Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

"திருப்பி அடி”.. வெங்கட்பிரபு, வெற்றிமாறன், பா.ரஞ்சித் குரலில் மிரட்டும் ’ரத்தம்’ பட டீசர்...!



தமிழ் சினிமாவில் ‘தமிழ்படம்’ மூலம் Parody வகை படத்தை அறிமுகம் செய்தவர் சி.எஸ்.அமுதன். அந்தப் படத்தில் ஏராளமான தமிழ்பட காட்சிகளை கிண்டல் செய்திருந்தார். இதனால் மிர்ச்சி சிவா நடித்த ‘தமிழ்படம்’ பெரும் வெற்றியடைந்தது. இதையடுத்து அவர் இயக்கத்தில் தமிழ்படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கினார். அந்தப் படமும் வெளியாகி பெரும் வெற்றியடைந்தது. இதன்பின் சிறிய இடைவெளி எடுத்துக்கொண்ட சி.எஸ்.அமுதன், விஜய் ஆண்டனி நடிப்பில் 'ரத்தம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இதற்கான படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்திலே முடிவடைந்ததாக தகவல் வெளியானது. பின்னர், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இந்த டீசரில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான வெங்கட்பிரபு, வெற்றிமாறன், பா.ரஞ்சித் ஆகியோர் வசனங்கள் பேசுவதுபோல் இடம்பெற்றுள்ளன. டீசரின் தொடக்கத்தில், வெங்கட் பிரபு, “நம்ல நெறைய பேர் விரும்புறதே அமைதியான, சிம்பிளான வாழ்க்கையதான்; வேலை, குடும்பம், குழந்தைனு ஒரு சில குழந்தைகள் நல்லபடியா அமைஞ்சிட்டாலே நாம்ம எல்லாரும் சந்தோஷமா வாழ்ந்து முடிச்சிட்டு போயிடுவோம்” என்று சொல்கிறார்.



அவரைத் தொடர்ந்து, “நம்ம எதிர்பார்க்கிற அந்த அமைதியான வாழ்க்கை, எல்லாருக்கும் எல்லா நேரத்திலும் கெடச்சிடறதுல்ல. இன்னிக்கு ஒரு நொடியில நம்ம வாழ்க்கை தலைகிழா மாத்தப்படுமா?. நம்ம சாப்பிடுற சாப்பாடு, போட்ற ட்ரெஸ், நம்ம கும்புடுற சாமி, நம்ம பேசுற மொழி, இப்படி நம்முடைய அடையாளங்களே நமக்கு எதிரியா மாத்தப்படலாம். ஏன்னா இங்க யார் யாருக்கு அமைதியான வாழ்க்கை தரணும்னு எழுதப்படுற அதிகாரம் நமக்கு தரப்படல” என்று வெற்றிமாறனும்,

பின்னர், “அதுக்காக யாரோ எழுதுற எல்லா விதிகளை நம்ம கண்ண மூடிக்கிட்டு, கைய கட்டி, வாய பொத்தி பின்பற்றணும்னு எந்த அவசியமில்லை. இங்க சாதாரண வாழ்க்கையைக் கூட போராடிதான் வாங்கணும். அந்த போராட்டத்துக்கு இந்த ஊரோட, இந்த நாட்டோட ஏன் இந்த உலகத்தோட வரலாறையே மாற்றக்கூடிய வலிமை இருக்கிறது” என்று பா.ரஞ்சித்தும் பேசுவது போல் வசனங்கள் இடம்பெற்றுள்ளன.



சிஎஸ் அமுதனின் முந்தைய படங்கள் போல் அல்லாமல் வித்தியாசமான கதைக்களத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக டீசரை பார்க்கும்போது தெரிகிறது. விஜய் ஆண்டனி வித்தியாசமான கெட்டப்பில் மிரட்டி இருக்கிறார். மஹிமா, நந்திதாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நந்திதா போலீஸ் அதிகாரியாக சிகரெட் பிடித்துக் கொண்டு நடிப்பில் அட்டகாசப்படுத்தியிருக்கிறார். டீசரை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
 


Post a Comment

0 Comments