் சிங்கை ஆங்கிலேயர் கைது செய்து பஞ்சாப் சிறையில் அடைந்தபோது, அவரை விடுதலை போராட்ட வீரர் இல்லை, போர் கைதி என ஆங்கிலேயர் கூறினர். நீங்கள் என்ன சொன்னாலும், நாட்டின் சுதந்திரத்திற்காகத் தான் தொடர்ந்து போராடுவேன் என்னை யாரும் தடுக்க முடியாது என்று பகத்சிங் கூறினார். என்னைத் தூக்கிலிட்டாலும், ராணுவம் மூலம் சுட்டாலும் எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று அவர் ஆங்கிலேயருக்கு கடிதம் மூலமாகவும் தெரிவித்தார்."

பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் சரணாகதி அடைந்தவர்



வே. நாராயணசாமி, புதுச்சேரி முன்னாள் முதல்வர்

"இப்படி இருக்கின்ற பலருடன் ஒப்பிட்டு பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு விசுவாசியாக, சேவகனாக எந்த அரசியலும் தலையிடாமல் இருப்பேன் என்று கூறிய சாவர்க்கரை எப்படி தியாகி என்று ஏற்க முடியும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

"சாவர்க்கரை தியாகி பட்டியலில் சேர்ப்பது சரித்திர பூர்வமாக ஏற்க முடியாத ஒன்று. சாவர்க்கர் தன்னை விடுதலை செய்யக்கோரி பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் சரணாகதி அடைந்தவர். ஆகவே அவரை தியாகியாக எந்த காலத்திலும் ஏற்க முடியாது," என்று நாராயணசாமி தெரிவித்தார்.

தமிழிசை நிலைப்பாடு

சாவர்க்கர் பெயர், தியாக பெருஞ்சுவரில் இடம் பெறுவதற்கு நாராயணசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்தும், சாவர்க்கர் பெயர்த் தியாக பெருஞ்சுவரில் இடம் பெறுவதற்கான முக்கியதுவம் குறித்தும் அறிய புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் பிபிசி தமிழ் கேட்டது.

"முதலில் சாவர்க்கர் சுதந்திர போராட்ட வீரர் என்பதில் எந்த மாற்றுக் கருத்து கிடையாது. தற்போது எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் யாராக இருந்தாலும், சுதந்திர போராட்டத்தில் அவருடைய பங்கு இல்லை என்று கூற சொல்லுங்கள். அதாவது அவரது வாழ்வில் நடந்த ஒன்றைச் சொல்லி அவரை மறுக்கிறார்கள். அவர் எதற்காக அந்தமான் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்டார்? அவரை ஏன் ஆங்கிலேயர்கள் மிகவும் ஆபத்தான சிறைவாசி என்று முத்திரை குத்தினர்? இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக இருந்ததால் தான் அவருக்கு அந்தப் பெயர் வந்தது," என்று தமிழிசை கூறினார்.

"சாவர்க்கரை பற்றி நன்கு படித்த பிறகே அவரை சுதந்திரப் போராட்ட வீரர் என்று ஒப்புக் கொள்கிறோம். புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமியாலும் மற்றவர்களாலும் ஒப்புக் கொள்ளப்படுவோர்தான் சுதந்திர போராட்ட வீரர்களாக கருதப்பட வேண்டும் என்பதில்லை. அவர்களுடைய சரித்திரம் எப்போதே எழுதப்பட்டுவிட்டது. சாவர்க்கருடயை தேச பற்றிலோ அவர் கொண்ட தேசபக்தியிலோ தேசத்துக்காக அவர் சிறை சென்றதிலோ எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை," என்றார் தமிழிசை.

சாவர்க்கர் பெயரின்றி சுதந்திர சரித்திரத்தை எழுத முடியாது. சுதந்திரம் வேண்டாம் என்று சொன்னவர்களையும், சுதந்திரம் பெற்ற நாளை கருப்பு தினம் என்று சொன்னவர்களையும் சிலர் கொண்டாடி வருகின்றனர் என்றும் தமிழிசை கூறினார்.



மேலும், "நாராயணசாமி சொன்னாலும் யார் சொன்னாலும் சாவர்க்கர் சுதந்திர போராட்ட வீரர் தான். ஆயிரம் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களைப் பதிக்கும் போது சாவர்க்கர் பெயர் இல்லாமல் சுதந்திரத்தின் சரித்திரத்தை எழுத முடியாது.

மேலும் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர் கற்கள் எதாவது விடுபட்டு இருப்பதாகத் தெரிவித்தால் அவர்களையும் தியாக சுவரில் வைக்கிறோம்.

இந்திய சரித்திரத்தில் இடம்பெற்ற சாவர்க்கர் பெயர்த் தியாக பெருஞ்சுவரில் இருக்கும். அதற்கு எத்தனை எதிர்ப்பு வந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படப் போவது கிடையாது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றி எனக்கு யாரும் பாடம் சொல்ல வேண்டாம். ஏனென்றால் சுதந்திர போராட்ட வீரர்களை நான் படித்திருக்கிறேன். தேசிய ரத்தம் தான் என் உடம்பிலும் ஓடுகிறது. எனக்கு நிச்சயமாக தேசியத்தை மதித்த சாவர்க்கருடைய தேசப்பற்றில் எந்தவித சந்தேகமும் கிடையாது," என்றார் தமிழிசை.

சுதந்திரத்தில் சாவர்க்கர் பங்கு இல்லையா?

ஆக்கபூர்வமான நிகழ்வுகள் நிறைய நடைபெற்ற வரும் சூழலில் இந்த விவகாரம் தேவையற்ற அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறது என்றும் தமிழிசை குற்றம்சாட்டினார்.

"பல கோடி பேர் சிந்திய ரத்தத்தின் மூலம் கிடைத்த இந்திய சுதந்திர தினத்தின் 75ஆம் ஆண்டை நாம் கொண்டாடுகிறோம். இந்த நேரத்தில் அதற்கு எதிராக குரல் கொடுக்காமல் அனைவரும் இதை கொண்டாடுங்கள்," என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

நன்றி...
BBC தமிழ்

Post a Comment

0 Comments