Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக-பாஜக கூட்டணியில் தொடர் குழப்பமா.?


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு என்ற கேள்வியைவிட, அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரண்டு அணிகளும் போட்டியிட முன்வந்துள்ளதால், இந்தத் தேர்தலில் யார் போட்டியிடப் போகிறார்கள் என்ற கேள்விதான் தற்போது பிரதானமாகிறது.

குறிப்பாக, இடைத்தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் யார் போட்டியிடுவார்கள் என்ற முடிவை பாஜக அறிவிக்கும் என இரண்டு அணிகளும் தெரிவித்துள்ளதால், அதிமுகவை பாஜகதான் வழி நடத்துகிறது என்ற பிம்பம் வலுப்பட்டுள்ளது என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மறைவையடுத்து, அந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்தார்.

அதன் பிறகு, திமுக-காங்கிரஸ் கூட்டணியில், காங்கிரஸ்தான் இடைத்தேர்தலில் போட்டியிடும் என திமுக சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பாக வேட்பாளர் யார் என்ற முடிவு எடுக்கப்படவில்லை என்றபோதும், திமுக நேரடியாகப் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டது.

ஆனால் அதிமுக-பாஜக கூட்டணியில் பெரும் குழப்பம் நிலவுகிறது. அதிமுகவில் உள்ள ஓபிஎஸ், இபிஎஸ் இரண்டு அணிகளும், தாங்கள்தான் உண்மையான அதிமுக எனக் கூறிவருகின்றனர்.

அதிமுகவின் தலைமை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் வாதங்கள் நிறைவுபெற்று, தீர்ப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

தீர்ப்பு வருவதற்குத் தாமதமானால், இரண்டு அணிகளும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்தால், சின்னம் முடக்கி வைக்கப்படும்.

இரண்டு அணிகளும் போட்டியிடத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளதால், இந்தக் குழப்பம் அதிமுக தொண்டர்களைக் கவலை கொள்ளச் செய்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக எப்படி எதிர்கொள்ளப் போகிறது என மூத்த பத்திரிகையாளர் கார்திகேயனிடம் கேட்டோம்.

''தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் வரலாற்றில் ஆளும்கட்சிதான் பெரும்பாலும் வெற்றி பெரும். மிகவும் அரிதாகத்தான் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது. சமீபத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்குப் பின் நடந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார்.

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரம் இன்றுவரை தீர்க்கப்படாத பிரச்னையாக உள்ளது. அதனால், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் திமுக-காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்துகிறார்கள். அதிமுக-பாஜக சார்பில், பாஜக போட்டியிட்டால், அது அடுத்து வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக அமைந்துவிடும்,'' என்கிறார் கார்த்திகேயன்.



பாஜக அலுவலகத்தில் நடந்த அதிமுக எடப்பாடி அணி - பாஜக தலைவர்கள் இடையிலான சந்திப்பு

அடுத்ததாக, அதிமுக அணிகளுக்கு இடையில் நிலவும் குழப்பம் குறித்துக் கேட்டபோது, இரண்டு அணிகளும் உச்சநீதிமன்ற தீர்ப்பில்தான் அதிக கவனம் செலுத்துகின்றனர் என்றும், அதனால்தான் இடைத்தேர்தலில் யார் போட்டியிடுவார்கள் என்ற முடிவை பாஜகவிடம் விட்டுவிட்டனர் என்கிறார்.

இடைத்தேர்தலில் ஆதரவு கோரி, அதிமுகவைச் சேர்ந்த இரண்டு அணியினரும், பாஜக அலுவலகத்திற்குப் படையெடுத்தனர். முதலில் இபிஎஸ் அணியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், கேபி முனுசாமி, ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் பாஜக தலைமையகம் வந்து மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் 15 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எடப்பாடி பழனிச்சாமி நேரில் வரவில்லை. தனது அணித் தலைவர்களை மட்டும் அனுப்பி வைத்தார்.

இபிஎஸ் அணியினர் சென்ற சிறிது நேரத்தில், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்கள் பாஜக அலுவலகத்திற்கு வந்தனர். ஓபிஎஸ் நேரடியாக வந்திருந்தார். ஓபிஎஸ் அணியில் வைத்தியலிங்கம், கு.பா.கிருஷ்ணன், ஜெசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டவர்கள் வந்திருந்தனர். அவர்களும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடட்டனர்.



ஆனால் இரண்டு அணியினரும், இடைத்தேர்தலில் யார் போட்டியிடுவார்கள் என்ற முடிவை பாஜகதான் வெளியிடும் என்று ஊடகத்தினரிடம் தெரிவித்தனர்.

''இந்த இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால், நாடாளுமனற தேர்தலுக்கு முன்னதாக பாஜக தனது பலத்தை காட்டும் தேர்தலாக இந்தத் தேர்தல் அமைந்துவிடும்.

பாஜக வளர்ந்துவிட்டது, உண்மையான எதிர்க்கட்சியாக உருவெடுத்துவிட்டதாக சொல்லி வரும் பாஜகவை வாக்காளர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதும் தெரிந்துவிடும்.

அதனால், பாஜக போட்டியிடுமா, அல்லது அதிமுக போட்டியிட்டால், எந்த அணியை முன்னிறுத்துவது ஆகிய விவகாரங்களில் முடிவு செய்யவேண்டியுள்ளது. ஒரு கட்டத்தில், பாஜகவின் மாநில தலைமை, தங்களின் தேசிய தலைமை முடிவு செய்யும் என்று சொல்லிவிட்டு, இந்த விவகாரத்தில் அமைதியாக இருந்துவிடவும் வாய்ப்புள்ளது,'' என்கிறார் மூத்த பத்திரிகையாளர் கார்த்திகேயன்.

பிபிசி தமிழிடம் பேசிய அதிமுகவின் இரண்டு அணிகளைச் சேர்ந்த தலைவர்களும், தங்கள் அணிதான் பலம் பொருந்திய அணி என்று தெரிவித்தனர். ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த புகழேந்தி, ஓபிஎஸ்தான் முதலில் இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ளதை அறிவித்தார் என்றும் கூட்டணி நலன் கருதி, பாஜக போட்டியிட முன்வந்தால், அதற்கும் ஆதரவு தருவதாக அறிவித்தார் என்பதால், உண்மையான அதிமுக ஓபிஎஸ் அணியில் இருப்பவர்கள்தான் என்கிறார்.

இபிஎஸ் அணியைச் சேர்ந்த வைகைச்செல்வன், ஏற்கெனவே, பாஜகவுடன் பேசி முடிவு செய்யப்பட்டபடி, அதிமுகவில் இபிஎஸ் அணிதான் போட்டியிடும் என்கிறார்.

''முடிவை அறிவிப்பது பாஜக, ஆனால் ஏற்கெனவே பாஜக தலைவர்களிடம் பேசிவிட்டோம். அவர்களும் எங்கள் அணியைச் சேர்ந்தவர் களத்தில் நிற்க வைக்கப்படுவர் என்று எங்களிடம் உறுதி கொடுத்துவிட்டார்கள். அதனால் எங்களுக்கு குழப்பம் இல்லை,'' என்கிறார்.

ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பேச்சுவார்த்தைகளில், அதிமுக தலைவர்கள் பாஜகதான் முடிவை அறிவிக்கும் என்று சொல்வதைக் கவனிக்க வேண்டும்.

கூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவு கேட்பது ஒரு நடைமுறை என்றாலும், அதிமுக என்ற பெரிய மாநிலக் கட்சி, தங்கள் கூட்டணியில் உள்ள தேசிய கட்சிதான் முடிவை அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளதால், அதிமுகவை பாஜக வழிநடத்துகிறது என்பது மேலும் தெளிவாகியுள்ளது என்கிறார் அரசியல் நோக்கர் மற்றும் மூத்த பத்திரிகையாளர் பகவான் சிங்.



ஜெயலலிதா தலைமையில் இருந்த அதிமுகவும் தற்போதுள்ள அதிமுகவும் மிகவும் வேறுபட்டது என்று குறிப்பிடும் பகவான் சிங், ''அதிமுக தலைமையைச் சந்திக்க கூட்டணி கட்சித் தலைவர்கள் பலரும் போயஸ் கார்டன் வாசலில் காத்திருந்து, வெறும் உதவியாளர்களிடம் தகவலை மட்டும் பெற்றுத் திரும்பிய சம்பவங்கள் உண்டு.

தற்போது, அதிமுகவைச் சேர்ந்த தலைவர்கள் கூட்டணிக் கட்சியிடம் பேச்சுவார்த்தை நடத்துவதோடு, முடிவை அவர்கள் அறிவிப்பார்கள் என்று கூறுகிறார்கள். பாஜக அதிமுகவை வழிநடத்துகிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?,'' என்று கேள்வியெழுப்புகிறார்.

இடைத்தேர்தலில் அதிமுகவின் இரண்டு அணிகளும் போட்டியிடுவதைத் தவிர்க்கத்தான் இருவரும் பாஜகவை நாடியுள்ளனர் என்கிறார் அவர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கும் இரண்டு அணிகளும், பாஜக போட்டியிட முன்வந்தால் எதிர்ப்புகளின்றி விட்டுக் கொடுப்பார்கள் என்கிறார் பகவான் சிங்.

''இரண்டு அணிகளும் தேர்தலைச் சந்தித்தால், சின்னம் முடங்கிவிடும். இரட்டை இலை சின்னத்திற்குத்தான் மக்கள் வாக்களிக்கிறார்கள் என்பதால், சின்னம் பற்றிய பிரச்னையைப் பெரிதுபடுத்த இரண்டு அணிகளும் விரும்பவில்லை.

இடைத்தேர்தலில் ஆளும் கட்சி ஓங்கியிருக்கும் என்பதால், பாஜக போட்டியிட விரும்பினால், இரு அணிகளும் சம்மதம் தெரிவிப்பார்கள். ஆனால் பாஜக நேரடியாக திமுகவுடன் மோதி வெல்லுமா என்பது சந்தேகம்தான். அதனால்தான் அதிமுக-பாஜக கூட்டணியில் குழப்பம் தொடர்கிறது,'' என்கிறார்.

THANKS: BBC-Tamil

நடுநிலை மற்றும் நம்பகத்தன்மையான செய்திகளுக்கு... 
STAR 'செய்திகள்'

Post a Comment

0 Comments