Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

உத்திக பிரேமரத்ன எம்.பி. ஜப்பான் விஜயம்; முக்கிய அமைச்சர்களுடன் சந்திப்பு...!

அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தற்போது கடந்த ஜூலை 31 முதல் ஓகஸ்ட் 11 வரை ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக, இலங்கைக்கான ஜப்பானிலுள்ள (டோக்கியோ) தூதரகம் அறிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன ஜப்பானில் தங்கியிருக்கும் காலத்தில், இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதுடன், முதலீட்டு வாய்ப்புகள், விவசாயத் துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் ஆரம்ப கல்வி ஆகியவற்றில் கூட்டுத் திட்டங்களை மேம்படுத்தும் நோக்கில், அந்நாட்டு அரசாங்கத்தின் பல முக்கிய பிரமுகர்களைச் சந்திக்கவுள்ளார்.

2022 ஓகஸ்ட் மாதம் 01ஆந் திகதி, ஜப்பானின் சுற்றாடல் அமைச்சர் சுயோஷி யமகுச்சியை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் பிரேமரத்ன, இலங்கைக்கான ஜப்பானின் அபிவிருத்தி உதவிகளைப் பாராட்டுவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார்.

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளின் குடையின் கீழ், கழிவு மீள்சுழற்சியில் தொழில்துறை ஆலைகளை நிறுவுதல் மற்றும் மீழ்சுழற்சி செய்ய முடியாத கழிவுகளை புதுப்பிக்கத்தக்க ஆற்றலாக மாற்றுதல் போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல் ஆகியன குறித்து பாராளுமன்ற உறுப்பினர் பிரேமரத்ன, பரிசீலிப்பதற்காக ஜப்பானுக்கு அழைப்பு விடுத்தார்.

இலங்கையின் அனுராதபுரத்தில் ஏற்றுமதி சார்ந்த உர உற்பத்தியின் சாத்தியக்கூறுகளை விளக்கிய அவர், இந்தத் துறையில் முதலீடுகளை மேற்கொள்வதனைப் பரிசீலிக்குமாறு ஜப்பானை வரவேற்றார்.

டோக்கியோவில் தங்கியிருந்த போது, பாராளுமன்ற உறுப்பினர் பிரேமரத்ன, தாராளவாத ஜனநாயகக் கட்சியின் வெளியுறவுத் துறையின் பதில் பணிப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற பிரதி அமைச்சருமான ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் சபை உறுப்பினர் சடோஷி புஜிமாருவைச் சந்தித்தார்.

அநுராதபுர மாவட்டத்தில் முன்பள்ளிக் கல்வி, கற்பித்தல் முறைகள் மற்றும் வசதிகளை மேம்படுத்தி ஜப்பானின் முன்பள்ளிக் கல்வி முறையைப் போன்றதொரு நிலையை எட்டுவதற்கு ஜப்பானின் உதவியை பாராளுமன்ற உறுப்பினர் பிரேமரத்ன நாடினார்.

உயர்மட்டக் கூட்டங்களை ஒருங்கிணைத்த, பிராந்திய மறுமலர்ச்சி, ஒழுங்குமுறை சீர்திருத்தங்களுக்கான முன்னாள் அமைச்சர் கோசோ யமமோடோவும் இச் சந்திப்பில் கலந்து கொண்டார். ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பொறுப்பதிகாரி சேசத் தாம்புகல, பாராளுமன்ற உறுப்பினர் பிரேமரத்னவுடன் சந்திப்புக்களின் போது கலந்துகொண்டார்.

டோக்கியோவிலுள்ள இலங்கைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆறு இலங்கை - ஜப்பான் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் 2022 ஓகஸ்ட் 01ஆம் திகதி தூதரக வளாகத்தில் கலந்துரையாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விலும் பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் பிரேமரத்ன ஜப்பானின் வெளிவிவகார அமைச்சரை 2022 ஓகஸ்ட் 10ஆம் திகதி சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜப்பானில் உள்ள ஃபுகுவோகா மாகாணத்தில் உள்ள கிட்டா-கியூ நகரத்திற்கான தனது விஜயத்தின் போது, பாராளுமன்ற உறுப்பினர் பிரேமரத்ன பல பிராந்திய மேயர்களையும் அரசாங்க அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.

Post a Comment

0 Comments