Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

சவூதியில் மனித உரிமை பிரச்சினைகள் தொடர்பாக ரொனால்டோ குரல் கொடுக்கவேண்டும் என வலியுறுத்தல்..!


அல் நாசர் கால்பந்தாட்ட அணியில் பெருந்தொகை பணத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள உலகப் புகழ் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவூதி அரேபியாவில் மனித உரிமைகள் தொடர்பாக குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அல் நாசர் விளையாட்டரங்கில் பட்டாசு வெடிகள் கொழுத்தப்பட்டு இரசிகர்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில் போர்த்துக்கல் அணித் தலைவர் சுப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு பெரு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு பேசிய ரொனால்டோ, 'நாட்டினது வெற்றியிலும் நாட்டினது கலாசாரத்திலும் பங்காளியாக இருப்பேன்' என குறிப்பிட்டார்.



மென்செஸ்டர் யூனைட்டட் கழகத்தையும் அதன் பயிற்றுநர் எரிக் டென் ஹெக்கையும் கடுமையாக விமர்சித்ததை அடுத்து மென்செஸ்டர் யூனைட்டட் கழகத்திலிருந்து கடந்த நவம்பர் மாதம் 37 வயதான ரொனால்டோ வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து கத்தாரில் நடைபெற்ற பீபா 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் போர்த்துக்கல் அணியின் தலைவராக விளையாடிய ரொனால்டோ, அங்கும் அணி பயிற்றுநரிடம் முகத்தை சுழித்துக்கொண்டதால் ஒரு போட்டியில் மாற்று வீரராக விளையாட நேரிட்டது.



அதன் பின்னர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை ஒப்பந்தம் செய்ய ஐரோப்பிய கழகங்கள் ஆர்வம் கொள்ளவில்லை.

இந் நிலையில் சவூதி அரேபியாவின் அல் நாசர் கழகம் தனது கைகளை அகல விரித்து ரொனால்டோவுக்கு அழைப்பு விடுத்து ஒப்பந்தம் செய்துகொண்டது.

இதனை அடுத்து சவூதி அரேபியாவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ரொனால்டோ குரல் எழுப்ப வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

'சவூதி அரேபியாவை மெச்சுவதை விடுத்து அந் நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குரல் எழுப்ப பொது இடங்களை ரொனால்டோ பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என சர்வதேச மன்னிப்புச் சபையின் மத்திய கிழக்கு ஆய்வாளர் டானா அஹ்மத் தெரிவித்துள்ளார்.



'கொலை, பாலியல் வன்முறை, போதைப் பொருள் கடத்தல் ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு சவூதி அரேபியா தொடர்ச்சியாக மரண தண்டனை விதித்துவருகிறது. கடந்த வருடம் ஒரே தினத்தில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர்களில் பலர் நியாயமற்ற வகையில் விசாரணைக்குட்படுத்தப்பட்டவர்கள்' என சர்வசேத மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியது.



'மனித உரிமைகளைப் பாதுகாப்பவர்கள், பெண்கள் உரிமை ஆர்வலர்கள், பிற அரசியல் ஆர்வலர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிப்பதன் மூலம் கருத்துச் சுதந்திரம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட விடயங்கள் மீதான தங்களது ஒடுக்குமுறையை அதிகாரிகள் தொடர்கின்றனர்' எனவும் அந்த சபை தெரிவித்துள்ளது.

எனவே, 'ரொனால்டோ தனது புகழையும் அந்தஸ்தையும் சவூதியின் விளையாட்டுக் கருவியாக மாற்ற அமனுமதிக்கக்கூடாது. நாட்டில் உள்ள எண்ணற்ற மனித உரிமைப் பிரச்சினைகளைப்பற்றி பேசுவதற்கு அல் நாசர் கழகத்தில் இருக்கும் நேரத்தை அவர் பயன்படுத்தவேண்டும்' என சர்வதேச மன்னிப்புச் சபையின் மத்திய கிழக்கு ஆய்வாளர் டானா அஹ்மத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments