Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

உலகளாவிய மாற்றங்கள் தொடர்பில் உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும் - ஜனாதிபதி...!


நாம் பழைய பொருளாதார மாதிரியைப் இனியும் பயன்படுத்த முடியாது, புத்தாக்கமாகச் சிந்தித்து உலகளாவிய மாற்றங்கள் தொடர்பில் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (05) முற்பகல் நடைபெற்ற இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கைகள் வெளியீட்டு விழா மற்றும் புத்திஜீவிகள் ஒன்றுகூடல் சொற்பொழிவு நிகழ்வில் அதிதி உரை ஆற்றிய போதே ஜனாதிபதி விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“ LET’S RESET SRI LANKA “ என்ற தொனிப்பொருளில் அட்வகாட்டா நிறுவனத்தினால் (Advocata Institute) இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு, இன்றும் நாளையும் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உள்ள லோட்டஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரேரணை நல்லதோ, கெட்டதோ, எவரேனும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அதனை அமுல்படுத்த வேண்டும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள். அதனை எந்தவொரு தரப்பினரும் எதிர்த்தால் அதற்கு அவர்களின் முன்மொழிவுகள் எவை எனக் கேள்வி கேட்க அரசாங்கத்திற்கு உரிமை உண்டு என்றும் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மேலும் கூறியதாவது,

முதலில் நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இரண்டாவது மிக முக்கியமானது நிலையான கடன் ஒன்றைப் பெறுவது. இந்தக் கடனைப் பெறுவது தொடர்பில் எவருக்கேனும் ஆலோசனைகள் இருந்தால் அது இலகுவாக இருக்கும். உண்மையாக நாம் அந்த முன்மொழிவுகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், இந்த முன்மொழிவுகள் குறித்து பாராளுமன்றம் முடிவெடுக்க முடியும்.

அரசாங்கங்கள் மற்றும் அரச பொதுக் கொள்கைகளில் ஏற்படும் மாற்றங்கள் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் நாம் எதிர்கொள்ள வேண்டிய ஒரு அடிப்படை பிரச்சனையாகும். அடுத்த 06 மாதங்களிலும் கண்டிப்பாக சிரமங்களை சந்திக்க நேரிடும். பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை சர்வதேச நாணய நிதியமும் ஒப்புக்கொள்கிறது.

நாடு முதலில் வெளிநாட்டுக் கடன் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். மேலும், ஆசிய பிராந்தியத்தின் புவிசார் அரசியலில் சிக்கிக் கொள்ளாமல் பயணிக்க வேண்டும்.

நாம் அதிகளவிலான கடன்தொகையை மீள செலுத்த வேண்டியுள்ளது. ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை, அணுசக்தி பயன்பாடு ஆகிய துறைகள் தொடர்பில் சம்பிரதாய கட்டமைப்பிற்கு வெளியே சிந்திக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தாமல் நாட்டின் எதிர்காலத்தை சீரமைக்க முடியாது.

தற்போது இலங்கை செய்ய வேண்டிய முதல் பணி இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதாகும். 1997 ஆம் ஆண்டு ஆசிய நிதி நெருக்கடி மற்றும் 1997 ஆம் ஆண்டு தாய்லாந்து பொருளாதார நெருக்கடியின் போது, இந்த பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியம் அவர்களுக்கு வழிகாட்டியது.

அண்மையில் நான் மகாநாயக்க தேரர்களை சந்தித்தபோது, விகாரைகளை மையப்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேரர்கள் ஒப்புக்கொண்டனர். சமீப காலமாக உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்து வருகிறது.

கொவிட் மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக பாடசாலைக் கல்வி தடைபட்டுள்ளது. அதை விரைவில் இயல்பு நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும். முதலாவதாக, பொருளாதார ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட வேண்டும், இரண்டாவதாக, அதன் மூலம் சமூக ஸ்திரத்தன்மையை உருவாக்க முடியும்.

விவசாயம் மற்றும் மீன்பிடித் துறையை நவீனமயமாக்குதல், உற்பத்தியில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளைத் தணித்தல், பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், மக்களின் வீட்டுத் தேவைகள், கிராமப்புறங்களில் உள்ள வறுமை போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

அதிக ஊதியம் பெறும், அதிக உற்பத்தி திறன் கொண்ட போட்டிப் பொருளாதாரத்தை நாம் உருவாக்க வேண்டும். பெரிய அளவில் அதிகரித்து வரும் சந்தைகளைக் கொண்ட ஆசிய நாடுகளுடன் வர்த்தக உறவுகளை உருவாக்க வேண்டும். தற்போதைய உலகப் பொருளாதாரச் சூழல் எந்த நாட்டுக்கும் சாதகமாக இல்லை.

தாய்லாந்தின் முன்னாள் வங்கித் தலைவர் கலாநிதி Veerathai Santiprubhop அவர்களும் இங்கு கருத்துத் தெரிவிக்கையில், சர்வதேச ஊடகங்களில் காட்டப்படுவது போன்று இலங்கையில் நிதி நெருக்கடி இல்லை என சுட்டிக்காட்டினார்.

தாய்லாந்தின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாத்தல், நிறுவன சீர்திருத்தங்கள், வங்கித் துறையில் நம்பகத்தன்மையை உருவாக்குதல், அமைச்சரவையில் பொருளாதார நிபுணர்களை உள்வாங்குதல், சர்வதேச நாணய நிதியத்துடன் செயற்படுதல், தேவையான சட்ட திருத்தங்கள் மற்றும் வெளிநாட்டு நிபுணர்களின் உதவியைப் பெறுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹசீம், மயந்த திஸாநாயக்க மற்றும் அட்வகாட்டா நிறுவனத்தின் தலைவர் Murtaza Jafferjee உள்ளிட்ட பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments