Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

பாஜகவை வீழ்த்தும் வல்லமை கொண்ட ஒரே கட்சி காங்கிரஸ் தான் - ராகுல் காந்தி


ராகுல் காந்தியின் பாதயாத்திரை இன்று 100-வது நாளை எட்டியுள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மராட்டியம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களை கடந்து தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் பாதயாத்திரை இன்று 100-வது நாளை எட்டியுள்ளது. இதனையடுத்து அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சி முடிந்து விட்டதாக நிறைய பேர் கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் அழிக்க முடியாது. என் வார்த்தைகளை குறித்து வைத்து கொள்ளுங்கள். பாஜகவை காங்கிரஸ் கட்சி நிச்சயம் வீழ்த்தும்.

எனக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது. காங்கிரஸ் காணாமல் போகிறது என்ற கருத்து பா.ஜ.க.வினரால் பரப்பப்படுகிறது. காங்கிரஸ் ஒரு கருத்தியல் சார்ந்த கட்சி, பாசிசத்திற்கு எதிராக உறுதியாக நிற்கிறது.

காங்கிரஸ் கட்சியிலிருந்து தலைவர்கள் வெளியேறுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,

சிலர் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேற விரும்பினால், சிலருக்கு பாஜகவை எதிர்கொள்ள தைரியம் இல்லை என்றால், அவர்கள் கட்சியை விட்டு வெளியேறுவது வரவேற்கத்தக்கது. எங்களுக்கு அவர்கள் வேண்டாம். காங்கிரஸ் கட்சியை நம்பி, பாசிசத்தை நம்பாதவர்களையே நாங்கள் விரும்புகிறோம்.

பாரத் ஜோடோ யாத்திரையின் போது, கட்சித் தொண்டர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் காங்கிரசை மிகவும் நேசிக்கிறார்கள் என்பதை நாங்கள் பார்த்தோம். ராஜஸ்தானில் கோஷ்டி பூசல் காரணமாக பாரத் ஜோடோ யாத்திரை தோல்வியடையும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதினர். ஆனால் இங்கு தான் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை. எங்கள் கட்சியில் சில நேரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன, எந்த பிரச்சனையும் இல்லை. நமது தொண்டர்களை சரியாக பயன்படுத்தினால், அடுத்த தேர்தலில் ராஜஸ்தானில் காங்கிரஸ் மகத்தான வெற்றியை உறுதிசெய்ய முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments