கத்தார் கால்பந்து உலகக்கோப்பை தொடரின் காலிறுதிப்போட்டியில் மொராக்கோ அணியுடனான தோல்வியை சந்தித்ததின் எதிரொலியாக, பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸை போர்ச்சுகல் பிரிந்துவிட்டதாக போர்ச்சுகல் கூட்டமைப்பு (FPF) அறிவித்துள்ளது.
2022 கத்தார் கால்பந்து உலகக்கோப்பை தொடரில் தென் கொரியாவிற்கு எதிரான காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில், நட்சத்திர வீரர் ரொனால்டோவை பெஞ்சில் அமரவைத்து போர்ச்சுகல் அணியை ஆடவைத்தார் பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸ். அந்த போட்டியின் போதே ஏமாற்றத்தை சந்தித்த ரசிகர்கள் ரொனால்டோ என மைதானத்திலேயே கோஷத்தை ஏற்படுத்தினர். மேலும் சமூக வலைதளங்களில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இருப்பினும் தென்கொரியாவிற்கு எதிரான அந்த போட்டியில் ரொனால்டோவிற்கு பதிலாகக் களமிறங்கிய மாற்று வீரரான கோன்கலோ ராமோஸ் ஹாட்ரிக் கோல்கள் அடித்து 6-1 என்ற கணக்கில் போர்ச்சுகல் வெற்றிப்பெற்றது.
என் யுக்தியை தான் நான் பயன்படுத்துவேன்!
சப்ஸ்டியூட்களுக்கான பிரிவில் நட்சத்திர வீரர் ரொனால்டோ அமரவைக்கப்பட்டது குறித்து பேசியிருந்த பயிற்சியாளர் ஷாண்டோஸ், “ எனக்கு என்ன யுக்தி சரியென படுகிறதோ, நான் எதை நம்புகிறேனோ அதைத்தான் களத்தில் பயன்படுத்துவேன். என் வாழ்நாள் முழுவதும் அதையே பின்பற்றி வந்துள்ளேன்” என்று தெரிவித்தார்.
ரொனால்டோ இல்லாத காலிறுதி : 0-1 என போர்ச்சுகல் தோல்வி
காலிறுதிக்கான போட்டியில் ரொனால்டோ முதலில் இருந்தே களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எல்லோருடைய எதிர்பார்ப்பையும் மீண்டும் உடைத்திருந்தார் பயிற்சியாளர் ஷாண்டோஸ். ரொனால்டோ இல்லாத போர்ச்சுகல் அணிக்கு எதிராக முதல் பாதிலேயே ஒரு கோல் அடித்து அசத்தியது மொராக்கோ அணி. பின்னர் சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய மொராக்கோ, போர்ச்சுகல் அணியை இறுதிவரை கோலடிக்கவே விடவில்லை. பிற்பாதிக்கு பிறகு ரொனால்டோ இறக்கப்பட்டாலும் அது போர்ச்சுகல் அணிக்கு கைக்கொடுக்கவில்லை. இறுதியில் காலிறுதியில் 0-1 என்று தோல்வியடைந்து வெளியேறியது போர்ச்சுகல்.
ரொனால்டோவை அமரவைத்த முடிவில் வருத்தம் இல்லை!
உலகக்கோப்பையிலிருந்து வெளியேறிய பிறகும் ரொனால்டோவை அமரவைத்ததற்கு வருத்தமில்லை என்று தெரிவித்தார் பயிற்சியாளர் சாண்டோஸ். அணிக்கு என்ன தேவையோ அதைத்தான் செய்தேன் என்று கூறியிருந்தார்.
பயிற்சியாளர் ஷாண்டோஸ் உடன் பிரிவதாக அறிவித்த போர்ச்சுகல்!
உலகக்கோப்பை காலிறுதிப்போட்டியில் வெளியேறியதின் எதிரொலியாக மேலாளர் பெர்னாண்டோ சாண்டோஸை போர்ச்சுகல் பிரிந்துவிட்டதாக போர்ச்சுகல் கூட்டமைப்பு (FPF) அறிவித்துள்ளது. அடுத்த சுழற்சிக்கான முக்கியமான தருணம் என்று தெரிவித்துள்ளது. 2024 யூரோ தொடர் வரை ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஷாண்டோஸ் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.
வெளியேறிய பிறகு 2 நபர்களுக்கு நிச்சயம் வருத்தமிருக்கிறது என்று கூறிய ஷாண்டோஸ்!
"போட்டியில் தோற்றதற்காக மிகவும் வருத்தப்பட்ட இரண்டு நபர்களை எடுத்துக் கொண்டால் அது கிறிஸ்டியானோ ரொனால்டோவும் நானும் தான். நிச்சயமாக நாங்கள் வருத்தப்படுகிறோம், ஆனால் அது பயிற்சியாளர் மற்றும் வீரரின் வேலையின் ஒரு பகுதியாகும்" என்று தெரிவித்துள்ளார்.
68 வயதான சாண்டோஸ், 2014 இல் போர்ச்சுகல் மேலாளராக பொறுப்பேற்றார் மற்றும் யூரோ 2016ன் இறுதிப் போட்டியில் போர்ச்சுகல் பிரான்சை தோற்கடித்த போது, அவர்களை முதல் சீனியர் சர்வதேச பட்டத்திற்கு வழிகாட்டினார்.
0 Comments