Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

அமிதாப் பச்சன் சந்தித்த ஐந்து பெருந்தடைகள் - உயர்ந்த மனிதனின் உத்வேகக் கதை!இந்திய சினிமாவில் அன்றும், இன்றும், என்றும் அமிதாப் பச்சன் இடத்துக்கு வேறொருவர் இல்லை என்பதே நிதர்சனம்.

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார்; நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் அறியப்பட்ட பிரபலம்; தனது உருவத்தை மட்டுமல்ல, வளர்ச்சியையும் அண்ணாந்து பார்க்க வைத்த கலைஞானி; அந்த ஒற்றை பெயருக்கு பின்னால் எவ்வளவு ரசிகர் பட்டாளம்.. ஆம், அது அமிதாப் பச்சனே தான். திரையுலகில் ஏராளமான ஏற்றங்களையும் இறக்கங்களையும் கடந்து, 80 வயதில் இன்றைக்கும் தனது கலைப்பயணத்தை உயிர்ப்புடன் தொடர்கிறார் அமிதாப் பச்சன். 80 வயதான இந்த கலைஞன் 20 வயது இளைஞனின் மனதுடன் இருக்கிறார் என்றால் அது மிகையல்ல. கடின உழைப்பால் திரையுலகின் உச்சம் தொட்ட அமிதாப் கடந்து வந்த நெருப்பு ஆறுகள் இதோ..ஆரம்பகால நிராகரிப்பு

1960களின் பிற்பகுதியில் பிரபல பத்திரிக்கை ஒன்று நடத்திய அறிமுக நடிகர்களை தேடும் போட்டியில் பங்கேற்க முடிவு செய்தார் அமிதாப். அந்நேரத்தில் அவரது இளைய சகோதரர் அஜிதாப், அமிதாப்புக்கு தேவையான உதவி செய்தார். துரதிர்ஷ்டவசமாக, அந்தப் போட்டியில் அமிதாப் பச்சன் தேர்வாகவில்லை. சினிமாவில் வாய்ப்புத் தேடி அலைந்துக் கொண்டிருந்த சமயத்தில் பலரும் அவரது நெடுநெடு உயரத்தைக் கண்டு நிராகரித்தனர். 'உங்களை ஹீரோவாக போட்டால் உங்கள் உயரத்திற்கு இணையான ஹீரோயினை நாங்கள் எங்கேபோய் தேடுவது' என நகைப்புடன் அமிதாப் வெளியே அனுப்பப்பட்டார். அகில இந்திய வானொலி நிலையத்தில் வேலைக் கேட்டு சென்ற போது, இவரது கரகர குரலை காரணம் காட்டி வேலை மறுக்கப்பட்டது.

தொடர் தோல்விகள்

தொடர் முயற்சிக்குப் பின், ‘புவன் ஷோம்’ (1969) என்ற திரைப்படத்தில் பின்னணிக் குரல் கலைஞராக திரை வாழ்க்கையைத் தொடங்கினார் அமிதாப். அதனைத்தொடர்ந்து கே.ஏ. அப்பாஸ் தயாரித்த 'சாத் ஹிந்துஸ்தானி' என்கிற திரைப்படம்தான் அமிதாப் பச்சனை திரையில் அறிமுகப்படுத்தியது. இப்ப்படத்தில் 7 நாயகர்களில் ஒருவராக அமிதாப் நடித்திருந்தார். அதன் பிறகு அவருக்குத் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்துக் கொண்டிருந்தாலும் அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் தோல்வியையே தழுவியது. ஒரு சமயத்தில் தொடர்ந்து 12 தோல்வி படங்களை கொடுத்தார். அதன் பிறகு தான் 'சான்ஜீர்' என்ற படம் வெற்றியடைந்தது.வலி தந்த 'கூலி'

1982 இல் `கூலி’ படப்பிடிப்பின் போது ஒரு சண்டைக் காட்சியில் அமிதாப்புக்கு பலத்த காயம் ஏற்பட்டது. வயிற்றுப்பகுதியில் ஆழமான காயம், அறுவை சிகிச்சை, பல மாத மருத்துவமனை வாசம் என அமிதாப் மிகவும் அவதியுற்றார். அவர் குணமடைய ரசிகர்கள் நாடு முழுக்க சிறப்பு வழிபாடுகளை நடத்தினார்கள். சுமார் 200 பேரிடமிருந்து அமிதாப்புக்கு தேவையான ரத்தம் பெறப்பட்டது. 60 பாட்டில்களுக்கும் அதிகமாக அவரது உடலில் ரத்தத்தை ஏற்றினர். பல மாதங்கள் மருத்துவமனையில் இருந்து, அதன் பிறகு மீண்டும் நடித்தார். இவருக்கு ஏற்பட்ட விபத்தினால் உண்டான விளம்பரமே இந்தப் படத்தை பெரும் வெற்றியடையச் செய்தது.

இந்த விபத்தின் காயத்திலிருந்து மீண்ட சிறிது காலத்திலேயே அமிதாப்புக்கு உடல்ரீதியான தொந்தரவுகள் பல ஏற்பட்டன. வழக்கமான மருத்துவப் பரிசோதனை ஒன்றில் அவருக்கு ஹெபாடிடிஸ்-பி தொற்று இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக பின்னாளில் கல்லீரல் பிரச்சனையால் அவதியுற்றார். ஹெபாடிடிஸ்-பி பாதிப்பால் அமிதாப்பின் கல்லீரல் 75 சதவிகிதம் பாதிக்கப்பட்டது. மீதமுள்ள 25 சதவிகித கல்லீரலுடன்தான் அவர் உயிர் வாழ்ந்து வருகிறார்.

மேலும் அமிதாப் பச்சனை அரியவகை நோயான தசைக்களைப்பு (Myasthenia gravis) நோய் தாக்கியது. இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களுக்குப் பிடிமானம், நடை, பேச்சு போன்ற செய்கைகளில் அதிக இடர்ப்பாடுகள் ஏற்படும். இந்த நோயை முழுமையாக குணப்படுத்த முடியாது. கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.மூடப்பட்ட கம்பெனி

'அமிதாப் பச்சன் கார்ப்பரேஷன் லிமிடெட்' என்ற நிறுவனம் வாயிலாகத் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார் அமிதாப். ஆனால் அவரது தயாரிப்பில் உருவான படங்கள் பெரும் நஷ்டத்தை உண்டு பண்ணியது. நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக 1996இல் உலக அழகி போட்டி ஒன்றை தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலமாக நடத்தினார். அதுவும் இழப்பையே சம்பாதித்துக் கொடுத்தது. தொடர்ந்து படங்கள் தயாரித்து அவை தோல்வி அடைந்த நிலையில் தனது தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூடினார். வங்கிக் கடனைத் திருப்பித் தர முடியாமல், தனது இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை அடமானம் வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். பொருளாதார நஷ்டத்திலிருந்து மீள அவரது நண்பர் அமர்சிங் உதவிக்கரம் நீட்டினார். அந்த கைமாறுக்காக அமர் சிங்கின் சமாஜ்வாடி கட்சியை ஆதரித்தார் அமிதாப். இவர் மனைவி ஜெயா பச்சன் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்து ராஜ்ய சபா உறுப்பினராகவும் ஆனார்.கொரோனா பாதிப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் இரண்டு முறை பாதிக்கப்பட்டவர் அமிதாப் பச்சன். 2020இல் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்தபோதும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின்னர் இந்த ஆண்டும் அவர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டார். இரண்டு முறையும் கொரோனாவை வென்று குணமடைந்தார் அமிதாப்.

இப்படி அமிதாப் பச்சன் கடந்த வந்த நெருப்பு ஆறுகள் ஏராளம். ஆனாலும், இந்திய சினிமாவில் அன்றும், இன்றும், என்றும் அவரது இடத்துக்கு இன்னொருவர் இல்லை என்பதே நிதர்சனம். 50 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அமிதாப் பச்சன், ‘தி கிரேட் கேட்ஸ்பி’ (2013) ஆங்கிலப் படத்தின் மூலமாக ஹாலிவுட்டிலும் தோன்றினார். 3 பத்ம விருதுகள், சிறந்த நடிகருக்கான 4 தேசிய விருதுகள், கடந்த ஆண்டின் இறுதியில் பால்கே விருது ஆகிய அங்கீகாரங்களுடன் தடைகளைக் கடந்து கம்பீரமாக பயணிக்கிறார்.

பிறந்த நாள் வாழ்த்துகள் அமிதாப் ஜி!

Post a Comment

0 Comments