பென் கிவிர் கடுமையான பொலிஸ் பாதுகாப்புடன் (04) அல் அக்ஸா வளாகத்திற்குள் நுழைந்துள்ளார். இந்த வளாகம் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன பிரச்சினையில் முக்கிய புள்ளியாக உள்ளது.
பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவின் அரசு பதவி ஏற்று ஐந்து நாட்களே ஆன நிலையிலேயே இந்த பதற்ற சூழல் ஏற்பட்டுள்ளது
குன்றின் உச்சியில் இருக்கும் இந்த தலம், யூதர்களின் புனித இடம் என்பதோடு முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமாக உள்ளது. இந்த வளாகத்திற்குள் யூதர்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதோருக்கு செல்ல அனுமதி இருந்தபோதும் வழிபாடு நடத்த தடை உள்ளது.
இந்நிலையில் இந்த புனிதத் தலத்தில் முஸ்லிம்களின் உரிமையை பறிக்கும் முயற்சியாகவே யூதர்களின் வருகை உள்ளது என்று பலஸ்தீனர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் “எமது அரசு ஹமாஸின் எச்சரிக்கைக்கு அடிபணியாது” என்று பென் கிவிர் குறிப்பிட்டுள்ளார். அவரது செயல் “சிவப்பு எல்லையை” மீறுகிறது என்று ஹமாஸ் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“அல் அக்ஸா மீதான எந்த ஒரு அத்துமீறலும் நிலைமையைத் தீவிரப்படுத்தும் என்பதோடு ஆக்கரமிப்பு அரசு இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்” என்று ஹமாஸ் பேச்சாளர் அப்தல் லதீப் கனுவா கடந்த திங்கட்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த புனிதத் தலத்திற்கு யூதர்கள் செல்வதற்கான உரிமையை பென் கிவிர் நீண்ட காலமாகக் கோரி வருகிறார். “இந்தத் தலம் அனைவருக்கும் திறக்கப்பட்டுள்ளது. என்னை எச்சரித்துத் தடுக்க முடியும் என்று ஹமாஸ் நினைத்தால் காலம் மாறிவிட்டது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று பென் கிவிர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவின் அரபு மொழி பேச்சாளர் ஒபிர் ஜென்டல்மன் வெளியிட்ட வீடியோவில், பென் கெவிர் புனித தலத்தில் இருந்து வெளியேறிய பின் முழுமையாக அமைதி நிலவுவதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் பலஸ்தீனர்களுடனான நேரடியான மோதல் ஒன்றை தவிர்க்கும் வகையில் நேற்றுக் காலை நேரத்திலேயே பென் கிவிர் அல் அக்ஸா வளாகத்திற்குள் நுழைந்தார்.
எனினும் கடும்போக்கு அமைச்சர் பென் கெவிர் அல் அக்ஸா பள்ளிவாசலுக்குள் நுழைந்ததை கடுமையாகக் கண்டிப்பதாகவும் இது முன்னெப்போதும் காணாத ஆத்திரத்தையும் அபாயகரமான மோதலையும் தூண்டும் என்றும் பலஸ்தீன வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பென் கிவிர், அல் அக்ஸா வளாகத்திற்குள் நுழைய திட்டமிட்டிருப்பது பெரும் வன்முறையை தூண்டும் என்றும் பல உயிர்களை காவுகொள்ள வழிவகுக்கும் என்றும் இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான யயிர் லபிட் கடந்த திங்கட்கிழமை (02) எச்சரித்திருந்தார்.
2000 ஆம் ஆண்டு இந்த புனித தலத்திற்குள் முன்னாள் பிரதமர் ஏரிய ஷரோன் நுழைந்தது இரண்டாவது பலஸ்தீன இன்திபாதா அல்லது எழுச்சிப் போராட்டத்திற்கு காரணமானது.
நான்கரை ஆண்டுகள் நீடித்த அந்தப் போராட்டத்தில் மூவாயிரத்துக்கும் அகதிமான பலஸ்தீனர்களும் ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர்.
பலஸ்தீனர்கள் தொடர்பில் தீவிர வலதுசாரி சிந்தனையைக் கொண்டிருக்கும் பென் கிவிர் அவர்களை இடம்பெயரும்படி அழைப்பு விடுக்கின்றார். அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்கு அவர் இதற்கு முன்னர் பல தடவை யூதக் குடியேறிகளுடன் இணைந்து நுழைந்துள்ளார். அது கடந்த காலங்களில் பலஸ்தீனர்களுடனான மோதலுக்குக் காரணமாக இருந்தது.
இதில் 2021 மே மாதம் அல் அக்ஸா வளாகத்திற்குள் இஸ்ரேலியப் படையினர் நுழைந்த சம்பவமே அந்த மாதத்தில் இஸ்ரேல் மற்றும் காசா மோதலுக்குக் காரணமானது.
பென் கிவிர் தற்போது இஸ்ரேலிய பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடுநிலை மற்றும் நம்பகத்தன்மையான செய்திகளுக்கு...
0 Comments