கடந்த 2014-ம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘ஜிகர்தண்டா’. சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் தன்னுடைய மிக நேர்த்தியான நடிப்பார் எல்லோரையும் கவர்ந்திருந்தார் பாபி சிம்ஹா. அவரது சினிமா கேரியரில் அசால்ட் சேது கதாபாத்திரம் ஒரு பெஞ்ச் மார்க். மதுரையை களமாக கொண்ட கதையில் இயக்குநர் காத்திக் சுப்புராஜ் மிரட்டியிருப்பார். திரைக்கதை அவ்வளவு நேர்த்தியாக செதுக்கப்பட்டிருக்கும். சித்தார்த் மற்றும் பாபி சிம்ஹா கதாபாத்திரங்களை சமன் செய்யும் அளவிற்கு சித்தார்த்திற்கு க்ளைமேக்ஸ் காட்சிகள் அமைந்திருக்கும். படத்தின் 90 சதவீதம் வரை பாபி சிம்ஹா தான் லீட் ரோல். கடைசியில் வரும் ட்விஸ்ட் மூலமாகத்தான் சித்தார்த் கேரக்டருக்கு ஹைப் கிடைக்கும்.
சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய பாபி சிம்ஹா அவ்வாண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். இந்தப் படம் வெளியாகி 8 ஆண்டுகளை நிறைவு தினத்தன்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ வெளியிட்டிருந்தார். அதில், ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும் தற்போது அதற்கான திரைக்கதையை எழுதி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகு ஜிகர்தண்டா தொடர்பான செய்திகள் அவ்வவ்போது கசிந்து வந்தது. அதனை தொடர்ந்து ஜிகர்தண்டா 2 படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருந்தார். அப்பொழுதில் இருந்து இணையத்தில் இந்தப் படம் தொடர்பான டாக் அனல் பறந்தது.
இந்நிலையில், ஜிகர்தண்டா 2-ம் பாகத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜிதர்தண்டா டபுள் -X எனப் பெயரிடப்பட்டுள்ளது. மிகவும் வித்தியாசமான முறையில் இந்த டீசர் உருவாக்கப்பட்டுள்ளது.
டீசரின் துவக்கத்தில் ஒரு குளத்தின் கரையில் உள்ள பனைமர திட்டில் எஸ்.ஏ.சூர்யா வந்து அமர்கிறார். குளத்திற்கு அருகில் உள்ள குடிசையில் ஒரு இரும்பு அடித்துக் கொண்டிருக்கிறார். அந்த அறையில் யானைத்தந்தங்கள் மற்றும் இரும்பு ஆயுதங்கள் நிறைந்துள்ளன. வெளியே இருக்கும் எஸ்.ஏ.சூர்யா மவுத் ஆர்கன் வாசிக்கிறார். அந்த இசையைக் கேட்டு இரும்பு அடித்துக் கொண்டிருந்தவர் திரும்புகிறார். அப்பொழுது வித்தியாசமான கெட்டப்பில் லாரன்ஸ் நம்மை மிரட்டுகிறார். இரண்டு கைத்துப்பாக்கிகளுடன் லாரன்ஸ் வெளியே வருகிறார். ஏதோ ஒரு ப்ரீயட் படம் போலவே எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் தோற்றம் இருக்கிறது. இருவரும் ஒருவகையான கவு பாய் கெட்டப்பில் இருக்கிறார்கள்.
எஸ்.ஏ.சூர்யாவின் பின்னால் இருந்து பெரும் கூட்டம் ஒன்று லாரன்ஸை நோக்கி ஓடி வருகிறது. குளத்தில் இறங்கி ஆக்ரோஷமாக ஓடி வருகிறார்கள். ஓடி வருபவர்களில் பல்வேறு தரப்பினர் இருக்கிறார்கள். போலீஸ்காரர்கள், ஆயுதங்களுடன் உள்ளூர் மக்கள், அரசியல்வாதிகள் போல் வெள்ளை வேஷ்டி சட்டையுடன் ஒரு கூட்டம் முகத்தில் தேசியக் கொடியுடன், சிலர் குதிரைகளில் லாரன்ஸை நோக்கி ஓடி வருகிறார்கள்.
அவர்கள் அருகில் நெருங்கிய உடன் தன் கையில் இருந்த கைத் துப்பாக்கிகளை கீழே போட்டு விட்டு மண்ணிற்கடியில் இருந்து கேமராவை கையில் எடுக்கிறார் லாரன்ஸ். அதனை க்ளிக் செய்வதுடன் டீசர் முடிகிறது. ஜிகர்தண்டா படத்தின் மாஸ் ஆன பிஜிஎம் உடன் முடிகிறது. டீசருக்கு முந்தைய போஸ்டரில் லாரன்ஸ் கையில் துப்பாக்கியும், எஸ்.ஏ.சூர்யா கையில் கேமிராவும் இருக்கும். டீசரின் முடிவில் கைத் துப்பாக்கி இருந்த லாரன்ஸ் கையில் கேமிரா வரும். கேமிரா என்பது பத்திரிக்கை துறை, சினிமா துறை, புகைப்படத்துறை என எதனுடனும் சேர்த்து பார்க்கலாம்.
எஸ்.ஜே.சூர்யா, லாரன்ஸ் காம்போ எதிர்பார்த்திராத ஒன்று. முந்தைய படத்தில் இருந்த எதுவும் இல்லை. சந்தோஷ் நாராயணன் இசையில் மிரட்டி இருக்கிறார். இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
0 Comments