Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

மரக்கறி விதைகளின் விலையை கட்டுப்படுத்த முறையான ஒழுங்குபடுத்தல் இல்லை...!


நாட்டில் மரக்கறி விதைகளின் விலையை கட்டுப்படுத்துவதற்கு முறையான ஒழுங்குபடுத்தலொன்று இல்லாமை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய (COPA) குழுவில் புலப்பட்டது.

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் தலைமையில் நேற்று (08) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் புலப்பட்டது. இதன்போது மரக்கறி விதைகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வதன் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் இதில் கமத்தொழில் அமைச்சு உள்ளிட்ட பல தரப்பினர் கலந்துகொண்டனர்.



1997 இல் "விதைகள் மற்றும் நடுகைப் பொருட்கள் கைத்தொழில் தொடர்பான அரச கொள்கை" தயாரிக்கப்பட்டிருந்தாலும் அதனை 2021 ஜனவரி 01 வரை வர்த்தமானி ஊடாக வெளியிடாமை தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது. 

மேலும், 2003 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க விதைச் சட்டம் தொடர்பிலும் இதன்போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் அதில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளாமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. இதற்கமைய விதைகளை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறையில் அனுமதி வழங்கப்பட்டுள்ள ஒரு சில நிறுவனங்கள் காணப்படுவதுடன் அந்த நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்படும் விதைகளின் விலைகளை கட்டுப்படுத்த தேவையான முறைமையொன்று இந்த சட்டத்தில் உள்வாங்கப்படவில்லை என இங்கு புலப்பட்டது.



இதுவொரு பாரதூரமான நிலைமை என குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இதனால் உள்நாட்டு மரக்கறி விவசாயிகள் கடுமையான அசௌகரியத்துக்கு உள்ளாவதாகவும் இது ஒரு மாபியாவாகும் என்றும் உறுப்பினார்கள் சுட்டிக்காட்டினர். அதனால் இந்த நிலைமையை கட்டுப்படுத்த முறைமை ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் எனவும், அதன்மூலம் உள்நட்டு மரக்கறி விவசாயிகளுக்கு மலிவு விலையில் மரக்கறி விதைகளை பெற்றுக்கொள்ள முடியுமான முறையொன்று தயாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.



அதேபோன்று உள்நாட்டு மரக்கறி விவசாயிகளுக்கு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி விதைகளை வழங்குவதன் விகிதாசாரம் தொடர்பில் திருப்தி அடைய முடியாது என்று இதன்போது கோபா குழு சுட்டிக்காட்டியது. 

உள்நாட்டு மரக்கறி விதைகளின் தேவையில் அதிகமான அளவு உற்பத்தி செய்வதற்கும் மலிவு விலையில் வழங்குவதற்கும் விவசாயத் திணைக்களம் உள்ளிட்ட அரச துறை நடவடிக்கை எடுப்பதாகவும், எனினும் ஒரு சில விதைகளை உற்பத்தி செய்வது ஒரு சில காலநிலை நிலைமைகளின் கீழ் முடியாமல் உள்ளதால் அவ்வாறான விதைகளை இறக்குமதி செய்வதாகவும் இதற்குப் பதிலளிக்கும் வகையில் வருகை தந்த அதிகாரிகள் தெரிவித்தனர். அதனால் அவ்வாறான விதைகளை இறக்குமதி செய்வதற்கு தனியார் நிறுவனங்கள் சிலவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.



மேலும் உற்பத்தி செய்வதற்கு கடினமான கலப்பு விதை வகைகளை தொழில்நுட்பப் பயன்பாட்டுடன் உற்பத்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். விசேடமாக ஒரு சில விதைகளை உற்பத்தி செய்வதற்குத் தேவையான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு சுமார் பத்து வருடங்கள் செல்வதாகவும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அதற்கமைய, விதைகளை உற்பத்தி செய்வதற்குக் காணப்படும் தடைகள் தொடர்பில் அறிக்கை ஒன்றையும், ஊழியர்களை இணைத்துக் கொள்வதற்கு காணப்படும் தடைகள் தொடர்பில் அறிக்கை ஒன்றையும், விதைகளின் கேள்விக்கு அமைய உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் விதை வகைகள் மற்றும் இறக்குமதி செய்யப்படும் விதை வகைகளின் விகிதாசாரங்கள் தொடர்பில் மூன்று வருடகால தகவல்கள் உள்ளடங்கிய அறிக்கை ஒன்றையும், விதைகளின் விலைகளை கட்டுப்படுத்துவதற்காக உரிய சட்டம் மற்றும் கொள்கையை ஒழுங்குபடுத்துவதன் மூலம் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலும் அறிக்கை ஒன்றை இரண்டு வாரங்களுக்குள் கோபா குழுவுக்கு வழங்குமாறு குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் பரிந்துரை வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவண்ண, மொஹான் பிரியதர்ஷன டி சில்வா, டயனா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, நிரோஷன் பெரேரா, அசோக் அபேசிங்க, புத்திக்க பதிரன, (வைத்திய கலாநிதி) சுதர்ஷனி பர்னாந்துபுல்லே, ஜே.சி. அலவதுவல, ஹெக்டர் அப்புஹாமி, (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments