தென்கொரியா உடனான வெற்றியை பீலேவுக்கு சமர்ப்பிப்பதாக பிரேசில் கால்பந்து ஜாம்பவான் நெய்மர் உருக்கமாக கூறினார்.
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஐந்து முறை சாம்பியனான பிரேசில், தென் கொரியாவை எதிர்கொண்டது. இதில், பிரேசில் அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஆசிய அணியை வீழ்த்தி தொடர்ந்து எட்டாவது முறையாக காலிறுதிக்கு முன்னேறியது.
இந்த போட்டியில் காயத்தில் இருந்து மீண்ட பிரேசில் ஜாம்பவான் நெய்மர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த போட்டியில் பிரேசில் அணிக்கு கிடைத்த பெனல்டி வாய்ப்பை நெய்மர் கோலாக்கினார். இந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நெய்மரின் முதல் கோல் இதுவாகும், இந்த கோல் மூலம் அவர், பிரேசில் அணியின் முன்னாள் கால்பந்து ஜாம்பவான்களான பீலே மற்றும் ரொனால்டோ ஆகியோரின் சாதனை பட்டியலில் இணைந்தார்.
இதுவரை நெய்மர் பங்கேற்றுள்ள மூன்று உலகக் கோப்பை போட்டிகளிலும் கோல் அடித்த மூன்றாவது பிரேசில் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இதையடுத்து இந்த போட்டி முடிந்த பிறகு காயத்தில் இருந்து மீண்டு வந்தது குறித்து பேசிய நெய்மர், “மருத்துவமனையில் இருக்கும்போது, என் மனதில் கோடிக்கணக்கான எண்ணங்கள் அலைமோதிக் கொண்டிருந்தன. மீண்டும் உலகக் கோப்பையில் விளையாடுவேனா என்ற அச்சம் என்னை ஆட்கொண்டு விட்டது. என்னுடைய சக வீரர்கள், குடும்பத்தினர் ஆகியோரின் எல்லையற்ற ஆதரவு எனக்கு இருந்தது. அதனால், என்னை நானே மீட்டுக் கொண்டு வந்தேன். என்னுடைய உடல் குறித்து வந்த வாழ்த்து செய்திகள் நான் மீண்டுவர உதவியாக இருந்தது' என்று கூறிய அவர், இந்த வெற்றியை பீலேவுக்கு சமர்ப்பிக்கிறேன் என உருக்கமாக கூறினார்.
வெற்றிக்கு பின்னர் பிரேசில் வீரர்கள் பீலே பெயரும், புகைப்படமும் கொண்ட பேனருடன் வலம் வந்தனர். அத்துடன், மைதானத்திலேயே அசத்தலாக நடனமும் ஆடினர்.
0 Comments