Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

உலகக் கிண்ணம் ஒக்டோபர் 5 இல் ஆரம்பம்: இந்தியா, பாக் ஒக்டோபர் 15 இல் மோதல்...!


எதிர்வரும் ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான உத்தேச போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தயாரித்துள்ளது.

இந்த அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் (ஐசிசி) இந்திய கிரிக்கெட் சபை பகிர்ந்துகொண்டுள்ளது. அதன்பின், இச்சுற்றுப்போட்டியில் பங்குபற்றும் நாடுகளின் கருத்தை கேட்பதற்காக அந்நாடுகளுக்கு இந்த அட்டவணையை ஐசிசி அனுப்பியுள்ளது என கிரிக்இன்போ இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இந்த உத்தேச திட்டத்தின்படி, ஒக்டோபர் 5 ஆம் திகதி முதல் போட்டியில் நடப்புச் சம்பியனான இங்கிலாந்தும், கடந்த தடவை 2 ஆம் இடம்பெற்ற நியூஸிலாந்தும் அஹமதாபாத்தில் மோதவுள்ளன. இறுதிப்போட்டி இதே மைதானத்தில் நவம்பர் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்திய அணி தனது லீக் போட்டிகளை இந்தியாவின் 9 நகரங்களில் விளையாடவுள்ளது. இந்தியா ஒக்டோபர் 8 ஆம் திகதி நடைபெறும் தனது முதல் போட்டியில் அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது.

இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி அஹமதாபாத்தில் ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

பாகிஸ்தான் அணி இந்தியாவை எதிர்கொள்வற்கு முன்னர், தகுதிகாண் சுற்றிலிருந்து தெரிவாகும் இரு அணிகளுடன் ஒக்டோபர், 6, 12 ஆம் திகதிகளில் மோதவுள்ளது. 5 நகரங்களில் பாகிஸ்தானின் லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன.

நவம்பர் 15, 16 ஆம் திகதிகளில் அரை இறுதிப் போட்டிகள் நடைபெற வாய்ப்புள்ளது. இப்போட்டிகளுக்கான நகரங்கள் குறிப்பிடப்படவில்லை.

இலங்கை அணி உலகக் கிண்ண சுற்றுப்போட்டிக்குத் தெரிவாகுவதற்கு, ஸிம்பாப்வேயில் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் நடைபெறவுள்ள தகுதிகாண் சுற்றுப்போட்டியில் இறுதிப் போட்டிக்கு தெரிவாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments