இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் அஹமதாபத், நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் போர்டர் - காவஸ்கர் மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 4ஆவது போட்டி சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட வண்ணம் இருக்கிறது.
அவுஸ்திரேலியா முதலாவது இன்னிங்ஸில் குவித்த 480 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடும் இந்தியா, ஷுப்மான் கில் குவித்த சதத்தின் உதவியுடன் 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 289 ஓட்டங்களைப் பெற்று சிறந்த நிலையில் இருக்கிறது.
போட்டியின் 3ஆம் நாளான சனிக்கிழமை (11) காலை தனது முதலாவது இன்னிங்ஸை விக்கெட் இழப்பின்றி 30 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இந்தியா, மொத்த எண்ணிக்கை 74 ஓட்டங்களாக இருந்தபோது அணித் தலைவர் ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை இழந்தது. அவர் 3 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 35 ஓட்டங்களைப் பெற்றார்.
தொடர்ந்து திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஷுப்மான் கில் 2ஆவது விக்கெட்டில் சேத்தேஷ்வர் புஜாராவுடன் 113 ஓட்டங்களையும் 3ஆவது விக்கெட்டில் விராத் கோஹ்லியுடன் 58 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டார்.
சேத்தேஷ்வர் புஜாரா 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
235 பந்துகளை எதிர்கொண்ட ஷுப்மான் கில் 12 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 128 ஓட்டங்களைப் பெற்றார்.
தனது 15ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஷுப்மான் கில் பெற்ற 2ஆவது சதம் இதுவாகும். அத்துடன் டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அவர் பெற்ற அதிகூடிய எண்ணிக்கையாக அது பதிவானது.
பங்களாதேஷுக்கு எதிராக கடந்த வருடம் டிசம்பர் மாதம் அவர் பெற்ற 110 ஓட்டங்களே இதற்கு முன்னர் அவரது அதிகூடிய இன்னிங்ஸ் எண்ணிக்கையாக இருந்தது.
இதேவேளை, 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விராத் கோஹ்லி 59 ஓட்டங்களுடனும் ரவிந்த்ர ஜடேஜா 16 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர். அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர். மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடும் விராத் கோஹ்லி 128 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டறிகளை அடித்துள்ளார்.
அதிசயம் நிகழ்ந்தாலன்றி இப் போட்டி பெரும்பாலும் வெற்றி தோல்வியின்றி முடிவடையும் எனவும் அந்த முடிவுடன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை இந்தியா எதிர்த்தாடத் தகுதிபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நடுநிலை மற்றும் நம்பகத்தன்மையான செய்திகளுக்கு...👇
0 Comments