Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

20 அடி உயரத்தில் கேமரூன் வீரர் அடித்த நம்ப முடியாத கோல்...!



மிக அருகிலேயே எதிரணியின் கோல் கீப்பர் நிற்கிறார். சில மீட்டர் தொலைவில் கோல்வலை இருக்கிறது. அப்போது கேமரூன் வீரர் வின்சென்ட் அபூபக்கர் செய்தது என்ன தெரியுமா? தலைக்கு மேலே சுமார் 20 அடி உயரத்துக்கு பந்தை காலால் தூக்கி வீட்டு ஒரு பரவளையப் பாதையில் அதை கோலுக்குள் அடித்தார்.

இந்த உலகக் கோப்பையில் பிரேசில் வீரர் ரிச்சார்லிசன், அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி ஆகியோர் அடித்த வியக்கத்தகுந்த கோல்களுடன் அபூபக்கரின் கோலும் வியந்து பேசப்படுகிறது.

செர்பிய அணியுடனான போட்டியில் தோற்றுப்போகும் என்று கருதப்பட்ட கேமரூன் அணி அதைத் தவிர்ப்பதற்கும் இந்த கோல் அடித்தளமானது.

இதை நம்பமுடியாத கோல் என்று கூறுவதற்கும் காரணமுண்டு. ஏனென்றால் கோல் அடித்தபோது அது ஆப்சைட் என்று முதலில் கருதப்பட்டது. கேமரூன் வீரர்கள் யாரும் கொண்டாடவில்லை. தொலைக்காட்சியில் வர்ணனை செய்து கொண்டிருந்தவர்களும் அது ஆப்சைட் என்றே கூறிக் கொண்டிருந்தார்கள். அந்த அளவுக்கு கோல் கீப்பரைத் தவிர வேறு எந்த வீரரும் இல்லாத இடத்தில் இருந்து அபூபக்கர் ஓடிக் கொண்டிருந்தார்.

கள நடுவரும் முதலில் ஆப்சைட் என்றே அறிவித்தார். காணொளி உதவியுடன் சரிபார்த்தபிறகு அதே கோல் என்பது உறுதியானது.

கோல் மழையில் நனைந்த போட்டி

செர்பியாவுடன் கேமரூன் அணி மோதிய ஜி பிரிவு ஆட்டம் இரு தோல்வியடைந்த அணிகளுக்கு இடையேயான ஆட்டம் என்பதில் பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை என்றுதான் கூற வேண்டும். கேமரூன் அணி ஏற்கெனவே சுவிட்சர்லாந்துடனும், செர்பியா அணி பிரேசிலுடனும் மோதி தோல்வியடைந்திருந்தன.

ஆனால் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டியே உலகக் கோப்பையின் 9-ஆவது நாளில் மிகவும் சுவாரஸ்யமான போட்டியாக இருந்தது. நீயா, நானா என்பது போல் இரு அணிகளும் மாறி மாறி கோல்களை அடித்து கடைசி நிமிடம் வரைக்கும் போட்டியை விறுவிப்பாகக் கொண்டு சென்றன. கேமரூன் அணி சிறிது நேரம் ஆதிக்கம் செலுத்தியது என்றால், அடுத்து சிறிது நேரத்துக்கு செர்பிய அணி ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தது.

போட்டியின் 29-ஆவது நிமிடத்தில் கேமரூன் அணியின் காஸ்ட்டலெட்டோ முதல் கோலை அடிக்க அந்த அணி முன்னிலை பெற்றது. ஆனால் பாதி ஆட்டத்தின் முடிவில் தாமதங்களுக்காக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து செர்பிய அணி கேமரூனை திணறடித்தது.

இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் செர்பியாவின் அலெக்ஸாண்டர் மித்ரோவிச் மற்றொரு கோலை அடித்தார். இதனால் 3க்கு 1 என்ற கோல் கணக்கில் செர்பிய அணி முன்னிலை பெற்றிருந்தது.



அபூபக்கரின் சாகசம்

அந்த நேரத்தில்தான் அதிசயம் ஒன்றை நிகழ்த்தினார் கேமரூன் வீரர் வின்சென்ட் அபூபக்கர். அது ஆட்டத்தின் 64-ஆவது நிமிடம். மாற்று வீரராகக் களமிறங்கிய அபூபக்கர், மைதானத்தின் கோலுக்கு வெகுதொலைவில் இருந்து பந்தைப் பெற்று செர்பிய கோலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

தொலைக்காட்சியில் பார்த்தவர்களுக்கு சில விநாடிகளுக்கு பரந்து விரிந்த புல்வெளியில் அபூபக்கர் பந்தைக் கொண்டு செல்வது மட்டும் தேரிந்திருந்திருக்கும். அந்த அளவுக்கு யாருமே இல்லாத வெளியில் அவர் ஓடிக்கொண்டிருந்தார்.

பின்னர் செர்பிய வீரர் மேக்சிமோவிக் அபூபக்கரிடம் இருந்து பந்தைப் பறிப்பதற்கு முயன்றார். ஆனால் அதைச் தடுத்து மிகவும் அமைதியாக பந்தை தரையோடு தரையாக வைக்கும் வகையில் அதை மேல்புறமிருந்து தட்டினார் அபூபக்கர். செர்பிய வீரர் பந்து கிடைக்காமல் தரையில் சரிந்து வீழ்ந்தார். பெனால்டி பாக்ஸுக்குள் பந்து வந்ததும் செர்பிய கோல் கீப்பர் கோல்வலையில் இருந்து ஓடிவந்து அபூபக்கரை இடைமறித்து நின்றார்.

உடனே பந்தை நேராக உதைத்து கோலுக்குள் தள்ளுவதற்கு அபூபக்கர் முயற்சிக்கவில்லை. மாறாக சுமார் 7 அடி உயரம் கொண்ட கோல்கீப்பரின் தலைக்கு மேலே கிட்டத்தட்ட செங்குத்தாகச் செல்லும் வகையில் பந்தைத் தூக்கிவிட்டார். அது சுமார் 20 அடி உயரம் வரைப் பறந்து, பரவளையப் பாதையில் பயணித்தது. கோல் கம்பத்துக்கு சற்று முன்பாக தரையில் விழுந்தது. பின்னர் கோல்வலையின் உள்புற மேல் பகுதியில் மோதி கோலுக்குள் அடக்கமானது.



அபூபக்கர் அடித்த பந்து இன்னும் சற்று உயரமாகச் சென்றிருந்தாலும் இரண்டாவது முறையில் அது கோலுக்குள் சென்றிருக்க வாய்ப்பில்லை. அந்த அளவுக்குத் துல்லியமான ஷாட்டாக அது அமைந்துவிட்டது.

இத்தகைய சாகசம் புரிந்திருந்தாலும் அது கோலாக இருக்கும் என்று பெரும்பாலானவர்கள் முதலில் நம்பவில்லை. செர்பிய கோல்கீப்பர் எந்தக் கவலையும்படாமல் பந்தை சாதாரணமாக எடுத்துவந்தார். அபூபக்கரும் கோல் அடித்துவிட்டதாக நினைத்துக் கொண்டாடவில்லை. கள நடுவரும் ஆப்சைட் என அறிவித்துவிட்டார். காணொளி மூலம் சரிபார்த்த பிறகுதான் அது கோல் என அறிவிக்கப்பட்டது.

அந்த சமயத்தில் செர்பிய அணிக்கு அந்த கோல் மிகவும் முக்கியமானதாக இருந்தது. கடைசியில் 3-3 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்தது.

Post a Comment

0 Comments