Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

சென்னையில் 30 நாட்கள்: ஷாருக்கானின் நெகிழ்ச்சிப் பதிவும், அட்லியின் உருக்கமான பதிலும்!



பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சென்னையில் நடந்த ‘ஜவான்’ படப்பிடிப்பில் ரஜினி, விஜய், விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் அனிருத் ஆகியோருடன் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த நிலையில், அவரால் ஆயிரம் குடும்பங்கள் பயன்பெற்றதாக இயக்குநர் அட்லி உருக்கமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் அட்லி இயக்கத்தில், நடிகர் ஷாருக்கான் தனது ரெட் சில்லிஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக தயாரித்து நடித்து வரும் திரைப்படம் ‘ஜவான்’. பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில், இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஷாருக்கான். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். பிரியா மணி, யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களிலும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிக்கிறார். தீபிகா படுகோனே சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படம் அடுத்தாண்டு ஜூன் மாதம் வெளியாகிறது.

இதனை முன்னிட்டு புனே, மும்பை, ஹைதராபாத்தில் படப்பிடிப்புகள் நடந்தநிலையில், அடுத்தக்கட்டமாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஆதித்யராம் ஸ்டூடியோஸில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு கடந்த ஒருமாத காலமாக படப்பிடிப்பு நடந்து வந்தது. இங்குதான் ரஜினியின் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பும் நடந்துவந்தநிலையில், கோலிவுட் மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் சந்தித்துக்கொண்டதாக கடந்த மாதம் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதுகுறித்து அப்போது படக்குழுவினர் உறுதி செய்யவில்லை. மேலும் இயக்குநர் அட்லியின் பிறந்தநாள் பார்ட்டியில் விஜய், ஷாருக்கான் கலந்துகொண்ட புகைப்படங்களும் வெளியாகின.

இந்நிலையில் ரஜினியின் சந்திப்பை உறுதி செய்யும் வகையிலும், கடந்த ஒரு மாதகாலமாக சென்னையில் நடந்த படப்பிடிப்பு அனுபவம் குறித்தும் ஷாருக்கான் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில், “ரெட் சில்லிஸ் எண்டெர்டெயின்மெண்ட் (RCE) குழுவுக்கு 30 நாட்கள் என்னவொரு சிறப்பான அனுபவமாக இருந்தது. தலைவர் (ரஜினிகாந்த்) எங்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து ஆசீர்வாதம் செய்தார். நயன்தாராவுடன் படம் பார்த்தேன், அனிருத்துடன் பார்ட்டி கொண்டாடினேன். விஜய் சேதுபதியுடன் நீண்ட ஆழமான உரையாடல்கள் மேற்கொண்டேன். தளபதி விஜய் சுவையான உணவை அளித்தார். இயக்குநர் அட்லி மற்றும் அவரது மனைவி பிரியா ஆகியோரின் விருந்தோம்பலுக்கு நன்றி. தற்போது சிக்கன் 65 ரெசிப்பி சமைக்க கற்றுக் கொள்ள வேண்டும்” என நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்திருந்தார். இந்தப் பதிவு வைரலானநிலையில், ஷாருக்கானின் இந்த ட்வீட்டிற்கு இயக்குநர் அட்லி பதிலளித்திருக்கிறார். தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மிகவும் நன்றி சார். நீங்கள் இங்கே வந்திருந்தது குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன் மற்றும் மகிழ்ச்சியடைகிறேன். எனது சினிமா வாழ்க்கையில், சென்னையில் நடந்த இந்த படப்பிடிப்பு மறக்க முடியாத நிகழ்வு. சென்னையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுத்ததுக்கு மிகவும் நன்றி. ஏனெனில் இதன்மூலம் 1000 குடும்பங்கள் பயன் அடைந்துள்ளன. ‘ராஜா எப்போதும் ராஜாதான்’ (king is a king always). அதற்காக உங்களுக்கு தலை வணங்குகிறேன். உங்கள் மீது அளவுக்கடந்த மரியாதை வைத்துள்ளேன். லவ் யூ சார். விரைவில் மும்பையில் உங்களை சந்திக்கிறேன்” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். ‘ஜவான்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நிறைவடைந்த நிலையில், விரைவில் மும்பையில் மீண்டும் படப்பிடிப்பு துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments