Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

USA: சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு புதிய கொரோனா கட்டுப்பாடுகள்...!



சீனாவிலிருந்து வருகை தரும் பயணிகளுக்கு புதிய கொரோனா கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி அமெரிக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது.

சீனாவில் முதன்முறையாக 2019ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா பெருந்தொற்றை கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்நாட்டு அரசின் பெருமுயற்சியால் கட்டுப்படுத்தப்பட்டது.

ஆனால், உலக நாடுகளில் தொற்று பரவ ஆரம்பித்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதில், அமெரிக்கா அதிகளவில் பாதிப்புகளை எதிர்கொண்டது.

கொரோனாவின் பல அலைகளை சந்தித்த பல நாடுகளும், ஊரடங்கு, தடுப்பூசி உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

இந்த நிலையில், இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர், குளிர்கால சூழலில் சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தினசரி தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

கடந்த முதலாம் திகதி முதல் 20ஆம் திகதி வரையிலான நாட்களில் சீனாவில் 24 கோடியே 80 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தகவல் கசிந்தது.

சீனாவில் பூஜ்ய கொரோனா கொள்கை தளர்த்தப்பட்ட பின்னர், இந்த மாதத்தின் முதல் வாரத்தில் 20 நாட்களில் 25 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவிய, சீனாவின் அரசு ஆவணங்கள் பற்றி கசிந்த தகவல்களை குறிப்பிட்டு ரேடியோ ப்ரீ ஆசியா தெரிவித்து இருந்தது.

இது சீன மக்கள் தொகையில் 17.65 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. சீனாவின் கொரோனா தடுப்பூசியான சினோவேக் போதிய எதிர்ப்பாற்றல் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், முதியவர்கள் தடுப்பூசி என்றாலே வேண்டாம் என தவிர்க்கின்றனர்.

ஊரடங்கும் வேண்டாம் என மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ஜின்பிங் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்க திணறி வருகிறது. எனினும், தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையை வெளியிட போவதில்லை என்று அரசு அறிவித்தது.

சீனாவில் அதிகரித்து வரும் தொற்றை முன்னிட்டு பல்வேறு நாடுகளும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.

இதேபோன்று, அமெரிக்காவும், சீனாவிலிருந்து வர கூடிய பயணிகளுக்கான புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை விதிப்பது பற்றி பரிசீலனை செய்து வருகிறது.

இதுபற்றி அந்நாட்டு அதிகாரி ஒருவர் கூறும்போது, சீனாவில் அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கையை பற்றி சர்வதேச சமூகத்தில் கவலை அதிகரித்துள்ளது. அந்நாட்டில், வைரசஸின் மரபணு தொடர் பற்றிய தகவல்கள் உள்ளிட்ட வெளிப்படையான தரவுகள் பற்றாக்குறையாக உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

ஜப்பான், இந்தியா மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகள் சீன பயணிகளிடம் புதிய கொரோனா விதிகளை கடைப்பிடிப்பது என்ற அறிவிப்பை வெளியிட்ட சூழலில் அமெரிக்காவும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

Post a Comment

0 Comments