Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பாலியல் குற்றவாளிகளுக்கு தமிழ் சினிமா கொடுத்த தண்டனைகள்... அன்றும் இன்றும்! #Rewind

`எப்பவாச்சும் பாதி தூக்கத்துல 100 பேர் உங்க கழுத்தை நெறிப்பது மாதிரி கனவு கண்டு, பதறி எழுந்திருச்சிருக்கீங்களா? என்னோட எல்லா சிரிப்புக்கும் பின்னாடியும் கண்ணீர் இருக்கு. கடந்த காலத்தை கடந்து வர முடியாத கோவம் இருக்கு. ஒவ்வொரு ராத்திரியும் முகம் தெரியாத பல நூறு கைகள் என்னை துரத்திட்டு வரதை நினைச்சு பயந்து பயந்து செத்துட்டு வாழ்றேன்’

`அவர்தான் இது. ஏன் இத்தனை தடவை கேக்குறீங்க? நான் தான் சொல்றேன்ல’

- தமிழ் சினிமாவில் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட இரு முக்கிய பெண் கதாபாத்திரங்கள் சொல்லும் வசனங்கள் இவை. இதில் ஒன்று, சமீபத்திய கார்கி திரைப்படம். 100 ஆண்டு கால தமிழ் சினிமாவின் மிக மிக முக்கிய திரைப்படம் கார்கி என்று சொல்லலாம்.

இதை புரிந்துக்கொள்ள, தமிழ் சினிமா `பாலியல் வன்முறை குற்றங்களையும் குற்றவாளிகளையும்’ எப்படி கையாண்டிருக்கிறது என்பதை நாம் அறியவேண்டியுள்ளது.

image

80-களில் வந்த சினிமாக்களில் பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதைவிட, பாதிக்கப்பட்டோருக்கு தண்டனை கொடுப்பதிலேயே இயக்குநர்களும் திரைக்கதை ஆசிரியர்களும் அதீத ஆர்வத்துடன் இருந்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அவர்கள் கொடுக்கும் அந்த தண்டனை என்ன தெரியுமா? `பாதிக்கப்பட்ட பெண், தனக்கு பாதிப்பை ஏற்படுத்தியவரையே திருமணம் செய்துக்கொள்ள வேண்டும்’ என்பது. சூப்பர்ஸ்டார் ரஜினியின் `பணக்காரன்’ முதல் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் `நாட்டாமை’ வரை உச்ச நடிகர்கள் பலரின் படங்களிலும், இதை நாம் கண்கூடாக காணலாம்.

image

நடிகர் பார்த்திபனின் `புதிய பாதை’, நடிகர் பிரபுவின் `கும்மிப்பாட்டு’ படங்கள் இதற்கெல்லாம் உச்சமாக, பாலியல் குற்றவாளி முன்னணி கதாபாத்திரமாக கொண்டு, அவர்களின் அச்செயலுக்கு ஒரு நியாயத்தை கற்பித்து அவர்களை ஹீரோவாக்கியிருக்கும். எல்லா படத்திலும், பாதிக்கப்பட்ட பெண் சொல்லி வைத்தாற்போல அந்நபரையே மணந்து `(தன்)மானம்’ காத்து, வீடுகாத்து வாழ்வாள்!

image

உண்மையில் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளியின் `கட்டாயப்படுத்தி பெண்ணை தனக்கு அடிபணிய வைக்கும்’ ஆணவத்துக்கும், அவனுக்கே அப்பெண்ணை திருமணம் செய்து வைக்க ஊர்கூடி எடுக்கும் முடிவுக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஆனாலும் அதையே பெருவாரியாக முன்னெடுத்தது 80களின் சினிமாக்கள். ரஜினியின் நெற்றிக்கண் படத்தில் அப்பெண் வந்து அந்நபரை திருத்திவிட்டு திரும்பிச்செல்லும் காட்சி அமைப்புகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுமாதிரியான காட்சியமைப்புகளுக்கு, அந்த காலகட்டத்தில் இருந்த சமூக நடைமுறைகளே காரணம் என்ற வாதங்கள் இங்கு முன்வைக்கப்படலாம். வாதங்கள் கடந்து, குற்றங்களை நியாயப்படுத்துவதை கேள்வி கேட்கும் போக்கு மிக முக்கியமானதாக பார்க்கிறோம்.

image

சரி, விஷயத்துக்கு வருவோம். 80 களில் சென்றுக்கொண்டிருந்த சினிமாவை கொஞ்சம் முன்னோக்கி நகர்ந்து வந்து பார்த்தால், (1990-க்கு பிறகான சில தசாப்தங்கள் வரையிலான காலகட்டம்) பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மூன்று வித தீர்வுகள் முன்வைக்கப்பட்டன. அவை,

* அப்பெண் மரணித்துவிடுவார்; ஹீரோ/ஹீரோயின் குற்றவாளியை பழிதீர்ப்பார் (ரஜினி நடித்த நான் சிகப்பு மனிதன், ரேவதியின் பிரியங்கா, பருத்திவீரன், நியூட்டனின் 3-ம் விதி, மாண்புமிகு மாணவன் படங்கள் போல)

* குற்றவாளியை பெர்சனாலாக பழிதீர்க்க, அப்பெண்ணின் குடும்பத்தினரோ அல்லது அப்பெண்ணேவோ களத்தில் இறங்குவது. இப்படியானவர்கள் சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு, தண்டனைகளையும் தாங்களே வழங்குவர் (விஷால் நடித்த நான் சிகப்பு மனிதன், நித்யா மேனனின் மாலினி 22 பாளையங்கோட்டை படங்கள் போல)

* அப்பெண் மனநல பிறழ்வு கொண்டவர்களாக ஆகிவிடுவார்கள்; ஹீரோவே அப்பெண்ணுக்கு `வாழ்க்கை’ கொடுப்பார் (வரலாறு, பொன்னுமணி படங்கள் போல)

image

இந்த இடைபட்ட காலத்திலும்கூட 80-களின் சினிமா போதித்த அதே கான்செப்ட் `மனதை திருடி விட்டாய்’ போன்ற சில படங்களில் வந்தன. அப்படங்களில், தங்களை வன்கொடுமைக்கு உள்ளாக்கியவரையே திருமணம் செய்துகொள்ளும் காட்சிகள் - பாதிப்பை ஏற்படுத்தியவரை ஹீரோவாக்கும் காட்சியெல்லாம் இருந்தன. சில படங்களில் பாலியல் வன்கொடுமை காமெடிகளாக சித்தரிக்கப்பட்டிருந்திருக்கின்றன.

நடிகர் வடிவேலுகூட ஒருபடத்தில் கோவை சரளா கதாபாத்திரத்தை திருமணம் செய்ய, இப்படியொரு குற்றச்செயலில் ஈடுபடுவது நகைச்சுவை தொணியில் காட்சிப்படுத்தப்பட்டது. நடிகர் விவேக்கும் ஒரு படத்தில் தானே முன்வந்து குற்றவாளிக்கு தண்டனை கொடுப்பது போன்ற காட்சி நகைச்சுவையாக அமைக்கப்பட்டிருக்கும்.

இந்த இடத்தில் தேவையானி, லிவிங்ஸ்டன் நடித்த என் புருஷன் குழந்தை மாதிரி படத்தில் வரும் பஞ்சாய்த்து காட்சி மிகவும் முக்கியமான ஒன்றாகும். வழக்கமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு வழங்கப்படும் நீதியில் இருந்து தேவையானி அளிக்கும் தீர்ப்பு வித்தியாசமானது. லிவிங்ஸ்டன் வழக்கமாக வழங்கும் பாலியல் வன்கொடுமை செய்தவனையே அந்தப் பெண்ணை திருமணம் செய்யச் சொல்லும் தீர்ப்பையே அளிப்பார். ஆனால், தேவையானியோ, அந்தக் காட்சியில் அற்புதமாக பேசியிருப்பார். பாதிக்கப்பட்ட பெண்ணும் அவளை விரும்பிய காதலனும் இருப்பார்கள். அந்த காதலனிடம் ஒரு நாய் உங்களை கடித்தால் என்ன செய்வீர்கள் அதைப் போல் இதனை நினைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறி அந்தப் பெண்ணை காதலனுக்கே திருமணம் செய்து வைப்பார்.

image

இதற்கு பின், கடந்த சில வருடங்களாகத்தான் கொஞ்சம் கொஞ்சமாக விழிக்கத்தொடங்கியுள்ளன நம் சினிமாக்கள். பாலியல் வன்கொடுமை என்பது குற்றம் என்பதையும், அதை நிகழ்த்துவோர்தான் மனநல பிரச்னை உள்ளோர் என்பதையும் வெவ்வேறு வடிவங்களில் சொல்லத்தொடங்கின. அந்த வகையில் சமீரா ரெட்டியின் நடுநிசி நாய்கள் தொடங்கி நயன்தாராவின் நெற்றிக்கண் வரை சில படங்கள் இதை அழுத்தமாக சொல்லின. இதுபோன்ற சைக்கோக்களை கையாளும் நாயகிகள், சட்டத்தை நம்புபவராக சித்தரிக்கப்பட்ட ஆரோக்கிய போக்கும் நிகழ்ந்தது. இதுபோன்ற பல படங்களில், பாதிக்கப்பட்டவர்கள் ஹீரோக்களை எதிர்பார்க்கவில்லை. மாறாக தாங்களே களத்திலிறங்கி தங்களுக்காக குரல் கொடுத்தனர்.

பாலியல் கொடுமைகளுக்கு எதிராக பாதிப்புக்கு உள்ளானவரே நீதிமன்றத்தை நாடியதை மிக அழுத்தமாக பேசியது, ஜோதிகாவின் `பொன்மகள் வந்தாள்’ திரைப்படம். அதன்பிறகு கார்கி அதை பேசியுள்ளது. தமிழ் வெப்சீரிஸான சுழல், இதையே பேசியது என்றாலும்கூட அதில் சட்டப்போராட்டம் தொடர்பான காட்சியமைப்புகள் இல்லை.

image

இக்காரணங்களிலாயே இதுவரையிலான தமிழ் சினிமா முன்னெடுப்புகளில் `பொன்மகள் வந்தாள்’ படத்துக்கும், `கார்கி’ படத்துக்கும் முக்கியமான படங்களாக தனித்துவம் பெறுகின்றன. `பொன்மகள் வந்தாள்’ போல, பாதிக்கப்பட்ட ஒரு பெண், தன்னுடைய பாதிப்பு இதுதான் - இப்படித்தான் என பொதுவெளியில் கூறி, குற்றவாளிக்கு எதிராக நீதி வாங்கிக்கொடுப்பது தமிழ் சினிமா யோசித்திடாத பாதை. அதிலும் அந்த பாதிக்கப்பட்ட பெண் ஏஞ்சல் கதாபாத்திரத்தில் ஜோதிகா போன்ற முன்னணி நாயகியொருவர் நடித்திருந்தது கூடுதல் அழுத்தத்தை படத்துக்கு கொடுத்தது.

எப்போதுமே பிரபலங்கள் திரையில் செய்யும் ஒருவிஷயம், திரைக்குப்பின் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜோவின் அந்த கதாபாத்திரம், சமூக மாற்றங்களை ஏற்படுத்தியது. சிறுமியொருவர், தானே முன்வந்து தனக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தலை பொதுவெளியில் பகிர்ந்திருந்தார். தன்னுடைய துணிச்சலுக்கு, அப்படமே காரணமென்றும் அச்சிறுமி அச்சமயத்தில் தெரிவித்திருந்தார்.


பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் அதில் தங்கள் பக்க குற்றம் இருப்பதாக நினைப்பதுண்டு. அதை உடைத்து எறிய வேண்டிய கடமை சினிமாக்களுக்கு உண்டு. அதை பொன்மகள் வந்தாள் நிச்சயம் செய்தது.

இப்போது கார்கிக்கு வருவோம். கார்கி பேசிய விஷயம், தமிழ் சினிமா யோசித்திராத ஒன்று. கார்கியின் அப்பா, சிறு குழந்தையொன்றை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குகிறார். ஏற்கெனவே நால்வரால் பாதிக்கப்பட்ட அச்சிறுமியை, சிறிதும் குற்ற உணர்வற்று இவரும் பாதிப்புக்குள்ளாக்குகிறார். இதற்காக அவரை கைது செய்கிறது காவல்துறை. அப்படியொரு அப்பாவின் குற்றத்தை நம்ப மறுக்கிறாள் அவருடைய மகள். `24 வருஷமா அவரை எனக்கு தெரியும். எங்க அப்பா அப்படியில்ல’ என்று சொல்லும் கார்கிக்கு, தங்கையொருவளும் இருக்கிறாள்.

இரு மகள்களை பெற்ற தந்தையொருவர், இவ்வளவு பெரிய கொடூரத்தை செய்தது ஒருகட்டத்தில் அம்பலப்படுகிறது. அப்போது அந்த மகள் என்ன முடிவெடுக்கிறாள் என்பதே விஷயம். கார்கி அந்த இடத்தில், தந்தையாகினும் அவர் செய்தது குற்றம் என்பதை உணர்ந்து, தானே முன் நின்று அவரை காவல்துறையிடம் ஒப்படைப்பார். மிக மிக அழுத்தமாக அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கும், காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இதுவரை குற்றவாளிகளின் குடும்பத்தினரே, அவரின் முகத்திரையை கிழித்து சட்டப்படி தண்டனை வாங்கிக்கொடுப்பது மிக முக்கிய விஷயமாக அமைந்தது.

image

இப்போதும்கூட பாலியல் குற்றவாளிகளை அவர்களின் தண்டனை காலத்துக்குப்பின் ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் வரவேற்கும் இந்திய கலாசாரத்திற்கு, கார்கிகளின் குரல் மிக மிக முக்கியமானது.

தொடர்புடைய செய்தி: கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் விடுதலையான குற்றவாளிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு!

இன்றைய இந்த அழுத்தமான சினிமாக்கள், குழந்தைகளுக்கு நிகழும் பாலியல் வன்முறை சம்பவங்களில்தான் அழுத்தமான இதுபோன்ற கருத்துகளை முன்வைக்கின்றன என்ற குறையும் உள்ளது. குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் பேசப்பட வேண்டியது மிக மிக முக்கியம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. தனக்கு என்ன அநீதி நிகழ்கிறதென்றே தெரியாமல் வன்முறைக்குள்ளாக்கப்படும் ஒரு குழந்தை எதிர்காலத்தை நோக்கி ஓடுவது நாம் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவுக்கு சவாலான விஷயம். அதில் எந்த சமரசமும் இல்லை. ஆனால் அதே அளவுக்கு, பெரியவர்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான சட்டப்போராட்டமும் சினிமாவிலும் நிஜ வாழ்விலும் பேசப்பட வேண்டும்.

image

சமீபத்திய படங்களில் நடிகர் அஜித் வக்கீலாக நடித்திருந்த நேர்கொண்ட பார்வை படம் இந்த விஷயத்தை நேர்த்தியாகவும் அழுத்தமாகவும் பேசியது. அதில் நாயகி ஷ்ரதா ஷ்ரீநாத் தானே முன்வந்து சட்டப்போராட்டத்தை முன்னெடுப்பார். `நோ மீன்ஸ் நோ’ என்ற புரிதலை ஹீரோ வழியாக படத்தில் முன்வைப்பார்கள். இப்படி நிறைய நேர்கொண்ட பார்வைகள் வரவேண்டியது முக்கியம். நேர்கொண்ட பார்வையில், சமகாலத்து இளம்பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள் குறித்து பேசியதுடன் கூடுதலாக திருமண உறவில் நிகழும் வன்கொடுமைகள் குறித்தும் பேசியிருப்பர். அப்படத்தில் மையக்கருவாகவே `காதலி, மனைவி தொடங்கி பாலியல் செய்யும் தொழிலாளி வரை, உறவுகொள்ள விருப்பமில்லை (நோ) என தெரிவிக்கும் பெண்ணை வற்புறுத்துவது வன்கொடுமைதான்’ என்பது அழுத்தமாக பேசப்பட்டிருக்கும்.


அஜித் மாதிரியான முன்னணி நடிகர் இப்படியான ஒரு கருத்தை முன்வைப்பது, சினிமாவின் மிகப்பெரிய வளர்ச்சி. இதே அஜித், வரலாறு படத்தில் குற்றச்செயலுக்கு வேறொரு கருத்தை முன்வைத்திருப்பார். காலப்போக்கில் நேர்கொண்ட பார்வையில், அவரது படமே இப்படியான ஒரு முற்போக்கு கருத்தை முன்வைக்கும். பெரிய நடிகர்களின் படங்கள், சமூக தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்ற வகையில், இது மிக மிக மெச்சத்தக்க ஒன்று.

அஜித் போலவே ரஜினியின் காலா போன்ற சமீபத்திய படங்கள், விஜய்யின் மாஸ்டர் போன்ற படங்கள் யாவும் முந்தைய காலகட்டத்தில் தாங்கள் செய்த தவறை அவர்களே திருத்திக்கொள்ளும் வெளி உருவாகியுள்ளது. இது காலம் தந்த மாற்றம் என்ற வகையில் மகிழ்ச்சி. மீண்டும் அதே பழைய சிக்கலுக்குள் சினிமா உளலாமல் இருப்பதே இப்போதைய தேவை.


இன்றும் பல குடும்பங்கள் இந்தியாவில் பாலியல் குற்றங்களை மறைக்க முக்கிய காரணம், கற்பு சார்ந்த சமூக கோட்பாடுகள். ஒருவரால் பலவந்தப்படுத்தப்படும் ஒரு பெண், எந்தச் சூழலிலும் நெறியற்றவள் அல்ல என்ற புரிதலை சமூகத்தில் ஏற்படுத்த வேண்டிய அவசியம் சினிமாக்களுக்கு உண்டு. அதை சமீபத்திய சினிமாக்கள், கொஞ்சம் நேர்த்தியாக கையாள்கின்றது என்று சொல்லலாம்.

இன்னமும் இப்போதும்கூட பாலியல் வன்கொடுமை காட்சிகளை திரையில் காட்டுவதில் தமிழ் சினிமாக்களில் சில பிரச்னைகள் உள்ளன. பெரும்பாலான படத்தில் இதற்கான காட்சிகள், குற்றவாளிகளை மேலும் தூண்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. பொன்மகள் வந்தாள், சுழல் போன்றவற்றிலும்கூட இந்தப் பிரச்னை இருந்தது. காலப்போக்கில் இந்த விஷயத்தை கையாளவும் தமிழ் சினிமா கற்க வேண்டும்.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments