Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

சஜித் ஒரு பலவீனமான தலைவர்...!


பல்வேறு தரப்பினர் கூறினாலும் பிரதமரை மாற்றுவதற்கு எவ்வித தயார்நிலையும் இல்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (12) தெரிவித்தார்.

தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன முதிர்ச்சியடைந்த அரசியல்வாதி என்பதை தனது செயற்பாடுகளினால் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற தேனுக விதானகமகேவின் கடமையை பொறுப்பேற்கும் விழாவில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை இன்று (12) தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது, ´அரசியலமைப்பின் படி இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். இராஜாங்க அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளமே பெறுகின்றனர். வாகனங்கள் கூட மிகவும் வரையறுக்கப்பட்டவையாகவே உள்ளன. இந்த இக்கட்டான நேரத்தில் நாட்டுக்காக சில தியாகங்களைச் செய்ய நாம் அனைவரும் தயாராக இருக்கிறோம்.

சில அமைச்சுகள் அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்களைக் கொண்டுள்ளன. இந்த நிறுவனங்கள் அனைத்தையும் ஒரு அமைச்சரால் பார்க்க முடியாது. எனவே, மேலும் பல அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட வேண்டும். பின்னர் வேலை செய்வது எளிது. இந்த நியமனங்கள் செலவுகளை அதிகரிக்கும் என்று யாரும் குற்றம் சாட்ட முடியாது. அப்படியானால், அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் சம்பளம் மற்றும் சலுகைகள் பெறாமல் பணியாற்ற வேண்டும். எங்களை விட அரசாங்க அதிகாரிகள் அதிக சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெறுகிறார்கள். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் காலத்தில் இந்த நாடு எதிர்மறையான பொருளாதாரத்தை கொண்டிருந்தது. நாங்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தும் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவும் அப்போது அமைச்சுப் பதவிகளைப் பெற்றார். இது இந்த எதிர்ப்பின் முழக்கம் மட்டுமே.

இந்த நேரத்தில், நாட்டில் உள்ள அனைவரும் பொருளாதார ரீதியாக சிரமப்படுகின்றனர். மக்களுக்கு நிவாரணம் வழங்கவே இடைக்கால பட்ஜெட்டை கொண்டு வந்தோம். மேலும், அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. தற்போதைய பொருளாதார நிலைமையை நிர்வகிப்பதன் மூலம் மக்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்க முடியும் என நம்புகிறோம்.

இந்த நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகளும் போராட்டக்காரர்களும் இன்னமும் ராஜபக்ஷ மீது அச்சம் கொண்டுள்ளனர். சாதாரண மக்களுக்கு அத்தகைய அச்சம் இல்லை. இந்த நாட்டின் அமைதியான போராளிகள் அமைப்பு மாற்றத்தை விரும்பினர். அதை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம். அதற்காகவே ஜனாதிபதி பதவிக்கு கோட்டாபாய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார்.

அமைச்சர் பதவிக்கு நாமல் ராஜபக்ஷவும் தகுதியானவர் என நினைக்கிறேன். ஆனால் அவர் அமைச்சர் பதவி எடுப்பாரா இல்லையர் என்று எனக்குத் தெரியவில்லை. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் விருப்பு பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளதால், அவர் அமைச்சர் பதவிக்கு தகுதியானவர். அதுபோல முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பதை அவர் தீர்மானிக்க வேண்டும். அவருடைய செயல்கள் சரியா தவறா என்பதை எதிர்காலம் தீர்மானிக்கும்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஒரு பலவீனமான தலைவர். சவால்களை ஏற்க பயப்படுகிறார். வெளியே செல்லாமல் இந்த சவாலை ஏற்று எங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டோம். ஆனால் அவர் பயப்படுகிறார். அநுரகுமார திசாநாயக்கவும் அப்படித்தான். இருவருமே சவால்களை ஏற்க பயப்படுகிறார்கள்´ என்று அமைச்சர் கூறினார்.

Post a Comment

0 Comments