மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒரு சினிமா, உங்கள் மனதைத் துளைக்கும் கேள்விகளை எழுப்பியிருந்தால்?... பாடல் வரிகளில் பாமரர்களின் வலிகள் பேசப்பட்டிருந்தால்?... மரபு, பாரம்பரியம் என பின்பற்றப்பட்டு வந்தவை கேள்விக்குள்ளாக்கப் பட்டிருந்தால்?... அது, இயக்குநர் பா.ரஞ்சித்தின் படமாகத்தான் இருக்கும்...
வட சென்னை மாயபிம்பத்தை தகர்த்த பெருமை:
கற்பிதங்களை கட்டுடைப்பதற்காக காலம் தேர்ந்தெடுத்த கலகக்கார கலைஞன் தான், இந்த பா.ரஞ்சித்.. 2012 ஆம் ஆண்டு ‘அட்டகத்தி’ திரைப்படம் மூலமாக அறிமுகமாகி சினிமாவில் பட்டா கத்தியாக அடியெடுத்து வைத்த இவர், இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.
எதைச் சொன்னால் எதிர்ப்பு வரும் என கருத்து சினிமாவில் இருந்ததோ? அந்த கருத்துகளை எல்லாம் எதிர்த்து சமரசமில்லாமல் களமாடி இவர், மாய பிம்பத்தை தகர்த்தெறிந்த மக்களின் இயக்குநராகியிருக்கிறார்.
ரஞ்சித்தின் வருகையை தமிழ் சினிமாவில் இரு பகுதிகளாக பிரிக்கலாம்... சாதி ஆதிக்கம் போற்றப்பட்டு வந்த சினிமாவின் இயல்பைக் குலைத்து, எதிர்வாதம் செய்தவர் பா.ரஞ்சித்.
ராயபுரம், காசிமேடு, வடசென்னை என்றாலே, அங்கு கொலைகாரர்களும், கஞ்சா விற்பவர்களும், கள்ளக் கடத்தல் செய்பவர்கள் மட்டுமே இருப்பார்கள் என்ற பொதுபிம்பத்தை கட்டமைத்து வைத்திருக்கிறது, தமிழ் சினிமா...
ஆனால், அங்குள்ள உழைக்கும் மக்களின் எதார்த்த வாழ்வை, அதன் அழகியல் குறையாமல் ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் காட்சிப்படுத்தி கவனத்தை ஈர்த்திருப்பார் ரஞ்சித்...
சினிமாவில் அரசியல்:
அரசியல்வாதிகள் தங்கள் கருத்துகளை சொல்ல சினிமாவை பயன்படுத்துவதுண்டு... ஆனால், ரஞ்சித்தோ தான் நம்பும் அரசியலை அழுத்தமாக பேச சினிமாவை பயன்படுத்திக் கொண்டார்.
அதற்கு உதாரணமாக ரஜினிகாந்தின் ‘கபாலி’ படத்தைச் சொல்லலாம்... தன் 3 ஆவது படத்திலேயே உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு கிடைத்தபோதும், ரஜினிகாந்த் எனும் மாஸ் நடிகருக்காக கதையில் எவ்வித சமரசத்தையும் செய்து கொள்ளாத ரஞ்சித், திரைத்துறையின் பேசுபொருள் ஆனார்.
எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் தான் நம்பும் கருத்தியலை துணிச்சலுடன் முன்வைப்பதுதான் ரஞ்சித்தின் ஸ்டைல்... ‘கபாலி’ படத்தில் உழைக்கும் மக்களுக்கான அரசியலை பேசியதைப் போலவே, அவரின் அடுத்த திரைப்படமான ‘காலா’விலும், ரஜினிகாந்தை வைத்து அதே அரசியலை தயங்காமல் பேசினார்.
கதாநாயகிகளை கவர்ச்சிக்காக பயன்படுத்தும் சினிமாவில், அவர்களை ஆணாதிக்கத்துக்கு எதிராக கேள்வி எழுப்பும் கதாபாத்திரங்களாக கட்டமைத்த ரஞ்சித், வசனங்களை எல்லாம் கேள்விக் கணைகளாகியிருக்கிறார்.
மாஸ் ஹீரோ இயக்குநர் பிம்பம்:
ரஜினிகாந்த் எனும் மாஸ் ஹீரோதான் ரஞ்சித்தின் வெற்றிக்கு காரணம் என்ற கருத்து சினிமாவில் நிலவியபோது, அதை ‘சார்பட்டா பரபம்பரை’யின் மூலம் தகர்த்தெறிந்தார்.
குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம், தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பல்வேறு கதாபாத்திரங்களை ஒன்றிணைத்து ஒரு காட்சிக்குள் கொண்டுவந்த ரஞ்சித், அதில் ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் நிற்கும்படி வடிவமைத்த விதத்தில், அவரின் தனித்திறன் வெளிப்பட்டது.
காட்சிகளில் மட்டும் கதை சொல்வது ரஞ்சித்தின் வழக்கமல்ல... கதையோடு சேர்ந்த பாடல்களையும் தன் ஆட்டங்களாக்கிக் கொண்ட அதிரடி இயக்குநர் இவர். உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்னைகள்... அவர்களின் அழகிய வாழ்வியலை இயல்புத்தன்மையோடு இசையில் சேர்த்துவிடும் மாயம் தெரிந்தவர் ரஞ்சித்... அதற்கு பக்கபலமாக துணை நின்றவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்...
பா. ரஞ்சித் - சந்தோஷ் நாரயணன் கூட்டணி:
தமிழர்களின் பாரம்பரிய இசையான பறை இசையை பாடல்களில் பிரதானப்படுத்தியதில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு முக்கிய பங்கு உண்டு. துக்க நிகழ்வுகளுக்கான இசை என்றாக்கப்பட்டுவிட்ட பறையிசையை, கொஞ்சம் வெஸ்டன் ஸ்டைலில் கலந்து திருமண வீடுகளில் ஒலிக்க வைத்தது, பா.ரஞ்சித்- சந்தோஷ் நாராயணனின் வெற்றிக் கூட்டணி..
‘சார்பட்டா பரம்பரை’யைத் தொடர்ந்து ‘நட்சத்திரம் நகர்கிறது’ எனும் படத்தை இயக்கி வெளியிட்டார், பா.ரஞ்சித். ‘LOVE IS POLITICAL’ எனும் ஒன்லைனோடு வெளியான அத்திரைப்படம் பல்வேறு விதமாக விமர்சனங்களைப் பெற்றது.
ரஞ்சித்தின் அடுத்த அடி என்ன என்று தமிழ் சினிமா உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் சூழலில், நடிகர் விக்ரமை வைத்து ‘தங்கலான்’ படத்தை இயக்கும் பணியில் பிசியாக இருக்கிறார்.
பொது சமூகத்தால் எள்ளி நகையாடப்படும் எளிய மனிதர்கள், புறக்கணிக்கப்படும் உணவுகள் என சினிமாவில் இதுநாள் வரை தவிர்க்கப்ட்டவற்றை எல்லாம் துணிச்சலோடு காட்சிகளாக்கி, உரையாடலை உருவாக்கியவர் பா.ரஞ்சித். எவருக்கும் பொதுவான நீல வானத்தைப் போல், அதன் கீழ் இருக்கும் அனைவரும் இயற்கையின் முன் சமம் என்பதை, தன் ஒவ்வொரு படைப்புகளை பதிவு செய்து கொண்டே இருக்கிறார், கலகக்கார கலைஞன் பா.ரஞ்சித்.
0 Comments