Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

கமல் ஹாசனின் பிறந்த நாள் இன்று : நடிப்புக்கு சவால் விடும் கலைஞன்...!


உலக நாயகன் கமல் ஹாசன் இன்று தனது 68ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.

அசாதாரண நடிப்பு, கதை, திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு, பாடல், நடனம் என தமிழ் சினிமாவில் யாதுமாகி நிற்கும் ஆதர்ச நாயகன், உலக சினிமாவின் Encyclopedia `உலகநாயகன்’ கமல்ஹாசனின் 68-வது பிறந்தநாள் இன்று. உலகமே வியக்கும் அக்கலைஞனின், அசாத்திய பெருமைக்கு மிக முக்கிய ஒரு காரணம் அவரது திரை அறிவு. குறிப்பாக அவர் தன்னை தானே வடிவமைத்துக்கொண்ட விதம்.தமிழ் சினிமாவில் ஹீரோக்களின் கேரக்டர் ஆர்க் பெரும்பாலும் சில டெம்பிளேட்களில் அடங்கி விடும். கல்லூரி மாணவன், இளவயது காதலன், நல்லது செய்யும் ஊர் பெரிய மனிதர், சோதனைகளை எதிர்கொண்டு அதை சாதனைகளாக்கும் நல்லவன், போலீஸ் அதிகாரி, டான் என சில டெம்பிளேட்களிலேயே தமிழ் சினிமா ஹீரோக்களின் கேரக்டர் ஆர்க் அடங்கிவிடும். 

கமல்ஹாசன் தன் ஆரம்பகால கட்ட படங்களில் இருந்தே இந்த டெம்பிளேட்டிற்குள் அடங்காமல் தன் ஹீரோ கேரக்டர் ஆர்க் இருக்க வேண்டும் என நினைத்தார். அதற்கு முக்கிய காரணம் கே.பாலச்சந்தர் மற்றும் கமலுக்கு கிடைத்த மலையாள பட வாய்ப்புகள்.அதுபோக அவரது இலக்கிய பரிட்சயமும் அவருக்கு பல கேரக்டர்களை பரீட்சித்துப் பார்க்க உதவியது. செவாலியர் சிவாஜி கணேசனுக்குப் பிறகு, ஏன் அவர் ஏற்காத கேரக்டர்களைக் கூட கமல்ஹாசன் ஏற்று நடித்திருக்கிறார். அப்படி அவர் ஏற்று நடித்த கேரக்டர்களில் முக்கியமான ஒரு பிரிவு மனநிலை பாதிக்கப்பட்ட, மூளை வளர்ச்சி குறைந்தவர்களாக வரும் கேரக்டர்கள். ஒரு நிகழ்ச்சியில் கமல் சொல்வார், "நானும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை என் படங்களில் சித்தரித்து இருக்கிறேன். அவர்களை கேலிப் பொருளாக அல்ல; நாயகர்களாக" என்று சொல்வார். 

அந்த கேரக்டர்களை திரையில் கொண்டு வந்து சென்சிடிவாக அவர்களின் வலியை பார்வையாளனுக்கு கடத்துவது கடினமான ஒன்று. அதை கமலால் எளிதாகச் செய்ய முடிந்ததற்கு காரணம் அவருக்குள் இருந்த திரைக்கதை ஆசிரியன்.இரண்டரை மணி நேரப் படத்தில் நான்கைந்து பாடல்கள், ஒரு காமெடி ட்ராக் எனப் போய்விட்டால் 70-80 காட்சிகளே தேறும். அவற்றை புதிதாக, க்ளிஷே இல்லாமல் எழுதினால் தான் புதிதான ஒரு கேரக்டரை நம் மனதில் நிறுத்த முடியும். இல்லாவிட்டால் அது பத்தோடு பதினொன்றாய் போய் நம் மனதில் எந்த ஒரு இம்பாக்டையும் ஏற்படுத்தாமல் போய் விடும். 

கமல் நடித்த பல கேரக்டர்கள் பலர் மனதில் இருந்தும் அகலாமல் இருக்கக் காரணமே அந்த கேரக்டர்களுக்குத் தேவையான எழுத்துப் பின்புலமும் அதை நேர்த்தியாக திரையில் பிரதிபலித்ததும்தான்.

அது போல கமல் நடித்த சில மனநலம், மூளை வளர்ச்சி தொடர்பான கேரக்டர்கள் தமிழ்சினிமா வரலாற்றில் மறக்க முடியாதவை. அவற்றில் சிலவற்றை இக்கட்டுரையில் பார்க்கலாம்.

சிகப்பு ரோஜாக்கள்

பெண்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி, அதனால் சமுதாயத்தால் தண்டிக்கப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்ட கதாபாத்திரம். தனக்கு ஆதரவளித்தவரும் பெண் செய்த துரோகத்தால் பாதிக்கப்பட இன்னும் வீறு கொண்டு எழுகிறது அந்த மிருகம். 

இரையைத் தேடும் புலி எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் பதுங்கியே இருப்பது போல அந்த மிருகத்தை ஒளித்து வைத்து விட்டு சமூகத்தில் இயல்பாக உலா வரும் வேடம். அந்த வேடத்தை மிசச்சிறப்பாக செய்திருப்பார். ஒரு எலைட் பிஸினஸ் மேனாக, பின் பெண்களை பாலியல் துன்புறுத்தி கொல்பவனாக, தவறு உணர்ந்து வாடுபவனாக ஒரு முழுமையான சுற்றாக அந்த கேரக்டர் அமைக்கப்பட்டிருக்கும். அதை அனாயாசமாக கையாண்டிருப்பார்.உல்லாசப் பறவைகள்

காதலி தீ விபத்தில் இறந்து விட அதனால் மனநலம் பாதிக்கும் இளைஞனின் வேடம் கமலுக்கு. பின் சிகிச்சைக்காக வெளிநாடு சென்று, குணமாகித் திரும்பும் வேடம்.கல்யாண ராமன்

மூளை வளர்ச்சி குறைந்த பாத்திரம். இன்னொரு கேரக்டர் வழக்கமான கேரக்டர். இரண்டிற்கும் நடை, உடை பாவனைகள் மட்டுமில்லாது, எத்துப்பல், வாய்ஸ் மாடுலேசன் என மெனக்கெட்டிருப்பார். மூளை வளர்ச்சி குறைந்தவனுக்கு வரும் காதல், அது தொடர்பான அடுத்தடுத்த நிகழ்வுகள், ஏன் அவனுக்கு ஒரு நல்லது நடக்கக்கூடாது என்ற கேள்வி வரும் வகையில் அந்தக் கேரக்டர் அமைக்கப்பட்டு இருக்கும்.சுவாதி முத்யம்

இந்தப் படம் இன்னும் ஸ்பெஷல். மூளை வளர்ச்சி குறைந்த ஒருவன், அவன் கணவனை இழந்து கஷ்டப்படும் ஒரு பெண்ணின் துன்பத்தை நீக்க அவளை மணக்கிறான். கடைசி வரை அவளை ஒரு ராணியாக உணரவைத்து தன் முயற்சியில் வெற்றி பெறுகிறான். கமல் நடித்த ஏராள வித்தியாச கேரக்டர்களில் இந்தப்படத்திற்கு தனி இடம் உண்டு.குணா

ஒரு ஆணுக்கு மிகப்பெரிய வலியைத் தரும் வசவு வார்த்தை பாலியல் தொழிலாளி மகன் என்பது. அதுவே வாழ்க்கையாக இருந்தால் எவ்வளவு சிதைவு அடையும் அவன் மனது? அந்த சிதைவை, அதனால் அவன் அனுபவிக்கும் வேதனையை திரையில் கொண்டு வந்திருப்பார் கமல். அதில் இருந்து வெளியில் வர அவன் என்ன முயற்சிகளை எடுக்கிறான், அதில் வெற்றி பெற்றானா? என அந்தச் சூழலில் வளர்ந்த ஒருவனின் சித்திரம் தான் குணா.தெனாலி

இலங்கையில் இருந்த போர்ச்சூழலால் மன பாதிப்படைந்த ஒருவனின் கதை. நகைச்சுவைப் படம் என்றாலும் அவன் வேதனை, அவன் பக்க நியாயங்கள், அவன் மீண்டு வருவது என தேவையற்ற மன பயம் கொண்டவர்களின் உருவமாக கமல் இருப்பார் இந்தப் படத்தில்.


 
ஆளவந்தான்

தாய் இறந்து விட, தந்தையாலும், சித்தியாலும் கொடுமைக்கு ஆளாகி மனச்சிதைவுக்கு ஆளாகும் வேடம். தாய் தவிர மற்ற பெண்கள் எல்லாமே கொடுமைக்காரிகள் என்கிற சித்திரம் மனதில் படிந்து விட, தன் உடன்பிறந்தவனின் மனைவியையே கொல்ல முயற்சிக்கிறான். அந்த முயற்சிக்கு தன் உடன்பிறந்தவனே தடையாய் வர அவனையும் கொல்ல முயற்சிக்கும் சிக்கலான மன சிதைவு கொண்ட வேடம்.இது போன்ற கேரக்டர்கள் தவிர மூன்றாம் பிறை படத்தில் விபத்தால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்றி குணப்படுத்தும் வேடம், நாயகன் படத்தில் தன்னால் கொல்லப்பட்டவனின் மகன் ஒரு மூளை வளர்ச்சி குறைந்தவன் என அறிந்து அவனை பரிவுடன் பார்த்துக் கொள்வது என காட்சி அமைத்திருப்பார்.

மனநிலை பாதிக்கப்படுவது ஒரு நோய். அதற்கு சிகிச்சையும் பரிவும் தான் தேவையே தவிர கிண்டல் அல்ல. போலவே மூளை வளர்ச்சி குறைபாடும், சம்பந்தப்பட்டவர்களி தவறு அல்ல. சமூகம் அவர்களை ஆதரிக்க வேண்டும் என்ற மறைமுகச் செய்தி அவரின் படங்களில் இருக்கும்.

68ஆவது பிறந்தநாளை கொண்டாடும் உலக நாயகனுக்கு ஸ்டார் வானொலியின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

Post a Comment

0 Comments