Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

10 மாதங்களின் பின்னர் மத்தளைக்கு வந்த பயணிகள் விமானம்..!



மத்தளை சர்வதேச விமான நிலையத்திற்கு 10 மாதங்களின் பின்னர் விமானம் ஒன்று இன்று வருகை தந்தது.

துறைமுகம், கப்பற்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விமானத்தில் வந்தவர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு சென்றிருந்தார்.

ரஷ்யாவின் Red Wings நிறுவனத்திற்கு சொந்தமான விமானமே மத்தளை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருந்தது.

ரஷ்யாவின் மொஸ்கோவில் இருந்து 412 சுற்றுலாப் பயணிகளுடன் குறித்த விமானம் வந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதற்காக, துறைமுகம் , கப்பற்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் விமான நிலைய அதிகாரிகள் பலரும் சென்றிருந்தனர்.

சுற்றுலாப் பயணிகளை வரவேற்ற அமைச்சர், கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தனது முழுமையான முயற்சியினால் ரஷ்யாவிலிருந்து சுற்றுலாப் பயணிகள் மத்தளைக்கு வருகை தந்துள்ளதாக ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.

Red Wings விமான நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதியாக திலக் வீரசிங்க செயற்படுவதுடன், அவரின் ஒத்துழைப்புடனேயே ரஷ்யாவிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இதனிடையே, மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை விஸ்தரிக்கவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

210 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில், சீன கடன் திட்டத்தின் கீழ் மத்தளை சர்வதேச விமான நிலையம் கடந்த 2013 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

வெள்ளை யானை திட்டமாக பாரியளவில் விமர்சிக்கப்பட்ட இந்த விமான நிலையம், 2015 ஆம் ஆண்டின் ஆட்சி மாற்றத்தின் பின்னர் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் நெல் களஞ்சியப்படுத்தும் இடமாக அடையாளப்படுத்தப்பட்டது.

பின்னர் மத்தளை விமான நிலையத்தின் களஞ்சியசாலைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மதிப்பிடுவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அப்போதைய பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவும் அந்த ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் கோட்டாபய ராஜபக்ஸ அரசாங்கத்தில் விமான நிலையங்களுக்கு பொறுப்பான அமைச்சராக நியமிக்கப்பட்ட பிரசன்ன ரணதுங்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நடத்திய கூட்டத்தில் விமான நிலையத்திற்கு ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக ஆய்வு செய்து, அறிக்கை தயாரிக்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.

எனினும், இன்று என்ன நடந்துள்ளது?

வெள்ளை யானை என்று விமர்சித்து, நெற்களஞ்சியசாலையாக மாற்றுமாறு உத்தரவிட்டவர்களே தற்போது ஆட்சிப்பீடம் ஏறியுள்ளனர்.

அதனை விசாரிக்குமாறு அறிவுறுத்தல் விடுத்த சிலர் அமைச்சுப் பதவிகளை வகிக்கின்றனர்.


THANKS: NEWS1ST

Post a Comment

0 Comments