37 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ, உலகின் மிகச் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான பெலோன் டி'ஓர் விருதை 5 தடவைகள் வென்றவர். கால்பந்தாட்டத்தில் பல சாதனைகளை அவர் படைத்துள்ளார்.
ஸ்பெய்னின் ரியல் மட்றிட் கழகத்தில் 2009 முல் 2018 ஆம் ஆண்டு வரை விளையாடி வந்த ரொனால்டோ, 2018 ஆம் ஆண்டு இத்தாலியின் ஜுவென்டஸ் கழகத்தில் இணைந்தார். கடந்த வருடம் அவர் தனது முந்தைய கழகமான இங்கிலாந்தின் மென்செஸ்டர் யுனைடெட்டில் மீண்டும் இணைந்தார்.
இங்கிலாந்தின் மென்செஸ்டர் யுனைடெட் கழகத்தில் அவர் விளையாடி வந்த நிலையில், அக்கழகத்தின் பயிற்றுநர் எரின் டென் ஹக் மற்றும் நிர்வாகிகளை ரொனால்டோ விமர்சித்தார்.
அதன்பின் மென்செஸ்டர் யுனைடெட்லிருந்து ரொனால்டோ விலகிவிட்டார் என கடந்த நவம்பர் 23 ஆம் திகதி அக்கழகம் அறிவித்தது.
தற்போது உலகக்கிண்ணப் போட்டிகளில் போர்த்துகல் அணிக்குத் தலைமை தாங்கும் ரொனால்டோ, அதன்பின் புதிய கழகமொன்றில் இணைவற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், சவூதி அரேபிய கழகமான அல் நாசரில் ரொனால்டோ இணைவற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக ஏ.எவ்.பி. செய்திச் சேவையிடம் அக்கழக வட்டாரங்கள் நேற்று தெரிவித்துள்ளன.
எதிர்வரும் ஜனவரி முதல் ஒரு பருவகாலத்துக்கு சுமார் 200 மில்லியன் யூரோ (சுமார் 7,750 கோடி இலங்கை ரூபா, சுமார் 1,725 கோடி இந்திய ரூபா) பெறுமதியான ஒப்பந்தத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கையெழுத்திடவுள்ளார் என ஸ்பெய்னின் பத்திரிகையான மார்கா தெரிவித்துள்ளது.
எனினும், இதுவரை ஒப்பந்தம் எதுவும் கையெழுத்திடப்படவில்லை என அல் நாசர் கழக வட்டாரங்கள், ஏ.எவ்.பியிடம் தெரிவித்துள்ளன.
சவூதி அரேபிய கழகமொன்றுடன் பெரும் ஒப்பந்தமொன்றில் கையெழுத்திடும் வாய்ப்பை தான் நிராகரித்ததாக ரொனால்டோ முன்னர் கூறியிருந்தார்.
இதேவேளை, உலக்ககிண்ணத்தில், ரொனால்டோ தலைமையிலான போர்த்துகல் அணி இன்று சுவிட்ஸர்லாந்துடன் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளைநம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
0 Comments