Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

இலங்கையில் இருந்து மேலும் 10 பேர் அகதிகளாக ராமேஸ்வரத்தில்...!


தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 10 இலங்கை தமிழர்கள் இன்று (23) காலை தனுஷ்கோடி அடுத்த முகுந்தராயர் சத்திரம் பகுதியை சென்றடைந்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இதனால் கடந்த மார்ச் முதல் இலங்கையில் இருந்து 198 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றடைந்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கை வவுனியா மாவட்டம் கணேசபுரத்தை சேர்ந்த உதயசூரியன் அவரது மனைவி பரிமளம் மற்றும் அவரது நான்கு குழந்தைகள் மற்றும் வவுனியா மாவட்டம் புவரசம் குளம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி மற்றும் அவரது மூன்று குழந்தைகள் என இரண்டு குடும்பத்தை சேர்ந்த 10 பேர் இலங்கை மன்னாரில் இருந்து நேற்று (22) இரவு படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அருகே உள்ள முகுந்தராயர் சத்திரம் பகுதியில் இன்று (23) காலை சென்றடைந்தனர்.

தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் குழந்தைகளை வைத்துக் கொண்டு இலங்கையில் வாழ வழி இல்லாததால் தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக தெரிவித்தனர்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு 10 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து சென்ற அகதிகள் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments