Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

யுபுன் அபேகோன் அரையிறுதிக்கு தகுதி...!


பெர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியின் முதல் சுற்றில் யுபுன் அபேகோன் முதலிடத்தைப் பிடித்து அரையிறுதிக்கு முன்னேற்றம் கண்டார்.

நேற்று நடந்த ஹீட் 6க்கான போட்டியில் பங்கேற்ற அபேகோன் 10.06 விநாடிகளில் போட்டித் தூரத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம் அவர் இன்று இரவு 11.40 மணிக்கு நடைபெறும் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இங்கிலாந்தின் பெர்மிங்ஹாமில் நகரில் நடைபெற்று வரும் 22ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் மெய்வல்லுனர் போட்டிகள் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. இதில் இலங்கை சார்பில் ஆறு வீர, வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இதில் இலங்கை சார்பில் இன்று (ஓகஸ்ட் 3) ஆரம்ப சுற்று போட்டி ஒன்றில் ஆண்களுக்காக 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் காலிங்க குமாரகே பங்கேற்கவுள்ளார். இந்தப் போட்டி பி.ப 4.50 மணிக்கு நடைபெறவுள்ளது.

குமாரகே தனது சிறந்த காலமான 45.88 விநாடியை இந்த ஆண்டிலேயே பதிவு செய்துள்ளார். அது கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதியாகும். எனினும் அவர் கடைசியாக பங்கேற்ற போட்டியான ‘சூரிச்’ தொடரில் 400 மீற்றர் ஓட்டப்போட்டியை 46.36 விநாடிகளில் முடித்திருந்தார்.

வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் பெண்களுக்கான தூரம் பாய்தல் போட்டியில் சாரங்கி டி சில்வா பங்கேற்கவுள்ளார். இந்தப் போட்டி அன்றைய தினம் பி.ப. 4.10க்கு ஆரம்பமாகும்.

தூரம் பாய்தலில் தேசிய சம்பியனான சாரங்கி டி சில்வா இதுவரை தனது சிறந்த பாய்ச்சலாக 6.65 மீற்றரை பதிவு செய்துள்ளார். உலக சம்பியன் போட்டிக்கு தகுதி பெற்றபோதும் இறுதிக் கட்டத்தில் அவர் அதில் இருந்து வெளியேறினார். கடந்த ஜூலை 27 ஆம் திகதி சூரிச் நகரில் நடந்த சர்வதேச போட்டியிலும் அவர் 6.23 மீற்றர் திறமையையே பதிவு செய்திருந்தார்.

1998 குவாலாலம்பூர் நகரில் நடைபெற்ற பொதுநலவாக விளையாட்டுப் போட்டியில் சுகத் திலகரத்ன 400 மீற்றர் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதும், 100 மீற்றர் தடைதாண்டி ஓட்டப்போட்டியில் ஷ்ரியானி குளவன்ச வெள்ளிப் பதக்கம் வென்றதும் இலங்கை கடைசியாக மெய்வல்லுநர் போட்டியில் பெற்ற பதக்கங்களாகும்.

1950 ஒக்லாந்து போட்டியில் டன்கன் வைட் 440 யார்ட் தடைதாண்டி போட்டியில் வென்ற தங்கப்பதக்கம் இதுவரை இந்த விளையாட்டு விழாவில் இலங்கை பெற்ற ஒரே மெய்வல்லுனர் தங்கப்பதக்கமாகும்.

Post a Comment

0 Comments