
தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் மருத்துவ பீடம் அமைப்பதற்கு திட்டங்கள் வகுத்துள்ளதாக,தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ் தெரிவித்தார்.
பல்கலைக்கழகத்தின் 26 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு, நடாத்தப்பட்ட இதன்,ஸ்தபாகர் எம்.எச்.எம். அஷ்ரபின் நினைவு தினத்தில் உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்நினைவு தினம் நேற்று செவ்வாய்க்கிழமை (25) ஒலுவில் வளாக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், பட்டதாரி மாணவர்களின் தொழிற்தகைமையை மேம்படுத்த, கணினி பீடத்தை நிறுவுவதற்கும், பட்டப்பின்படிப்புக் கற்கையினை வினைத்திறனாகக் கொண்டுசெல்ல பட்டப்பின்படிப்புக் கற்கைகள் பீடத்தை தாபிப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு வருட காலத்தினுள் பல்கலைக்கழகத்தினை சமூகத்துடன் ஒன்றிணைப்பதில் வெற்றி கண்டுள்ளோம். பிராந்தியத்திலுள்ள விவசாய, மீன்படி சமூகங்களுடன் இணைந்த பல திட்டங்களை பல்கலைக்கழகம் முன்னெடுத்து வருகின்றது.
கல்வி மற்றும் ஆய்வுப் பரப்பில் இப்பல்கலைக்கழகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள பல பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பல பயனுள்ள கல்வி மற்றும் ஆய்வுசார் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இளமாணிப் பட்டப்படிப்புக்கள் மட்டுமன்றி, கலாநிதிக் கற்கை உள்ளடங்கலாக பல பட்டப்பின்படிப்புக் கற்கைகளும் இப்பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பல பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த விரிவுரையாளர்கள், இங்கு பட்டப்பின்படிப்பு மாணவர்களாக இணைந்துள்ளனர். இதனை எமது பல்கலைக்கழகத்திற்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாகவே நான் பார்க்கிறேன்.
இப்பல்கலைக்கழகத்தின் ஆரம்ப வரலாற்றில், பலரது தியாகங்களும் அர்ப்பணிப்புக்களும் விரவிக்கிடக்கின்றன. மர்ஹூம் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரப்,இவ்விடயத்தில் நினைவுகூரப்பட வேண்டியவர். அவருக்குப் பக்கபலமாக நின்றவர்களும் நலன்விரும்பிகளும் இப்பல்கலைக்கழகத்தின் ஸ்தாபக உபவேந்தர், பதிவாளர், நிதியாளர், ஏனைய கல்விசார், கல்விசாரா உத்தியோகத்தர்களது பங்களிப்பும் குறிப்பிடத்தக்கவை. தென்கிழக்குப் பல்கலைக்கழக சந்தைப்படுத்தல் முகாமைத்துவத் துறை தலைவரும் பேராசியருமான எம்.பீ.எம். இஸ்மாயில், பல்கலைக்கழக ஸ்தாபகரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவருமான எம்.எச்.எம். அஷ்ரப் தொடர்பான நினைவுச் சொற்பொழிவை ஆற்றினார்.
நன்றி...
தினகரன்
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
0 Comments