எல்சல்வடோரில் கால்பந்தாட்டப்போட்டியொன்றில் இடம்பெற்ற தள்ளுமுள்ளில் சிக்குண்டு 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
எல்சல்வடோரின் தலைநகர் சான் சல்வடோரில் உள்ள கால்பந்தாட்டமைதானத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஏழு ஆண்கள் உட்பட 12 பேர் தள்ளமுள்ளில் சிக்குண்டு பலியாகியுள்ளனர் இவர்கள் அனைவரும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அலையன்சா மற்றும் சன்டா அனா அணிகளிற்கு இடையிலான போட்டியின் போதே இந்த தள்ளுமுள்ளு இடம்பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து போட்டி இடைநிறுத்தப்பட்டது.
மைதானத்திற்குள் நுழைவதற்கான நுழைவாயில் கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையில் பெருமளவு ரசிகர்கள் உள்ளே நுழைய முற்பட்டவேளை இந்த தள்ளுமுள்ளு இடம்பெற்றுள்ளது.
பெருமளவு ரசிகர்கள் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைய முயன்றார்கள் என முதலுதவி குழுவின் தொண்டர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிலர் இன்னமும் இரும்புவேலிகளிற்குள் சிக்குண்டுள்ளனர் சிலர் தப்பிமைதானத்திற்குள் ஓடிவிட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் ஆடுகளத்திற்குள் செல்வதையும் அங்கு அவர்களிற்கு சிகிச்சை வழங்கப்படுவதையும் காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.
அருகில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து அம்புலன்ஸ்களை அனுப்பியுள்ளதாக எல்சல்வடோரின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 Comments