Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியை மலினப்படுத்தும் வகையில் அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை முறையற்ற வகையில் பயன்படுத்துகிறது - பேராசிரியர் ஜி.எல் பீரிஸ்


பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக நீக்கி,தேசிய பாதுகாப்பு நிமித்தம் நடைமுறைக்கு பொருத்தமான சட்டம் உருவாக்கப்படும் வரை நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் எக்காரணிகளுக்காகவும் பயன்படுத்தப்படமாட்டாது என முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் அனுமதியுடன் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியை மலினப்படுத்தும் வகையில் அரசாங்கம் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை முறையற்ற வகையில் பயன்படுத்துகிறது என முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

நாட்டில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் மதிக்கப்பட்டால் மாத்திரமே பொருளாதார மீட்சிக்காக சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை ஜனாதிபதி உட்பட அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையினை முழுமையாக செயற்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்கி,தேசிய பாதுகாப்பு பொருட்டு உரிய சட்டத்தை உருவாக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாகவும்,அதற்கான சட்ட நடவடிக்கைகளை நீதியமைச்சர் மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளமை அவதானத்திற்குரியது.

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 90 நாட்களுக்கு தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்ய அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.அவ்வாறாயின் பயங்காரவாத சட்டத்தின் கீழான கைது தவறு என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் பயங்கரவாத தடைச்சட்;டம் தொடர்பில் ஆராய அமைச்சரவை அமைச்சுக்கள்,அரச நிறுவனங்களை உள்ளடக்கிய வகையில் அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டது.

அதிகாரிகள் குழுவில் வெளிவிவகாரத்துறை அமைச்சு,நீதியமைச்சு,பாதுகாப்பு அமைச்சு,சட்டமாதிபர் திணைக்களம்,பொலிஸ் திணைக்களம் ஆகிய தரப்பினரை ஒன்றிணைத்து நுணுக்கமாக ஆராயப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய வகையிலான அறிக்கை சமர்ப்பிக்குமாறு குறிப்பிடப்பட்டது.

அமைச்சரவை உபகுழுவின் தலைவராக நான் பதவி வகித்தேன்.சுமார் நான்கரை மாத கடின உழைப்பினை தொடர்ந்து அதிகாரிகள் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பித்தார்கள்.

சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் அவசரமாக மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் முதலாவது பணியாகவும்,பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக பிறிதொரு சட்டத்தை அறிமுகப்படுத்தி பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்து செய்வது இரண்டாவது பணியாகவும் குறிப்பிடப்பட்டன.

சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையினை அமைச்சரவை அங்கிகாரம் கிடைக்கப் பெற்றதுடன் பாராளுமன்றமும் அதனை ஏற்றுக்கொண்டது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்து செய்து புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தான் பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாற்றமடைந்து ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.

இவ்வாறான பின்னணியில் தற்போதைய அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டம் இரத்து செய்து புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த ஆரம்பத்திலிருந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அரசாங்கம் தற்போது குறிப்பிடுகிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி,தேசிய பாதுகாப்பு தொடர்பில் புதிய சட்டத்தை உருவாக்கும் வரை நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை எக்காரணிகளுக்காகவும் பயன்படுத்த போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் அனுமதியுடன் வெளிவிவகாரத்துறை அமைச்சர் என்ற ரீதியில் சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதி வழங்கினேன்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இந்த தீர்மானத்தை பாதுகாப்பு தரப்பினருக்கு தெளிவுப்படுத்தினார். இவ்வாறான பின்னணியில் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதியை மலினப்படுத்தும் ஒரு செயற்பாடாக கருதப்படும்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை இவ்வருட இறுதியில் பெற்றுக்கொள்ளலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் உறுதியாக குறிப்பிட்டுள்ளமை அவதானத்திற்குரியது.

பொருளாதார மீட்சிக்காக சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் நாட்டில் ஜனநாயக உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் 6 உயர்மட்ட கண்காணிப்பாளர்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்கள்.தற்போதைய மனித உரிமைகள் மீறல் செயற்பாடுகள் மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான அடக்குமுறைகள் மத்திய வங்கி ஆளுநரின் பொருளாதார மீட்சிக்கான முயற்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.

நன்றி...
வீரகேசரி

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments