7 பேர் காயம்; 3 பேரின் நிலை கவலைக்கிடம்
அமெரிக்காவின் வர்த்தக நிலைய கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் ஒரு சிலர் சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள டளஸ் நகரிலுள்ள அலன் எனும் பகுதியில் உள்ள குறித்த வர்த்தக நிலைய கட்டத் தொகுதிக்குள் துப்பாகியுடன் நுழைந்த துப்பாக்கிதாரி ஒருவரால் இவ்வாறு சரமாரியாக துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அக்கட்டத் தொகுதியில் இருந்த நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இச்சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதுடன், அதில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து துப்பாக்கிதாரி பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
துப்பாக்கிதாரி தனியாக செயற்பட்டதாக நம்புவதாக அந்நாட்டு பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 2 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 5 முதல் 51 வயதுடையவர்கள் என மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி ஏந்தியவர் கறுப்பு நிற உடையணிந்து ஆயுத கருவிகள் தாங்கும் உடையை அணிந்திருந்ததாகவும், துப்பாக்கிதாரி மரணமடைந்த பின், அவரது உடலுக்கு அருகில் AR-15 வகை துப்பாக்கி ஒன்றும் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments