சங்க இலக்கியப் பாடல்களில் இடம்பெற்றுள்ள ‘ஜல்லிக்கட்டு’ என்பது தமிழர்களின் கலாச்சார அடையாளங்களில் ஒன்று என ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தனது வாதத்தை முன் வைத்துள்ளது.
ஜல்லிக்கட்டு வழக்கு ஐந்தாவது நாளாக உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி ஆஜராகி வாதங்களை முன் வைத்தார். அதில், “இந்தியா ஒரு பன்முக கலாச்சாரம் கொண்ட நாடு. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு கலாச்சாரம் உண்டு. சிலர் அசைவ உணவு உண்பர், சிலர் சைவம், சிலர் வீகன் என்ற உணவு பழக்கத்தை கொண்டுள்ளனர்.
உணவுக்காக விலங்குகளை கொல்ல அனுமதிக்கப்படுகிறது. அதேவேளையில் சில கட்டுப்பாடுகள் உள்ளனவே தவிர, உண்ணக்கூடாது என்று சட்டம் கூறவில்லை. ஜல்லிக்கட்டு விதிமுறைகள் அனைத்தும் மிகத் தெளிவாக உள்ளது. அதில் எந்த சமரசமும் செய்யப்படுவதில்லை” என பதிலளித்தார்.
உணவு என்பது மிக மிக அத்தியாவசியமான விஷயம், அதை இதனுடன் எப்படி ஒப்பிடுவது என நீதிபதிகள் கேட்டபோது, அதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், “உணவு பழக்கம் என்பது கலாச்சாரத்தோடு இணைந்தது, எனவே ஒருவர் பின்பற்றிவரும் கலாச்சாரத்தால் அவருக்கு ஒரு உணவு பழக்கம் ஏற்படுகிறது. கலாச்சாரம், பண்பாடு என்பது அடிப்படை உரிமையாகும். ஆதலால் எங்களுக்கு ஜல்லிக்கட்டு என்பது அவசியமானது, ஏனெனில் ஜல்லிக்கட்டு தமிழகத்தின் கலாச்சாரத்தோடு, பண்பாட்டோடு ஒன்றிணைந்தது” எனக் கூறினார்.
ஜல்லிக்கட்டு கலாச்சாரம் சார்ந்த விஷயம் என்பதற்கான ஆவணங்களை தமிழ்நாடு சமர்பிக்க விலங்குகள் நல அமைப்பு எதிர்ப்பு தெரிவித்ததோடு, தங்களிடம் ஆவணங்கள் எதையும் கொடுக்கவில்லை, எனவே நீதிமன்றம் பரிசீலிக்கக்கூடாது என தெரிவித்தனர்.
“கலாச்சாரத்தை காப்பது என்பது அந்தந்த அரசுகளின் கடமை, இதை அரசியல் சாசனமும் பிரிவு 29-ல் தெளிவாகக் கூறியுள்ளது, அந்த அடிப்படையில் ஜல்லிக்கட்டு என்ற தமிழர்களின் கலாச்சாரத்தை காப்பது, தமிழ்நாடு அரசின் கடமை மட்டுமல்ல, பொறுப்பும் கூட” என தமிழ்நாடு அரசு வாதம் உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. மேலும் “ஜல்லிக்கட்டு என்பது ஜாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. ஜல்லிக்கட்டு என்பது பொங்கல் தினத்தன்று நடைபெறக்கூடியது. இது சிறந்த விளைச்சலை கொடுத்ததற்காக இயற்கைக்கு நன்றி கூறும் திருவிழா.
பல கோயில்களில் இதனை அடுத்து திருவிழாக்கள் கொண்டாடப்படும் தமிழகத்தின் சமயம் மற்றும் இறை நம்பிக்கை சார்ந்த நிகழ்வும் கூட. ஜல்லிக்கட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது தமிழ்நாட்டின் கலாச்சார அடையாளமும் கூட. அதனால்தான் ஒவ்வொரு முறையும் பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கலாச்சாரத்தை தெரிந்து கொள்ள நேரடியாக ஜல்லிக்கட்டை காண வருகிறார்கள். ஜல்லிக்கட்டு தொடர்பான ஏராளமான சுடுமண் சிற்பங்கள் உள்ளிட்டவையும் தொல்பொருள் ஆய்வுகளில் கிடைத்திருக்கிறது. சங்க காலத்து தமிழ் இலக்கியங்களான தொல்காப்பியம், கலித்தொகை உள்ளிட்டவற்றில் ஏறு தழுவுதல் என்ற பெயரில் ஜல்லிக்கட்டின் முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது” என்று தமிழ்நாடு அரசு விரிவான வாதங்களை முன் வைத்தது.
“பல பல்கலைக்கழக ஆய்வுகளும், தமிழ்நாடு என்ற மாநிலத்தின் கலாச்சார அடையாளம் ஜல்லிக்கட்டு என்பதை நிரூபித்துள்ளது. புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளரான ரோமீலா தாபர், தனது புத்தகத்தில் ஒரு இனத்தின் கலாச்சார தொடர்புகள் குறித்து தெளிவாக வரையறுத்துள்ளார். அவை அத்தனையும் ஜல்லிக்கட்டுக்கு பொருந்தி செல்கிறது” என தரவுகளையும் மேற்கோள் காட்டி வாதம் முன்வைக்கப்பட்டது. ஒரு ஆண்டிற்கு சராசரியாக எத்தனை போட்டிகள் நடத்தப்படுகிறது என நீதிபதிகளை கேட்டபோது, “ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் என்பது நடத்தப்படும்.
ஒரு கிராமத்திற்கு ஒருமுறை மட்டுமே நடத்த அனுமதி 396 ஜல்லிக்கட்டு போட்டிகளும், சுமார் 1,15,000 காளைகளும் இந்த ஆண்டு தமிழக முழுவதும் கலந்து கொண்டுள்ளது. ஆனால் வெறும் ஏழே இடங்களில் சில புகைப்படங்களை எடுத்துவிட்டு ஜல்லிக்கட்டு முழுமையாக விதிமுறை மீறி நடத்தப்படுகிறது என விலங்குகள் அமைப்புகள் சொல்வது நகைப்புக்குரியது” என தமிழ்நாடு அரசு கூறியது.
“5000 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளைகள் ஈடுபடுத்தப்படுகிறது. ஆனால் திடீரென குதிரைகள் போன்று காளைகள் ஓடும் விலங்கு அல்ல. எனவே அதனை களத்தில் ஓட விடுவது என்பது துன்புறுத்தல் எனக் கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்வது” என தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியதோடு, ஜல்லிக்கட்டு தொடர்பான புகைப்பட ஆதாரங்களையும் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
தொடர்ந்து மத்திய அரசு சார்பில் ஆஜரான சோலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “ஜல்லிக்கட்டுக்கு குடியரசுத் தலைவர் அனுமதி வழங்கியது சட்டப்பூர்வமானது. நாங்கள் அரசுகளின் முடிவுக்கு ஆதரவாக இருக்கிறோம். ஏனெனில் மாவட்ட ஆட்சியர் முழு ஆய்வுக்குப் பிறகு தான் அனுமதி வழங்கப்படுகிறது. இதில் சட்ட விதிகள் மீறப்படுவர்களுக்கு மூன்று ஆண்டு சிறை, ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. தமிழக அரசின் கலாச்சாரம் தொடர்பான விவகாரத்தில் எப்படி தலையிட முடியும்” என துஷார் மேத்தா வினவினார். இன்றைய அலுவல் நேரம் முடிந்ததை எடுத்து வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
0 Comments