நியூசிலாந்து அணி 47.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் மட்டும் இழந்து இலக்கை கடந்து அபாரவெற்றிபெற்றது.
நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. அதன்படி இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க்கில் இன்று நடக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். நிதானமாக ஆடிய இந்திய ஜோடி முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் சுப்மன் கில் 50 ரன், ஷிகர் தவான் 72 ரன் எடுத்து அடுத்தடுத்து ஓவர்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இதையடுத்து களம் புகுந்த ரிஷப் பண்ட் 15 ரன்னிலும், அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் 4 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதையடுத்து ஷ்ரேயஸ் அய்யருடன், சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை நிதானமாக ஆடியது. இதில் சாம்சன் 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வாஷிங்டன் சுந்தர் களம் இறங்கினார்.
சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அய்யர் 80 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதிரடியாக ஆடிய வாஷிங்டன் 16 பந்தில் 37 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 306 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் பெர்குசன், சவுதி தலா 3 விக்கெட்டும் , மில்னே 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பின் ஆலன் 22 ரன்களும், டிவோன் கான்வே 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். டேரில் மிட்சேல் 11 ரன்னுக்கு அவுட்டானார்.
இதையடுத்து கேப்டன் வில்லியம்சனுடன் டாம் லாதம் ஜோடி சேர்ந்தார். இந்த இணை சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தியது. தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய லாதம், அரைசதம் கடந்தபின் அதிரடி காட்டினார். அவர் 104 பந்துகளில் 19 பவுண்டரி, 5 சிக்சருடன் 145 ரன்கள் குவித்தார். அவருக்கு பக்கபலமாக நின்று விளையாடிய வில்லியம்சன் 94 ரன்கள் குவித்தார். இருவரையும் ஆட்டமிழக்க இந்திய பந்துவீச்சாளர்கள் பயன்படுத்திய வியூகங்கள் கடைசி வரையில் பலனளிக்கவில்லை.
இதனால் நியூசிலாந்து அணி 47.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் மட்டும் இழந்து இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரவெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
0 Comments