Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

"நாங்கள் இலங்கைக்கு செல்லமாட்டோம்" - வியட்நாமிலுள்ள இலங்கை அகதிகள் தெரிவிப்பு : இருவர் தற்கொலைக்கு முயற்சி…!!

 

கனடாவுக்கான சட்டவிரோத கப்பல் பயணத்தை மேற்கொண்டு பிலிப்பைன்ஸ் கடலில் மீட்கப்பட்ட சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என மீண்டும் வலியுறுத்தியுள்ளதுடன், சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களில் இருவர் வெள்ளிக்கிழமை (நவ 18) தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் கடற்பரப்பில் கடந்த 7ஆம் திகதி மீட்கப்பட்ட 300 க்கு மேற்பட்ட இலங்கை அகதிகள் இன்று வரை வியட்நாம் பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன், அவர்களுக்கான அடிப்படை வசதிகளை சர்வதேச அமைப்புகள் மூலமாக வியட்நாம் அரசாங்கம் செய்து வருகின்றது.

இவ்வாறு மீட்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களை நாட்டுக்கு கொண்டுவர வியட்நாம் அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றது. 

இந்நிலையில் அடுத்த வாரமளவில் முதற்கட்டமாக குறிப்பிட்ட சிலர் இலங்கையின் குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் மூலம் மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டு, 14 நாட்கள் அல்லது ஒரு மாத காலப்பகுதியில் சிறை வைக்கப்பட்டு, 2 பிணை அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்த அறிவிப்புகளை வியட்நாமுக்கு இலங்கை அரசாங்கம் தெரியப்படுத்தியுள்ளது. 

இதனையடுத்து, வியட்நாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களிடமும் இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வியட்நாமில் உள்ள அகதிகள், தங்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும் தம்மை ஐக்கிய நாடுகள் சபையிடமோ அல்லது கனேடிய அரசாங்கத்திடமோ ஒப்படைக்குமாறு மீண்டும் வியட்நாம் அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

இதன்படி இலங்கையில் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது; அதனால் வாழ முடியாத சூழ்நிலை தாய்நாட்டில் நிலவுகிறது; ஆகவே தம்மை இலங்கைக்குத் திருப்பி அனுப்ப வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதனை எழுத்துமூலமாகவும் வழங்கியுள்ளனர்.

எனினும், இரு நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு சார் விடயங்களை வியட்நாம் அதிகாரிகள் அகதிகளிடத்தில் தெளிவுபடுத்தியுள்ளனர். 

அதன்படி, அவர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை வியட்நாம் அதிகாரிகள் மேற்கொண்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு இலங்கை அகதிகள் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். 

தற்கொலைக்கு முயன்ற அவ்விருவரும் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments