துருக்கியின் வருடாந்த பணவீக்கம் கடந்த ஒக்டோபர் மாதத்தில் 85.51 சதவீதமாக அதிகரித்துள்ளதை உத்தியோகபூர்வ தரவுகள் இன்று (03) வெளிப்படுத்தியுள்ளன. 1997 ஆம் ஆண்டின் பின்னர் துருக்கில் ஏற்பட்ட மிக அதிகளவு பணவீக்கம் இதுவாகும்.
துருக்கியில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவதற்கு வழக்கத்துக்கு மாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை ஜனாதிபதி தாயீப் ஏர்டோவான் ஆதரித்து வருகிறார்.
விலை உயர்வுகளை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியாக உலகெங்கும் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை அதிகரித்து வருகின்றன.
ஆனால், உயர் வட்டி வீதமானது தனது மிகப் பெரிய எதிரி என ஜனாதிபதி தாயீப் ஏர்டோவான் கூறுகிறார்.
துருக்கிய மத்திய வங்கி கடந்த மாதம் 3 ஆவது தடவையாக வட்டி விதத்தை குறைத்தது. 12 சதவீதத்திலிருந்து 10.5 சதவீதமாக வட்டி வீதம் குறைக்கப்பட்டது.
வட்டி வீதங்கள் அதிகரிப்பதால் பணவீக்கம் குறைவடையாமல் மேலும் அதிகரிக்கிறது என ஜனாதிபதி ஏர்டோவான் வாதாடுகிறார். இது பாரம்பரிய பொருளியல் கோட்பாடுகளுக்கு முரணானதாகும்.
துருக்கியில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments