Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்குள் நுழையுமா அர்ஜென்டினா? குரோஷியாவுடன் இன்று மோதல்...!

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணி இன்று அரைஇறுதியில் குரோஷியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

தோகா,

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணி இன்று அரைஇறுதியில் குரோஷியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

கால்பந்து போட்டி

கத்தாரில் நடந்து வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக், 2-வது சுற்று, கால்இறுதி முடிவில் இப்போது அர்ஜென்டினா, நடப்பு சாம்பியன் பிரான்ஸ், குரோஷியா, மொராக்கோ ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளன.

இந்த நிலையில் லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் இன்றிரவு (செவ்வாய்க்கிழமை) அரங்கேறும் முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினா அணி, குரோஷியாவுடன் மோதுகிறது.

உலக தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் அர்ஜென்டினா லீக் சுற்றில் தொடக்கத்தில் சவுதி அரேபியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றது. அதன் பிறகு மெக்சிகோ, போலந்தை தோற்கடித்து நாக்-அவுட் சுற்றை எட்டிய அர்ஜென்டினா 2-வது சுற்றில் ஆஸ்திரேலியாவை விரட்டியது. வாக்குவாதம், மோதல், நடுவரின் இடைவிடாது எச்சரிக்கை என்று அனல் பறந்த கால்இறுதியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் நெதர்லாந்தை வீழ்த்தியது.

கேப்டன் லயோனல் மெஸ்சி (4 கோல்), ஜூலியன் அல்வாரஸ், என்ஜோ பெர்னாண்டஸ், அலெக்சிஸ் மாக் அலிஸ்டர், நாகெல் மொலினா உள்ளிட்டோர் அந்த அணியில் நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆடுகிறார்கள். முந்தைய ஆட்டத்தில் ஹீரோவாக ஜொலித்த கோல் கீப்பர் எமிலியானா மார்ட்டினஸ் அந்த அணிக்கு இன்னொரு பலமாகும். இரண்டு முறை மஞ்சள் அட்டை பெற்ற மார்கஸ் அகுனா, கோன்ஸலோ மான்டியல் இன்றைய ஆட்டத்தில் விளையாட முடியாது.

குரோஷியா எப்படி?

12-ம் நிலை அணியான குரோஷியா நடப்பு தொடரில் தோல்வியே சந்தித்தது இல்லை. லீக் சுற்றில் ஒரு வெற்றி, 2 டிரா வுடன் 2-வது இடத்தை பிடித்த அந்த அணி 2-வது சுற்றில் ஜப்பானையும், கால்இறுதியில் 'நம்பர் ஒன்' அணியான பிரேசிலையும் போட்டுத் தாக்கியது. பிரேசிலுக்கு எதிராக தோல்வியின் விளிம்பில் இருந்த அந்த அணி கூடுதல் நேரத்தில் 117-வது நிமிடத்தில் கோல் போட்டு சமநிலைக்கு கொண்டு வந்ததுடன், பெனால்டி ஷூட்-அவுட்டில் வெற்றிக்கனியை பறித்தது.

கடந்த உலகக் கோப்பையில் இறுதி சுற்றில் தோல்வியை தழுவிய குரோஷியா இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை. கேப்டன் லூகா மோட்ரிச், மேட்டியோ கோவாசிச், மார்செலோ பிரஜோவிச் நடுகளத்தின் ஆணிவேராக உள்ளனர். இவான் பெரிசிச்சும் அசத்துகிறார். இவர்களை தாண்டி கோல் அடிப்பது அவ்வளவு எளிதல்ல. இந்த உலகக் கோப்பையில் 6 கோல்கள் போட்டுள்ள குரோஷியா 3 கோல் மட்டுமே வாங்கியுள்ளது.

குரோஷியாவை பொறுத்தவரை தடுப்பாட்டத்தில் சாதுர்யமாக செயல்படக்கூடிய ஒரு அணி. வழக்கமான நேரம் மற்றும் கூடுதல் நேரத்தில் சமநிலையுடன் ஆட்டத்தை நகர்த்தினால் அதன் பிறகு பெனால்டி ஷூட்-அவுட்டில் அவர்களை அடக்குவது கடினம். கடந்த உலகக் கோப்பையில் 2 முறை பெனால்டி ஷூட்-அவுட்டில் வெற்றி பெற்ற குரோஷியா, இந்த உலக கோப்பையிலும் ஜப்பான், பிரேசிலை பெனால்டி ஷூட்-அவுட்டில் தான் சாய்த்திருக்கிறது. பிரேசிலுக்கு எதிராக 11 ஷாட்டுகளை தடுத்து நிறுத்திய கோல் கீப்பர் டொமினிக் லிவாகோவிச் குரோஷியாவின் தற்காப்பு அரணாக உள்ளார். உலகக் கோப்பையில் பெனால்டி ஷூட்-அவுட்டில் அந்த அணி இதுவரை தோற்றதில்லை என்பது கவனிக்கத்தக்கது.

மெஸ்சியின் மேஜிக் தொடருமா?

இரு அணிகளும் சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் களத்தில் சூடுதெறிக்கும் என்று நம்பப்படுகிறது. புகழ்பெற்ற லயோனல் மெஸ்சிக்கு உலகக் கோப்பை கனவு நிறைவேற இதுவே கடைசி வாய்ப்பாகும். ஏற்கனவே நட்சத்திர வீரர்கள் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிரேசிலின் நெய்மார் தோல்வியால் கண்ணீர் மல்க மூட்டையை கட்டினர். அந்த சோக வரிசையில் சிக்காமல் மெஸ்சி, மேஜிக்காட்டுவாரா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

1978, 1986-ம் ஆண்டுகளில் உலக கோப்பையை வென்றுள்ள அர்ஜென்டினா அரைஇறுதியில் ஒரு போதும் வீழ்ந்ததில்லை. அந்த பெருமையோடு 6-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதிக்கும் உத்வேகத்துடன் வியூகங்களை தீட்டி வருகிறது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Post a Comment

0 Comments