Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

புதிய பெற்றோலிய சட்டம் வரம்பற்ற அதிகாரத்தை வழங்குமா?


அரசாங்கத்தினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள “பெற்றோலிய உற்பத்தி சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலம்” அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று (08) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

முர்து பெர்னாண்டோ, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதி குழாம் முன்னிலையில் இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.

இதன்போது மனுவொன்றை சமர்ப்பித்திருந்த இலங்கை சுதந்திர பணியாளர்கள் சங்கம் சார்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், இந்த சட்டமூலத்தில் உள்ள சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என சுட்டிக்காட்டினார்.

இந்த சட்டமூலத்தின் ஊடாக எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகத்திற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு வரம்பற்ற மற்றும் தன்னிச்சையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம் தொடர்பான உரிமங்களை வழங்குவதில் நிலவும் வெளிப்படைத் தன்மை இழக்கப்பட்டு பக்கச்சார்பு நிலை உருவாக வழிவகுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை ஒழுங்குபடுத்தும் சாத்தியம் கூட இந்த சட்டமூலத்தின் மூலம் இழக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதன் மூலம் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய பொருளாதார பாதுகாப்புக்கு பாரிய ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்த ஜனாதிபதியின் சட்டத்தரணி, பொதுமக்களின் இறைமை அதிகாரம் மீறப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

மற்றுமொரு மனுவை சமர்ப்பித்த பெற்றோலியக் கூட்டுத்தாபன நிறைவேற்று அதிகாரிகள் சங்கம் மற்றும் அதன் அதிகாரிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர டி சில்வா நீதி மன்றில் கருத்து தெரிவிக்கையில், 2, 3, 4, 6, 7 ஆகிய சரத்துக்களில் "பெற்றோலிய வழங்கல் குழுவிற்கும், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கும் வரம்பற்ற அதிகாரம் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

பெற்றோலியம் இறக்குமதி, விநியோகம் மற்றும் விற்பனைக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட வேண்டியவர்கள் தொடர்பில் அமைச்சருக்கு சிபாரிசு செய்வதற்கான அதிகாரம் மேற்படி குழுவிற்கு கிடைக்கும் நிலையில், அதன் மூலம் குறித்த குழுவிற்கும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கும் வரம்பற்ற அதிகாரம் கிடைப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார். .

இதனையடுத்து, மனு விசாரணை நாளை (09) வரை ஒத்திவைக்கப்பட்டதுடன், சட்டமா அதிபரின் சமர்ப்பணங்கள் நாளை முன்வைக்கப்படவுள்ளன.

Post a Comment

0 Comments