காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக கொழும்பு நகரின் ஒரு சில இடங்கள் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள வளிமண்டலத்தில் தூசு துகள்களின் அளவு, இன்று (08) கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது உடலுக்கு உகந்த நிலையில் அல்லாத அளவில் காணப்படுவதன் காரணமாக பரந்த வெளியிடங்களில் விளையாட்டுகளை தவிர்க்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் வளிமண்டலத்தில் உள்ள தூசித் துகள்களின் அளவு நாளைய தினமளவில் வழமைக்கு திரும்புமென எதிர்பார்ப்பதாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின், சுற்றாடல் திணைக்கள பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முகக்கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
குறித்த நிலைமையை அவதானிப்பதற்காக சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் இன்று கொழும்பின் பல பகுதிகளுக்கும் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பாறை, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், இரத்தினபுரி, கேகாலை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களிலும் இந்நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் (திருகோணமலைக்கு கிழக்காக சுமார் 360 கிலோ மீட்டர் தூரத்தில்) நிலை கொண்டுள்ள ஆழ்ந்த தாழமுக்கமானது, 'Mandous' என்ற ஒரு சூறாவளியாக வலுவடைந்து தற்போது வட அகலாங்கு 9.4 N இற்கும் கிழக்கு நெட்டாங்கு 84.1 E இற்கும் அருகில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலைமை காரணமாக, இன்றையதினம் (08) வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய, வடமேற்கு மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேக மூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
0 Comments